மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சிறப்புத் தொடர்: உண்மையான முகத்தை அறியுங்கள்!

சிறப்புத் தொடர்: உண்மையான முகத்தை அறியுங்கள்!

வெண்பா கீதாயன்

ஓவியம்: சசி மாரீஸ்

நீ கூடிடு கூடலே - 14: உறவுகளை அலசும் தினசரி தொடர்

ஒருவருடன் ஓரிரவு தங்கினால் அவரைப் பற்றி முழுதாக அறியலாம் என்று சொல்வார்கள். இன்று ஒருவரைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள ஒரு வாரமேனும் அவருடன் இருக்க வேண்டும். வெளியிலிருந்து காதலிக்கும் வரை தங்கள் காதலன் அல்லது காதலியின் குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை முற்றிலும் அறிந்திருக்க மாட்டோம். சேர்ந்து வாழ்கிறபோதுதான் உண்மையான குணங்கள் பற்றித் தெரியவரும்.

ஆரம்பத்தில் உங்களுடன் பழகும் காதலன் முகத்தில் சிரிப்பைத் தவிர எதையும் பார்த்திருக்க மாட்டீர்கள். "ச்சோ ஸ்வீட்டா... எப்படி இவ்ளோ கூலா இருக்கற!" என்று வியந்திருப்பீர்கள். லிவிங் டுகெதரில் இரண்டாவது நாளில் "யேய் நாயே, எங்கடி என் ஷர்ட்டை வெச்ச" என்று நரம்புகள் புடைக்க உங்களைப் பார்த்துக் காதலன் கத்தக்கூடும். அன்று 'டேய் கேனை' என்று சொல்லும்போதுகூட சிரித்துக்கொண்டிருந்தானே என்று நீங்கள் அதிர்ச்சியில் உறைவீர்கள்.

தவறான ஒருவனைத் தேர்ந்தெடுத்துவிட்டோம், ஐயோ நடித்திருக்கிறான், ச்சீ அவனா இவன் என்று மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படும். ஆனால், உங்கள் காதலனின் அசல் குணம் இதுதான்.

உங்கள் காதலி உங்களைச் சந்திக்க வரும்போது அத்தனை அடக்கமாக இருந்திருக்கலாம். அதிர்ந்துகூடப் பேசியிருக்க மாட்டாள். எதற்கும் எதிர்ப் பேச்சு பேசியிருக்க மாட்டாள். சேர்ந்து வாழ வந்தால் காதலிக்கு மதுப் பழக்கமும் சிகரெட் பழக்கமும் இருக்கிறது என்பது தெரிகிறது. அப்போது என்ன மனநிலைக்கு உள்ளாவீர்கள்?

குடும்பக் குத்து விளக்கென்று நினைத்தோம், இப்படியிருக்காளே, நம்ம அம்மா அப்பாகிட்ட எப்படி இன்ட்ரோ பண்றது, என்னதான் நான் மாடர்ன்னாலும் இத ஏத்துக்க முடில, இன்னும் என்னென்ன பழக்கம் இருக்கோ என்று அன்றைய நாள் முழுக்க உறக்கம் வராது.

இந்த இரண்டு சம்பவத்திலும் குறைந்தபட்சம் ஆறேழு மாதக் காதலர்களாக இருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். இத்தனை நாட்களில் தத்தமது துணைபற்றி அறிந்துகொண்டது வெறும் சுழிநிலை. ஆனால், காதல் அப்படியே இருக்கிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, சேர்ந்து வாழ்வதற்கு முன் துணையின் பண்பு நலனை அறிந்துகொள்வதாகும்.

ரொம்ப இனிமையானவனாகத் தெரிந்தால் அவனைப் பரிசோதியுங்கள். போலியான உணர்வுகளை ஒருபோதும் ஆராதிக்கக் கூடாது. பேசாத அமைதியான பெண் என்றால் அவளைப் பேசவைக்க முயற்சி செய்யுங்கள். துணையின் இயல்பில் சந்தேகம் தோன்றினால் தாராளமாகக் கேட்டுவிடலாம்.

கோபப்பட்டால் கோபப்பட அனுமதியுங்கள். நீங்கள் மட்டுப்படுத்தினால் அந்த உணர்வின் எல்லையினை அறியாமல் போகக்கூடும். ஒவ்வோர் அனிச்சையான சந்தர்ப்பங்களிலும் துணையின் பண்பு நலனை அறிந்துகொள்ள முயலலாம். தன் நண்பர்களிடம், தம் வீட்டில், அலுவலகத்தில் எவ்வாறு பழகுகின்றனர் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஓரளவுக்கு கேரக்டர் நமக்குப் பிடிபடும்.

உங்கள் துணை உங்களால் கட்டுப்படுத்த இயலாத அதீதமாக உணர்வுகளையோ உங்களுக்குக் கட்டோடு பிடிக்காத பழக்கவழக்கங்களையோ கொண்டிருந்தால் நெருக்கமாவதற்கு முன்பே டாட்டா காட்டுவது நன்று.

ஏனெனில் காதலால் காதலிக்க மட்டுமே இயலும். காதலை வைத்து யாரையும் திருத்த இயலாது.

(காதல் தொடரும்)

(கட்டுரையாளர்:

வெண்பா கீதாயன்

எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018