மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!

புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!

சிவா

1970களில் கோடாலி, வெண்புறா, வெட்டுப்புலி ஆகிய மூன்று தீப்பெட்டிகள் பிரபலம். அதில், வெட்டுப்புலி தான் நன்றாக இருக்கும் என நம்பினார்கள். காரணம், அதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அந்தப் பெட்டியில் பதிவு செய்திருந்தார்கள்.

கையில் அரிவாளுடன் ஒருவர் பாய்ந்துவரும் சிறுத்தைப் புலியை நோக்கி ஓட, அவருக்கருகில் நாய் ஒன்றும் ஓடிவருவதாக அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். தனது நாயைத் தாக்கக் காட்டிலிருந்து வெளிவந்த சிறுத்தைப் புலி ஒன்று முயற்சிக்கும்போது அதனை எதிர்த்துத் தாக்கிக் கொன்றதால், அந்த வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தப் பெட்டியில் அச்சடிக்கப்பட்டதாகச் சொல்வார்கள். காட்டில் உணவு கிடைக்காதபோது மனிதர்கள் வாழும் பகுதியில் நடமாடும் வளர்ப்பு மிருகங்களை வேட்டையாடச் சிறுத்தைப் புலிகள் முயற்சிக்கும். வளர்ப்பு மிருகங்களைப் பாதுகாக்க அதனுடன் தனித்து நின்று போராடிக் கொல்வது வீரமாகவும் கருதப்படும். அதில் இரு தரப்பிலும் உயிர் பிரிவது உண்டு.

இந்தச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து எழுத்தாளர் தமிழ்மகன் தனது வெட்டுப்புலி எனும் நாவலை எழுதியிருப்பார். கதையின் நாயகன் சிறுத்தைப் புலியைக் கொன்ற ‘சிறுத்தை சின்னாரெட்டியை’ தனது மூதாதையராக நினைத்து, தனது வரலாற்றைத் தேடிச் செல்வதாக கதை நகரும்.

கொசஸ்தலை ஆற்றின் ஓரம் இருந்த ஜகநாதபுரம் எனும் கிராமத்தில், விவசாயத்தின்போது தனது நாயைத் தாக்க வந்த சிறுத்தைப் புலியைத் தனியே போராடிக் கொன்றதால் அவருக்குச் சிறுத்தை சின்னாரெட்டி என்று பெயர் வந்தது. இந்தப் பரபரப்பான சம்பவத்தை அறிந்த விம்கோ நிறுவனம் தனது தீப்பெட்டிக்குச் சித்திரமாக வரைந்து தன்னையும் சேர்த்து விளம்பரப்படுத்திக் கொண்டது.

கதை இந்தச் சம்பவத்தை ஒரு தொடக்கமாகக் கொண்டிருந்தாலும், வெட்டுப்புலி நாவல் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிகம் பேசும். திராவிட இயக்கத்தின் தோற்றம், மக்கள் மீது செலுத்திய ஆதிக்கம், பாதிப்பு, அதன் வெற்றி, தளர்வு, பயணம் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டே அதன் கதை நகரும். யதேச்சையாக வெட்டுப்புலி சம்பவமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தவை. எனவே, தமிழ்மகனுக்குப் பல இடங்களில் இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தீப்பெட்டியில் வரைந்து, அதற்கு ஒரு நாவல் எழுதி, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதற்கு ஒரு கட்டுரையும் எழுதுவது தேவையா, புலியைக் கொல்வது வீரமா என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. வரலாற்றின் ஆடி வழியே பார்க்கும்போது, பல்லவர் காலம் முதலே விலங்குகள் மீதான வெற்றியை நினைவுச் சின்னங்களின் மூலம் பறைசாற்றிக்கொண்டனர். பல்லவர் காலத்து நடுகற்களில் புலி குத்தி வீரர்கள் என்ற குறிப்பும், புலிகுத்தி பட்டான் கல் என்ற நினைவுச் சின்னம் இருந்ததற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

விளைநிலத்துக்குள் நுழையும் காட்டு மிருகங்களைக் கொல்லும் அல்லது கொல்ல முயற்சிக்கும் வீரர்களுக்கு இந்த மாதிரி நினைவுப் பெயர்களும், நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பெயர்பெற்றவர்கள் அனைவருமே புலியை வென்றவர்கள் அல்ல. பலர் புலியினால் இறந்தும் இருக்கிறார்கள். உயிருடன் மீள்பவர்களுக்கு பட்டப் பெயரும், இறந்துவிட்டால் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி உருவாக்கப்பட்ட கற்கள்தான் காலப்போக்கில் குலதெய்வங்களாக மாறியிருக்கின்றன.

இப்படிப் பல கதைகள் இருப்பதுபோல, சின்னாரெட்டி சம்பவத்திலும் பல கதைகள் உண்டு. சிறுத்தைப் புலியைத் தாக்கியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது என்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாமல் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அவரே மருத்துவர் என்பதால், தனக்குத்தானே சிகிச்சை செய்துகொண்டார் என்றும் கதை குறிப்பிடுகிறது. தமிழ்மகன் அந்நாவலில், சின்னாரெட்டி புலியைத் தாக்கியதால் அது இறக்கவில்லை; வேறு யாரோ அதனைத் துப்பாக்கியால் சுட்டார்கள் என்றும் குறிப்பிட்டு புலியின் மரணத்தையே மர்மமாக்கியிருப்பார். இவற்றையெல்லாம் தாண்டி வெட்டுப்புலியில் தமிழ்மகன் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு பயணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

சின்னாரெட்டி சிறுத்தைப் புலியைக் கொன்ற சம்பவம் ரெட்ஹில்ஸ் (செங்குன்றம்) பகுதிக்கு அருகில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. கதைப்படி, கொசஸ்தலை முதல் ஆந்திரா வரையிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து அந்தச் சிறுத்தைப் புலி தப்பியிருக்க வேண்டும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக கொசஸ்தலை முதல் ஆந்திரா வரை மிகப் பெரிய வனப்பகுதி ஒரு காலத்தில் இருந்தது. அந்த வனப் பகுதியை அழித்தே இன்றைய தடா (ஸ்ரீசிட்டி), தேர்வாய் கண்டிகை ஆகிய பெரும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காடும் அழிந்து, அதுசார்ந்த உயிரினங்களும் அழிந்துபோகும்போது மிருக இனங்கள் மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைவது இயற்கையானது.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய ரெட்ஹில்ஸ் பகுதியில் சிறுத்தைப் புலி இருந்ததாகச் சொல்லப்படுவது போலவே, வேலூர் ஜவ்வாது மலைப் பகுதியிலும் புலிகள் வாழ்ந்ததாக பிரிட்டிஷ் ஆட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் சொல்கின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டில்தான் நகரமயமாக்கலின் மூலம் வன ஒழித்தழிப்பு எனும் வேலையை மனித இனம் மிகத் தீவிரமாகச் செய்திருப்பது தெரிகிறது. தஞ்சாவூர் பிரதாப சிம்மன் எனும் மன்னன் ஊருக்குள் வரும் புலிகளை வேட்டையாடியதாகச் சொல்லப்படுவதிலிருந்து, தஞ்சாவூர் வரை எங்கும் காணப்பட்ட புலிகள் இப்போது உயிரியல் பூங்காக்களில் மட்டும் காணக் கிடைப்பதை உணர முடிகிறது. வேலூர் விரிஞ்சிபுரம் கோயில்களில் உள்ள விஜயநகர, நாயக்கர் கால மண்டபத் தூண்களில் குதிரை மீதமர்ந்து புலியைக் குத்தும் வீரர்களின் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறதன் மூலம் மனிதனுக்கும் புலிக்கும் இடையேயான போட்டி பல நூறு வருடங்களாக நடைபெறுவதை அறியலாம்.

பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை புலி, சிறுத்தைப் புலி ஆகியவற்றுடன் மனித இனம் மோதிக்கொண்டே இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் புலி எனும் சொல் சிறுத்தைப் புலியையும், வரிப்புலியையும் குறிக்கும். பெரும்பாலான காடுகளை அழித்துப் பல உயிர்களை அருகிவரும் உயிர்களாகப் பட்டியலிட்ட பின்னும்கூட இரு இனத்துக்கிடையேயான மோதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

கிருஷ்ணகிரியில் உள்ள மேலுகொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்கிற 62 வயது விவசாயி சிறுத்தைப் புலி ஒன்றை அரிவாளால் வெட்டிக்கொன்றது தமிழ்நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த நிகழ்வாக இருந்தது. மனிதர்கள் விலங்கிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். விலங்குகளுடன் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். நாகரிகம் தோன்றிய பிறகு அவற்றிலிருந்து பிரிந்து வந்து கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கியிருக்கிறோம் என்ற வரலாறு தெரியும். ஆனாலும், ஒரு சிறுத்தைப் புலியை விவசாயி கொல்லும்போது, அதை நோக்கி நம்மை இழுத்துச் செல்வது எது என்று தெரிவதில்லை.

விலங்குகளைக் கொல்வதும், அவற்றைக் கட்டுப்படுத்துவதும் வீரம், மனித சக்தி என்று நம் மனதின் ஆழத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டில் காளை மாடுகளை அடக்குவதை எடுத்துக்கொள்ளலாம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பெருங்கூட்டமாக வாழ்ந்த மனித இனங்கள் பலவற்றில் இப்படிப்பட்ட தடயங்களைக் காண முடியும். எந்த மிருகம் அதிகமாக இருக்கிறதோ, அது இதுபோன்ற போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படுவது மனிதர்கள் உருவாக்கிய கலாச்சாரத்தின் அங்கமாகவே மாறிவிட்டது. இவற்றைப் பெருமையாக எடுத்துக்கொள்வதும் காலப்போக்கில் ஆழ்மனதில் தங்கிவிட்டன.

1500 வருடங்களுக்கும் மேலாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மோதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வனப்பகுதியின் குறிப்பிட்ட இடத்தைத் தன் சிறுநீர் மூலம் எல்லை பிரித்து வாழ்ந்துவரும் வன விலங்குகளுக்கிடையில் உணவு - உறவு ஆகிய இரண்டை அடிப்படையாக வைத்து மட்டுமே மோதல் நிகழ்கிறது. ஆனால், அவை மனிதர்களுடன் நடத்தும் மோதல் அவற்றின் இன அழிப்புக்கு இட்டுச்செல்கிறது.

இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு எந்த மாதிரியான முன்னெடுப்புகளின் மூலம் இயற்கையுடன் இணைந்து வாழ மனித இனம் முயற்சி செய்யப் போகிறது என்பதைத் தீர்மானிக்காவிட்டால், இன்றைய மனிதர்கள்; நாளைய புலிகள்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018