மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

நீர் மேலாண்மை: கர்நாடகாவிடம் டியூஷன் கற்க வேண்டும்!

நீர் மேலாண்மை: கர்நாடகாவிடம் டியூஷன் கற்க வேண்டும்!

கடந்த ஜூலை 19ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர், கடைமடை பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே கடலில் கலந்துகொண்டிருப்பது டெல்டா விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் குறிப்பிட்டு, “நீர் மேலாண்மையில் கர்நாடக மாநிலத்திடம் தமிழ்நாடு டியூஷன் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார் காங்கிரஸின் அகில இந்திய செயலாளரான செல்லகுமார்.

திருவாரூரில் நேற்று காமராஜர் டிரஸ்ட் சார்பில் காமராஜரைப் பற்றி பேச்சுப் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த டாக்டர் செல்லகுமார், “இப்போது வந்திருக்கும் தண்ணீர் தமிழகத்தில் நடந்த போராட்டங்களாலோ, கர்நாடக அரசு முடிவெடுத்தோ, மத்திய அரசின் தலையீட்டிலோ அல்ல. இயற்கையும் கடவுளும் தமிழ்நாட்டு மக்களின் கண்ணீர் துடைப்பதற்காகக் கொடுத்த கொடை இது. ஆனால், தானாக வந்த காவிரி நீரை நாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆயிரக்கணக்கான கனஅடி தண்ணீர் கடலில் கலந்துகொண்டிருக்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் இந்தத் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது” என்றவர், தான் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இருந்த காலத்தை சுட்டிக்காட்டித் தொடர்ந்தார்.

“கர்நாடகத்தைச் சுற்றி வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். பெங்களூருவிலும் வறட்சி இருக்கிறது. மைசூரிலும் வறட்சி இருக்கிறது. கர்நாடகம் முழுமையான செழிப்பான மாநிலம் அல்ல.

ஆனால், காவிரியில் பெருக்கு ஏற்படும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீரியல் நிபுணர்கள், புவியியல் வல்லுநர்களோடு ஆலோசித்து அம்மாநில அரசுகள் நீரைத் தேக்கி வைப்பதற்கான தகவு அமைப்புகளை ஏற்படுத்தி வைத்துள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, நீர் இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கர்நாடகத்தின் நீர் மேலாண்மையில் பத்தில் ஒரு பகுதி கூட நம்மிடம் இல்லை. உண்மையிலேயே இதுபற்றி நாம் கர்நாடகாவிடம் டியூஷன் கற்றுக்கொள்ள வேண்டும்.

இருக்கிற தண்ணீரை வைத்து விதவிதமான பயிர்களை பாசனம் செய்யும் வேளாண் அறிவு மிக்கவர்கள் தமிழக விவசாயிகள். ஆனால், நம் அரசுதான் அவர்களைத் தண்ணீரே வராமல் கடந்த சில ஆண்டுகள் தவிக்கவிட்டன. இப்போது இயற்கையாக அள்ளிக் கொடுத்த தண்ணீரையும் கொஞ்சம்கூட உறுத்தல் இன்றி கடலுக்குத் தாரை வார்க்கிறோம். காவிரி நீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018