மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மோகினி விமர்சனம்

மோகினி விமர்சனம்

வழக்கமான பழிவாங்கும் பேய் பற்றிய கதைதான் மோகினி திரைப்படம்.

பிரபல செஃப்பான வைஷ்ணவி(த்ரிஷா) சென்னையில் வசித்து வருகிறார். அவர் யூடியூப் வீடியோ மூலம் பிரபலமாகிறார். அவரது தோழி ஒருவர், என் காதலன் (யோகிபாபு) என்னை விட்டுப் பிரிந்து லண்டன் போவதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தோழியின் காதலனை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.

அதற்கு,”உன் தோழியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டுமென்றால், நீ என்னுடன் லண்டன் வந்து சமையல் பற்றி கற்றுத்தர வேண்டும்” என்று யோகி பாபு கோரிக்கை வைக்கிறார். தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சாமிநாதன் லண்டன் செல்கின்றனர். லண்டனில் த்ரிஷாவின் நண்பர் வீடான மதுமிதா-கணேஷ் தம்பதி வீட்டில் தங்குகிறார்கள்.

நாயகன் ஜாக்கி பக்னானி, த்ரிஷா வேலை செய்யும் ஓட்டலில் சந்தித்து அவருடன் அறிமுகமாகிறார். பின் என்ன அவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஒரு பக்கம் டூயட் ஒரு பக்கம் நண்பர்கள் என சந்தோஷமாக இருக்கும் த்ரிஷா, ஒரு நாள் நண்பர்களோடு படகு சவாரி செய்கிறார். அங்கு மதுமிதாவின் செயின் கழன்று விழ, அதை எடுக்க முயற்சி செய்யும் போது சங்கு ஒன்று கிடைக்கிறது.

அந்த சங்கைப் பற்றியான சிறப்பை சொல்கிறார் த்ரிஷா. அந்த சங்கை அவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் பூஜை ரூமில் வைத்து, பூஜை செய்த பின் ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேயாக மோகினி(த்ரிஷா) புகுந்து, அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்ற சில கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. யார் இந்த பேய், எதற்காக சென்னையில் இருந்து லண்டனுக்கு த்ரிஷாவை வரவழைத்துப் பழிவாங்குகிறது என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் அமைத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பு முதிர்ச்சி தெரிகிறது. வைஷ்ணவி, மோகினி வேறுபாடு காட்டியுள்ளார். பேயை பார்த்தால் பயம் வரும். ஆனால் மோகினியை பார்த்தால் ரசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் த்ரிஷா. படத்தில் என்னென்ன நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே ஆடியன்ஸ் உணர்ந்தாலும் அதை சுவாரசியத்தோடு சொல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.

என்ன சொல்ல வருகிறோம் என்பதில் இயக்குநர் குழம்பி இருக்கிறாரா? இல்லை நம்மை குழப்புவதற்காக ஏதேதோ செய்திருக்கிறாரா என்ற குழப்பம் படம் முழுவதுமே இருக்கிறது. அறிவியல் ரீதியாக ஆன்மீகம் பற்றி சொல்ல முயன்ற இயக்குநர் ஆன்மீகத்திடம் தோற்றுப் போகிறார். வழக்கம் போல கிரகணம் பற்றிய காட்சிகளை இன்னும் எத்தனை பேய் படங்களுக்கு வைப்பார்கள் என்று தெரியவில்லை.

இதில் அபத்தமான காட்சி என்னவென்றால் பூஜை அறையிலேயே பேய் த்ரிஷா உடலுக்கு போவதுதான். பின் அந்த கடவுள்களை வைத்தே பேயை ஓட்டுவது என்பது முரண். ஒரு காட்சியில் ஈழத்தமிழில் பேசும் மோகினி(த்ரிஷா) அம்மா, மற்றொரு காட்சியில் வழக்கமான தமிழில் பேசுகிறார். இறுதியில் அவர்கள் மலையாள குடும்பம்.

ஒரு காட்சியில் லண்டனில் தண்ணீரில் மூழ்குகிறார் நாயகன். அதன் அடுத்த காட்சியில் இந்தியாவில் மோகினி அம்மா தண்ணீரில் இருந்து அம்மன் சிலையோடு எழுந்திருக்கிறார். இது போன்று படத்தொகுப்பில் கவனம் செலுத்திய இயக்குநர் கதையில் கொஞ்சமாவது கவனம் செலுத்தி இருக்கலாம். க்ளைமேக்ஸ் பாடல், குஷ்புவின் “தாலி வரம் கேட்டு வரேன்” என்ற பாடலை நினைவூட்டுகிறது.

யோகி பாபு படமுழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார் நகைச்சுவை என்று. இவரோடு சேர்ந்து சுவாமிநாதன் மதுமிதா மற்றும் கணேஷ் காமெடிகளும் எதிர்பார்த்த அளவிற்கு எடுபடவில்லை. அதிலும் மதுமிதா, கணேஷ் கொடுத்த காசுக்கு மேல் நடித்திருக்கிறார்கள். சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் தங்கள் கதாபாத்திரங்களோடு பொருந்திப் போகிறார்கள். நாயகன் ஜாக்கி பக்னானி இரண்டு பாடல்களுக்கு டூயட் ஆடியிருக்கிறார்.

இது ஹாரர் படம் என்பதை ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவுக்கு நினைவூட்டி இருந்திருக்கலாம். அருள்தேவ்வின் பின்னணி இசையில் கவனம் எடுத்திருந்திருக்கலாம். விவேக் மெர்வீனின் இசையில் இடம் பெற்ற ஒரு பாடல் கண்டிப்பாக கல்யாண கேசெட்டுகளில் இடம் பெறும். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.

படமே லாஜிக் மிஸ்டேக்காக இருந்தாலும், இந்தியாவில் இருந்து லண்டன் போய் பழிவாங்கும் கதைக் களம் அமைத்து அதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் இயக்குநர், டி.என்.ஏ பற்றி இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்திருந்தால் மோகினி த்ரிஷாவின் திரை வாழ்க்கைக்கு ஒரு மைல்கல்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018