மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

காலநிலை மாற்றத்தால் புதிய நோய்கள்!

காலநிலை மாற்றத்தால்  புதிய நோய்கள்!

புவியானது அபாயகரமான அளவில் வெப்பமடைந்து வருவதால் எபோலா, சிக்கா, மெர்ஸ், சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல் என புதிய நோய்கள் பரவத் தொடங்கி உள்ளதாகக் காலநிலை மாற்றத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கஜகஸ்தான் நாட்டில் பணிபுரியும் காலநிலை மாற்றத்தைக் ஆய்வு செய்து வரும் அறிவியலாளர்கள் குழு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த இருபது ஆண்டுகளில் இதுவரை அறியப்படாத தொற்றுநோய்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. எபோலா, சார்ஸ், மெர்ஸ் மற்றும் சிக்கா போன்ற நோய்கள் கட்டுபடுத்த முடியாத அளவில் பரவி வருகின்றன. சில அறியப்படாத ஒவ்வாமைகளும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வந்துள்ளது மருத்துவர்களை வியப்படைய வைத்துள்ளது. இதற்குக் காரணமாக காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள அராஜகமான அதிரடி மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்

மழை பொழிய வேண்டிய காலத்தில் கடுமையாகச் சுட்டெரிக்கும் வெயிலும், கோடைக் காலத்தில் அதிகமான மழைப்பொழிவும், புயல்களும், சூறாவளிகளும் திகைக்க வைப்பதாக உள்ளன. பருவ நிலையில் ஏற்படும் இந்த அதிரடி மாற்றங்களால் ஒட்டுமொத்த உயிர்ச்சூழல் மாறுவதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாதபடி உடல் திணறுகிறது. அதனால் ஒவ்வாமைகளும் புதிய நோய்களும் ஏற்படுகின்றன.

மக்கள்தொகை பெருக்கம், துரிதமான நகரமயமாக்கல், நுகர்வுப்பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றினால் வனங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அழிக்கப்படுகின்றன. இவை பூமியின் வெப்பநிலை அபாயகரமாக உயருவதற்குக் காரணமாக இருக்கின்றன. மனிதா்களின் நுகர்வு மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை ஏராளமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிட வைத்துள்ளது. இதனால் பூமியின் வெப்பம் உயர்ந்து கொண்டே வருகிறது. கரியமில வாயுவையும் பசுமை இல்ல வாயுக்களையும் அதிகமாக வெளியிடும் உற்பத்தி முறை மாறாத வரை பூமி வெப்பமடைவதை நிறுத்த முடியாது. ஆனால், பூமியின் வெப்பம் உயர்ந்து வருவது நோய்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்து வருகிறது என்பது கவலைக்குரிய ஒன்று.

புதிய சூழலில் வெப்ப உயர்வுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ளும் புதிய நோயை உருவாக்கும் கிருமிகள் உருவாகின்றன. அதேபோல புதிய கிருமிகளும், ரத்தத்தை உறிஞ்சும் உஷ்ண மண்டல பூச்சிகளும் படையெடுத்து வருகின்றன. இவற்றுக்கான சூழல் அழிக்கப்படுவதால் இவை மனிதர்கள் வாழும் இடத்தை நோக்கி படையெடுக்கின்றன. புதிய கிருமிகளும் வைரஸ்களும் வெப்பத்தினால் பெருகிவருகின்றன. உதாரணமாக, வரும் 2020இல் 60 விழுக்காடு மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் உருவாகும் புதிய நோய் உருவாக்கும் கிருமிகள் வெகுவேகமாகப் புதிய சூழலில் பரவுகின்றன. அவற்றின் இன உற்பத்தி செய்வதற்கு ஏற்ப உயர்ந்து வரும் வெப்ப நிலை சாதகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நேரடியாகக் காலநிலை மாற்றத்திற்கும் தொற்று நோய்களுக்குமான தொடர்பை நிரூபிப்பது சிக்கலான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் நோயை உருவாக்கும் கிருமி காலநிலை மாற்றத்தினால் உருவாகும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறது என்பது இன்னும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

இரண்டுக்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்ள முடிந்தால் தனி நபர்களை இந்தக் கிருமிகள் எப்படி பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக உலகம் முழுவதும் தவளைகள் கூட்டம் கூட்டமாக இறந்தன என்பதைக் உயிரியலாளர்கள் கண்டறிந்தனர். ஆம்பியன்கள் எனப்படும் இந்த வகை உயிரினங்களை ஒட்டுண்ணி பூஞ்சையான சைட்டிரிட்ஸ் என்பனவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இந்த வகை பூஞ்சான்கள் தட்பவெப்ப நிலை மாறும்போது நச்சுத்தன்மை கொண்டவையாக மாறுகின்றன. இவற்றால் பாதிக்கப்படும் தவளைகள் உயிரிழக்கின்றன.

மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படும்போது அதில் தலையிட்டு, உரிய மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதும் நோயைக் கட்டுப்படுத்துவதும் சாத்தியமாகிறது. ஆனால், வனவிலங்குகளுக்கு புதிய நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்களில் மனிதர்கள் தலையிடுவது சாத்தியமில்லை.

இதன் காரணமாகவே மனித குரங்குகள், பறவைகள், பன்றிகள், வௌவால்கள் மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவோ, முன்கூட்டியோ கண்டறிந்து தடுக்கவோ முடியவில்லை. சுவாச மண்டலத்தில் நோய்களை உருவாக்கும் பறவைக்காய்ச்சல் கார்னோ வைரஸ்கள் ஆகியவை வனத்திலிருந்து மனிதர் குடியிருப்புகளுக்கு வந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வனவிலங்குகளுக்கு இவ்வித நோய்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெப்ப உயர்வினாலும் அதனால் அவற்றின் மொத்த உயிர்ச்சூழலும் மாறியதால் வந்தவை என்பது பெரும்பாலானவருக்குத் தெரியாது.

தொற்று நோய்கள் குறித்த உலக ஆய்வுகள் புதிதாக உருவாகியுள்ள எபோலா மற்றும் சிக்கா போன்ற தொற்று நோய்களும், முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்ட மலேரியா மற்றும் லைம் ஆகிய நோய்கள் திரும்பி உருவாகித் தாக்குவது காலநிலை மாற்றத்தினால்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதேபோல வயிற்றுப்போக்கு மற்றும் காலராவும் வெப்ப உயர்வினால்தான் மீண்டும் பரவி வருகிறது. வெப்ப உயர்வினால் கொத்து கொத்தாக வனவிலங்குகளும் மடியத் தொடங்கியுள்ளன என்பது இன்னும் ஆராயப்படாத ஒன்றாக உள்ளது. வேட்டையாடப்படுவதினால் மட்டுமின்றி வெப்ப உயர்வினாலும் அவை மடிந்து வருகின்றன.

சைகா ஆன்ட்லோப்ஸ் (saiga antelopes) என்பவை 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஒரு விலங்கினங்கள் மங்கோலியாவிலும் ரோமானியாவிலும் இருந்துள்ளன. இவை படிப்படியாக வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியுள்ளவை கஜகஸ்தானில் வாழ்கின்றன. இவற்றில் மே மாதத்தில் மட்டும் 60,000 விலங்குகள் ஒரே சமயத்தில் இறந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விலங்குகளால் மாறி வரும் தட்ப வெப்ப நிலையை எதிர்கொள்ள முடியவில்லை என்பதே காரணம்.

விலங்குகள் கூட்டம் கூட்டமாக மடிவதும் தொடங்கியுள்ளது. இது காலநிலை மாற்றத்தினால் உயிரினங்களினால் உடல் நிலை எப்படி பாதிக்கப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டு. விலங்குகளில் தொடங்கும் பாதிப்பு பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவற்றின் வரிசையில் மனிதர்களுக்கு விரிவடைதற்கு நீண்ட காலமாகாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

-சேது ராமலிங்கம்

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018