மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

கூவம் ஆக்கிரமிப்புகள்: மாநகராட்சி அறிவிப்பு!

கூவம் ஆக்கிரமிப்புகள்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை விரைவில் அகற்றப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கூவம், அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பு ஏற்படுவதற்கு ஏரி குளம் ஆற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என இந்திய கணக்காய்வு தணிக்கை துறை மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி, நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் அகற்றவதில் மும்முரமாக இறங்கியுள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி.

அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

“கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் போன்ற நீர்வழித் தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் எனக் கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT), ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி (CRRT Project) மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் உள்ளன எனக் கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக் கால்வாய்களில், 26,837 ஆக்கிரமிப்பு குடும்பங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018