மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: ஆலயத்துள் உச்சரிக்க வேண்டிய புதிய மந்திரம்!

சிறப்புக் கட்டுரை: ஆலயத்துள் உச்சரிக்க வேண்டிய புதிய மந்திரம்!

அ.குமரேசன்

கடவுளைப் படைத்தவர்கள் மனிதர்கள் என்பது பொதுவான பகுத்தறிவு. மனிதர்களிலும் ஆண்கள்தான் கடவுளைப் படைத்தார்கள் என்பது குறிப்பான மெய்யறிவு. "இறைவன் ஒருவன் இருக்கின்றான்" என்று அறிவித்தது முதல், "மலர்மிசை ஏகினான்" என்று தெரிவிப்பது வழியாக, "எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான்" என்று ஒப்படைப்பது வரையில் உலகம் முழுவதும் ஆகப் பெரும்பாலான மதங்களில் கடவுள் ஓர் ஆணாகவே சித்திரிக்கப்படுவதே இதற்கு ஆதாரம். இவ்வாறு கடவுளையே ஆணாக வரித்துக்கொண்டதன் தொடர்ச்சியாகத்தான் வழிபடும் ஆலயங்கள் முதல், வழிகாட்டும் மதபீடங்கள் வரையில் ஆண்களின் ஆதிக்கமாகவே இருக்கிறது. இவற்றின் நிர்வாகங்களில் மட்டுமல்ல; இவற்றிடம் ஆறுதல் நாடி வருகிற பக்தர்களிடையேயும் பாலினப் பாகுபாடு ஒரு மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இங்கெல்லாம் பெண், ஆணுக்கு இணையல்ல என ஓரங்கட்டப்பட்டதையும், தீட்டு எனத் தள்ளிவைக்கப்பட்டதையும் நியாயப்படுத்தி ஒரு பொதுப் புத்தியாக ஏற்க வைக்க எத்தனையோ கதைகள், என்னென்னவோ விளக்கங்கள். இதன் வெற்றி எங்கே இருக்கிறது என்றால் பெண்களே இந்தப் பாகுபாட்டிற்கு உடன்பட்டுப் போக வைத்ததில் இருக்கிறது.

இல்லையென்றால், சபரிமலை கோயிலுக்கு இருமுடி கட்டி யாத்திரை வரவும், ஆண்டுக்கொன்றாய் பதினெட்டுப் படிகள் ஏறவும், “சாமியே சரணம் ஐயப்பா” என்று சன்னிதானத்தில் மனமுருகி நிற்கவும் ஆண்களுக்கு நிகராக உரிமை வேண்டும் எனக் கோரும் வழக்கில், ஐயப்பனை நம்புகிற பெண்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா? குறிப்பாக, பூப்படையாத நிலையாகக் கருதப்படும் 10 வயது முதல், மாதவிலக்கு நின்று விட்ட நிலையாகக் கருதப்படும் 50 வயது வரையில் உள்ள பெண்கள் களமிறங்கியிருக்க மாட்டார்களா?

மறைகள் சாற்றும் பாகுபாடு

இந்தப் பாகுபாடு வேதத்திலேயே இருக்கிறது, ஆகமத்தில் இருக்கிறது, மார்க்க மறையில் இருக்கிறது, ஜெபக் கதைகளில் இருக்கிறது என்று ஒவ்வொரு மதத்தின் அடிப்படை அற நூல்களிலிருந்து ஆதாரம் காட்டப்படுகிறது. “பெண்களுக்கு எங்கள் மதத்தில் எந்தப் பாகுபாடும் இல்லை” என்று வாதிட வருகிறவர்களிடம், “அப்படியானால் உங்கள் மதத்தின் உயர் நிலைகளில் பெண்கள் இல்லையே ஏன்?” என்று கேட்டால் பதில் வருவதில்லை. இந்து மதத்தில் பெண் தெய்வங்கள் உண்டு. கல்விக்கும் செல்வத்திற்கும் வீரத்திற்குமான தெய்வங்களான கலைமகள், திருமகள், மலைமகள் வீற்றிருக்கும் படங்கள் இல்லாத இந்துக் குடும்பங்களின் வீடு ஏது? ஆனால், அவர்களை வழிபடுவதற்கான கோயில்களிலேயேகூட, அவர்களுக்குப் பூசை செய்வதற்குத் தகுதி பெற்ற அர்ச்சகர்களாகப் பெண்கள் கிடையாது.

நபிகளது வரலாறுகளைத் தகப்பனிடம் கேட்டறியும் சிறுமி, “இத்தனை நபிகளில் ஏன் ஒரு பெண் நபிகூட இல்லை” என்று கேட்பதாகக் கவிதை எழுதிய எச்.ஜி. ரசூல் அவரது மத ஜமாத் முடிவுப்படி ஊர் விலக்கம் செய்யப்பட்டார். நபியாகப் பெண் ஏன் இருந்ததில்லை, ஏன் இருக்கக் கூடாது என்று விளக்கமளிக்க யாரும் முன்வரவில்லை. நபிகள் பற்றி ரசூல் கேட்டதை அப்படியே வாடிகன் திருச்சபைத் தலைமையாகிய போப்புகள் பற்றிக் கேட்பதாகவும் மறுவாசிப்பு செய்யலாம். மற்ற மதங்களுக்கும் விரிவுபடுத்தலாம்.

ஆங்காங்கே சில மடங்கள், அவற்றின் தலைமையாசனங்களில் பெண் சாமியார்கள் என்று இருப்பதைப் பார்க்கிறோம். ஆண் சாமியார்களுக்கு இணையாக இவர்களுக்கும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அருட்பெருமைக் கதைகள் பரப்பப்படுகின்றன, அதிகார மையங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும், அவர்கள் மகிமைமிகு அம்மாக்களாக வலம் வர முடிகிறதேயல்லாமல் சமயத் தலைமையாக அறியப்படுவதில்லை.

சபரிமலையும் பெண்களும்

இதன் ஒரு பிரதிபலிப்புதான் சபரிமலை கோயிலில் பெண்களுக்கு விதிக்கப்படும் தடை. கேரளத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆண் பக்தர்களும் சில ஆயிரம் (10 வயதை அடையாத, 50 வயதைத் தாண்டிய) பெண் பக்தர்களும் வருகிற புகழ்பெற்ற கோயில் இது.

மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரளத்தின் பட்டணம்திட்டா மாவட்டத்தில். பெரியாறு புலிக் காட்டுப்பகுதியில் அமைந்திருப்பது ஐயப்பன் கோயில். அத்தனை லட்சம் பேர் வருகிற பகுதியில், போதுமான கழிப்பறை வசதிகள் செய்யப்படாத நிலையில் ஏற்படுகிற நாற்றம், சுகாதாரக் கேடு பற்றிய புகார்கள் பக்தர்களிடமிருந்தே வந்திருக்கின்றன. தற்போது அந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆகம முறைப்படியான மற்ற பல இந்துக் கடவுள்களின் கோயில்களில், கருவறை தவிர்த்து சன்னிதானத்திற்குள் பெண்கள் வரவும் வழிபடவும் தடை இல்லை. அதேபோல் மற்ற ஐயப்பன் கோயில்களிலும் எந்த வயதுப் பெண்ணானாலும் தடை இல்லை. சபரிமலைக் கோயிலில் மட்டும்தான் பாரம்பரியமாக இந்தத் தடை.

ஷனி கோயில் தடை

மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள 350 ஆண்டுக்கால ஷனி ஷிஞ்ஞாபுர் (சனி பகவான்?) என்ற கோயிலிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 2016இல் தடையை மீறிக் கோயிலுக்குள் ஒரு 35 வயதுப் பெண் நுழைந்து வழிபட்டார். அதையறிந்த கோயில் நிர்வாகம் புனிதத்தலம் தீட்டுப்பட்டதாகக் கூறி கோயில் வளாகத்தைக் கழுவித் தூய்மைப்படுத்தியது. “ஷனிக்குப் பெண்களைப் பிடிக்காது” என்று ஆலய நிர்வாகிகள் கூறினார்களாம். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ‘பூமாதா பிரிகேட்’ (அன்னை பூமி படைவீரர்கள்) என்ற பெண்ணுரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தக் கோயிலில் நுழையப்போவதாக அறிவித்து புனே நகரிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டனர். ஆங்காங்கே தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்களை போலீஸார் தடுத்துக் காவலில் வைத்தனர்.

“கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது அவர்களுடைய பாதுகாப்புக்காகத்தான். ஷனி ஒரு கதிர்வீச்சை வெளியிடுகிறார், அது பெண்களுக்கு நல்லதில்லை, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ள சிசு பாதிக்கப்பட்டுவிடும்” என்று நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதை ஏற்க மறுத்த அமைப்பினர் பின்னர் இந்தப் பிரச்சினையை மும்பை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றனர். நீதிமன்றம் பெண்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததோடு, கோயிலில் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கும் ஆணையிட்டது. கோயில் நிர்வாகமோ ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தது. கோயிலின் உள் சன்னிதானத்தில் இனிமேல் ஆண்களுக்கும் அனுமதியில்லை என்று அறிவித்தது.

மும்பை நகரில் 300 ஆண்டுகளாக ஹாஜி அலி என்ற மசூதி உள்ளது. 2011 வரையில் இங்கு பெண்களும் தொழுகை நடத்திவந்தார்கள். திடீரென நிர்வாகம், பெண்கள் மசூதிக்குள் வருவது இஸ்லாமிய நெறிகளின்படி ஒரு பாவச் செயல் என்று கூறித் தடை விதித்துவிட்டது. பாரத முஸ்லிம் மகளிர் சங்கம் இந்தத் தடையை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது.

நீதிமன்றத்தில் சபரிமலை சர்ச்சை

சபரிமலை கோயில் நிர்வாகத் தடையை நீக்கி ஆணையிடக் கோரி இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கத்தினரும் ஐந்து பெண் வழக்குரைஞர்களும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வயது வேறுபாடின்றி எல்லாப் பெண்களும் சபரிமலைக் கோயிலில் அனுமதிக்கிற தீர்ப்பை எழுதக் கோரியுள்ளனர். ‘ஹேப்பி டு ப்ளீட்’ (மாதவிடாயில் மகிழ்ச்சி கொள்கிறோம்) என்ற புதிய அமைப்பும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு, “மாதவிடாய்க்காகப் பெண்களை ஒதுக்கிவைப்பதைச் சமுதாயம் தொடரத்தான் வேண்டுமா” என்று கேட்டுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக் கட்டத்தில் நீதிபதிகள் தெரிவிக்கிற கருத்துகள் போராடுகிறவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றன. இதன் நியாயமான முடிவாக எழுதப்படும் இறுதித் தீர்ப்பு மற்ற கோயில்களிலும், இதர மதங்களின் வழிபாட்டுத்தலங்களிலும் தொடர்கிற பாலினப் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பாலின சமத்துவப் போராளிகள், மனித உரிமைக் களச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பு,

இதற்கு ஒரு முன்னோடியாக, தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்து அய்யனார் கோயிலின் ஆண் பூசாரி இறந்த பிறகு பூசைகளை மேற்கொண்டார் அவருடைய மகள். பெண் பூசை செய்வது கோயிலைத் தீட்டுப்படுத்திவிடும் என்று கூறி கோயில் நிர்வாகிகளும் ஊரின் பெரிய மனிதர்களும் தடை போட்டனர். அந்தப் பெண் உயர்நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறினார். தடை செல்லாது என்று தீர்ப்பளித்து, அவர் பூசாரியாகப் பணிகளைத் தொடர அனுமதிக்குமாறு ஆணையிட்டார் நீதிபதி சந்துரு. அது செயல்பாட்டுக்கும் வந்தது.

மகளிர் விலக்கு

இப்படி எளிய கோயில்களில் மாற்றங்கள் சாத்தியமாகிறபோது, மற்ற பெரிய ஆலயங்களிலும் சாத்தியமாகியிருக்கிறபோது, சபரிமலை உள்ளிட்ட சில பெரிய தேவஸ்தானங்கள் மட்டும் மாற மறுக்கின்றன. மாற்றத்தை மறுப்பதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் சுற்றிச் சுற்றி அவர்கள் சொல்வது ஒரே காரணம்தான். பெண்கள் உடல் புனிதமற்றது. ஏன் புனிதமற்றது என்றால், அது தீட்டுப்படுவது. ஏன் தீட்டுப்படுகிறது என்றால் பெண்களுக்கு மாதாமாதம் விடாய்க் கழிவு வெளியேறுகிறது. மாதவிலக்கென மாதரை விலக்கும் விதியை நியாயப்படுத்த வேத நூல்களையும் புராணங்களையும் இன்ன பிற மறை நூல்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.

இங்கே விவாதிக்கப்பட வேண்டியது மறை நூல்களில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதல்ல. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் அது நியாயமா இல்லையா என்பதுதான். பாரம்பரியமாகத் தடை தொடர்ந்து இருந்து வருகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. இருபத்தோராம் நூற்றாண்டில் அந்தப் பழக்கம் தொடர்ந்து இருக்கலாமா என்பதே கேள்வி.

மாதவிடாய்க் கழிவு என்பது என்ன?

எளிமையாகப் புரிந்துகொள்வதென்றால், கரு உருவாவதற்குப் பெண் உடல் தயாராகிறது. கருமுட்டைகள் உருவாகின்றன. அந்த நாட்களில் ஆணுடன் உறவு நிகழ்கிறபோது, ஆணின் விந்து ஏந்தி வருகிற விந்தணுக்கள் முட்டைகளை நோக்கிப் பாய்கின்றன. பல்லாயிரம் அணுக்களில் ஏதோவொன்று, பல்லாயிரம் முட்டைகளில் ஏதோவொன்றைத் துளைத்துச் செல்கிறது. கரு பரிணமிக்கிறது. பெண்ணின் கருப்பைக்குள் குடியேறி சிசுவாகி, குழந்தையாக வளர்ந்து வெளி உலகத்துக்கு வருகிறது.

இதுவே புனிதத் திரவம்

கரு உருவானதற்குப் பிறகு பெண்ணுடலில் கருமுட்டைகள் உற்பத்தி நின்று போகிறது. அதற்கு முன், ஒவ்வொரு மாதமும் சேர்கிற கருமுட்டைகள் வெளியேற்றப்படுகின்றன. கருவாக மாறாத கருமுட்டைகளை ஏந்தி வெளியே வருகிற திரவம்தான் விடாய்க் கழிவு. இதிலே புனிதக் கேடு எங்கேயிருந்து வருகிறது? சும்மா ஒரு வாதத்திற்காகச் சொல்வதானால், உடலுக்குள் கருமுட்டை - விந்தணுச் சேர்க்கை நடைபெறாமல் வெளியேறுவதால் இதுதான் “மாசுபடாத” திரவம். சும்மா இன்னொரு வாதத்திற்காகச் சொல்வதானால், வீட்டில் திருமணமாகாமல் இருக்கும் பெண்ணுக்கு ஏதேனும் நோய்த் தாக்குதல் காரணமாகக்கூட ஒரு மாதம் விடாய் நீர் வெளியேறவில்லை என்றால், ஏதோ தப்புத்தண்டா நடந்துவிட்டதாகப் பெற்றோர் நெஞ்சம் பதறிவிடும். அந்தப் பெண்ணின் “தூய்மை” கெடவில்லை என்பதற்கு இயற்கையான சாட்சியமாகிற விடாய்க் கழிவுதான் புனிதமான திரவம்!

“மாசுபடாத”, “தூய்மை கெடாத” திரவம் உதிரத்தோடு கலந்து வெளியேறுகிற நாட்கள் எப்படிப் புனிதமற்றதாக முடியும்? அந்தப் பெண்கள் எப்படிப் புனிதம் இழந்தவர்களாவார்கள்?

ஆதிச் சமுதாயத்தில், இந்த விடாய் நீர், குலப் பெருக்கத்துக்கான உயிர் நீராகவே மதிக்கப்பட்டிருக்கிறது. மரத்தில் அதனைப் பூசி வைப்பார்கள். அது உலர்ந்துபோய் செந்நிறத் தூளாக மரத்தண்டில் படிந்திருக்கும். அந்தத் தூளை முகத்திலும் உடலிலும் எடுத்து அப்பிக்கொள்வார்கள் – தீய சக்திகள் நெருங்கக் கூடாது என்பதற்காகவும், சண்டை உள்ளிட்ட முயற்சிகளில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காகவும். இந்தப் பழக்கம்தான் நெற்றியில் சிவப்புத் திலகமிடும் சம்பிரதாயமாக மாறியது என்றும் மானுடவியலாளர்கள் ஒரு ஏற்கத்தக்க யூகத்தை முன்வைக்கிறார்கள்.

உடல் சார்ந்த இயற்கை என்ற அடிப்படையிலும் 10-50 வயதுப் பெண்கள் புனிதமற்றவர்கள் அல்ல. உலகம் சார்ந்த மனித உரிமை என்ற அடிப்படையிலும் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மனிதர்களின் சமத்துவம் சார்ந்த லட்சியம் என்ற அடிப்படையில் மாதவிடாய் பற்றிய ஆசூயைகளைக் களையவும், இயல்புணர்வை வளர்க்கவும் விழிப்புணர்வுப் பரப்புரை இயக்கம் எங்கும் நடந்துகொண்டிருக்கிறது. அந்த இயக்கம் முக்கியமாக நுழைய வேண்டியது ஆலயங்களுக்குள்ளேதான் என்று தெளிவாகிறது.

கடவுளுக்கே அவமதிப்பு!

தடைவிதிப்போரின் அடிப்படையான இறை நம்பிக்கை என்ற கோணத்திலும் இதை அணுகலாம். மனிதர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் ஆலயங்களை நாடுகிறார்கள். ஆலயத்தில் உறையும் தெய்வம் தங்களுடைய பாவங்களைக் கழுவிப் புனிதப்படுத்திவிடும் என்று கருதுகிறார்கள். அனைத்து உயிர்களின் பாவங்களையும் துடைத்தெறியும் வல்லமை படைத்த ஆண்டவனின் சன்னதியில் மெய்யுருகி வேண்டி நின்றால், புனிதப் பிறவியாய் மாற்றி விடுவார் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். அவ்வாறு பாவம் தொலைக்கப்பட்ட கதைகள் எல்லாக் கோயில்களிலும் இருக்கின்றன. பாவத்தைக் கழுவுவதற்கான சிறப்புப் பூசைகளும் ஆலயங்களில் நடத்தப்படுகின்றன. கேரளத்தில் ஒரு கிறிஸ்துவ ஆலயத்தில் பாவ மன்னிப்புக் கோரிய பெண்ணை சில பாதிரிமார்கள் முறை வைத்துக்கொண்டு மிரட்டிச் செய்த பாவம் பற்றிய அண்மைச் செய்தி தனிக்கதை.

பேரண்டத்தையே படைத்து இயக்குகிற, எல்லாப் பாவங்களையும் துடைத்துப் புனிதமாக்குகிற, மகா சக்தியான கடவுளை வழிபடும் தலம், பெண்களின் வருகையால் புனிதமிழந்துவிடும் என்பது, நாத்திகர்களாலும் கடவுளுக்குச் செய்யப்படாத அவமானம். அந்த அவமானத்துக்கு முடிவுகட்டக் கோருகிறவர்களுக்கு அறிவார்ந்த விளக்கங்களை அளித்து “அறியாமை” இருளை அகற்றுவதற்கு மாறாக, அவர்களை இந்து மத விரோதிகளாகச் சித்தரித்து வசைபாடுவதும், இஸ்லாமிய கிறிஸ்துவத் தலங்களில் இதுபோல் நடந்தால் தட்டிக் கேட்பீர்களா என்று திசைதிருப்புவதும் அதைவிட அவமானம். அந்த ஆணாதிக்க அவமானங்களைத் துடைத்தெறிய, பாலின சமவுரிமை மந்திரம் ஆலயங்களுக்கு உள்ளேயே உச்சரிக்கப்படட்டும் – உரக்க.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018