மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ் பாபு (யுனிவர்செல்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ் பாபு (யுனிவர்செல்)

இந்தியாவின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளரான யுனிவர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் பாபு குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

30 வருடங்களுக்கு முன்பு யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் விற்பனையாளராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர் சதீஷ் பாபு. இது வாட்டர் பியூரிஃபைர் (தண்ணீர் சுத்திகரிப்பான்) மற்றும் வேக்கம் கிளீனர் போன்ற மின் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம். இது இவருக்குச் சிறப்பான ஆரம்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தான் பணியில் இணைந்த முதல் நாளே வேக்கம் கிளீனர் விற்பனை செய்தது மட்டுமின்றி முழுத் தொகையையும் வசூல் செய்துவந்த திறன் இவரது நிறுவனருக்கு ஆச்சரியமளித்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்த 10 ஆண்டுகளில் தன்னால் முடியாது என்று இவர் எதையும் எப்போதும் கருதியதே இல்லை. இதனால் இந்த 10 ஆண்டுகளில் தனது சந்தைத் திறனை இவர் நன்கு வளர்த்துக்கொண்டார்.

இதற்குப் பிறகு தனது தொழிலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். சொந்தமாக இயங்க முடிவெடுத்து, 1997ஆம் ஆண்டில் யுனிவர்செல் நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கினார். இந்நிறுவனம் ஸ்கைசெல் டெலிஷாப் (இப்போது ஏர்டெல்) போஸ்ட் பெய்டு இணைப்புகளை வழங்கி வந்தது. அப்போது செல்போன்கள் பரவலாகாத காலம். சாதாரண பியூச்சர் போன்கள்தான் அப்போதைய சந்தை வரத்து. செல்போன் விற்பனை நிறுவனங்களும் அதிகளவில் சந்தையில் இல்லாத காலகட்டம்.

இருப்பினும் எதிர்காலத்தில் செல்போன்களின் எண்ணிக்கை பெருகும், அனைத்துத் தரப்பு மக்களும் செல்போன் பயன்படுத்தத் தொடங்குவர் என்று துணிவுடன் இத்துறையில் முதலீடு செய்தார். 2000ஆம் ஆண்டில் சென்னையில் முதல் பெரிய அளவிலான சில்லறை மொபைல் போன் விற்பனை மையத்தை யுனிவர்செல் தொடங்கியது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் எல்லோர் கையிலும் செல்போன் பரவத் தொடங்கியது.

நோக்கியா நிறுவனம் இந்தியாவின் ஒட்டுமொத்த பீச்சர் போன் சந்தையையும் ஆட்கொண்டது. அந்த நேரத்தில் கடையைத் தொடங்கிய சதீஷுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக இது அமைந்தது. நோக்கியோ நிறுவனத்துடன் இணைந்து விற்பனையில் ஈடுபட்டார். இதனால் ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சியை விட 3 மடங்கு கூடுதலான வேகத்தில் யுனிவர்செல் நிறுவனம் வளர்ச்சி கண்டது.

மற்ற நிறுவனங்களைப் போன்று தள்ளுபடி கொடுத்து மக்களைக் கவரும் யுக்தியை இவர் தொடக்கத்தில் கையாளவே இல்லை. அதற்கு மாறாகத் தரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்தார். இதனால் யுனிவர்செல் செல்போன் விற்பனையில் தனி இடம்பிடித்தது. சென்னையிலிருந்து மற்ற நகரங்களுக்கும் யுனிவர்செல் கடைகள் பரவத் தொடங்கின. தமிழகம் முழுவதும் வேகமாக 200 கடைகளை யுனிவர்செல் தொடங்கியது.

செல்போன் எல்லைகள் அடுத்தடுத்து விரிவடையத் தொடங்கியது. பியூச்சர் போன்களில் பிளாக் அண்ட் ஒயிட் போன்கள் மட்டுமே என்ற நிலை மாறி கலர் போன்கள் சந்தைக்கு வரத் தொடங்கின. அதற்குப் பிறகு கேமரா போன்கள், மியூசிக் வசதிகளுடன் கூடிய போன்கள் அதிகளவில் சந்தையில் குவிந்தன. சீன நிறுவனங்கள் இந்திய மொபைல் சந்தையில் தனது பங்கையும் அதிகரித்தன. மலிவான விலையில் சீனப் போன்கள் கிடைத்தன. இதனால் மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. அதேநேரத்தில் சாம்சங், சோனி எரிக்சன், எல்.ஜி போன்ற நிறுவனங்களும் அதிகளவில் சந்தை வாய்ப்பைப் பெற்றன.

இதனால் 2000க்குப் பிறகு இந்திய செல்போன் விற்பனைத் துறை மிகவும் பரபரப்பானது. இந்த புதிய மொபைல் போன்களின் வரத்து யுனிவர்செல் நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தது. இந்நிறுவனத்துக்கு 2004ஆம் ஆண்டில் ஐஎஸ்ஓ 9000-2001 தரச்சான்றிதழும் கிடைத்தது. இதற்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இது இந்திய மொபைல் போன்கள் சந்தையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி அதுவரையில் செல்போன் பயன்படுத்தாதவர்களைக்கூட செல்போன் பயன்படுத்தத் தூண்டியது. ஒருபக்கம் விற்பனையை அதிகரித்தாலும் மறுபக்கம் போட்டியையும் அதிகரித்தது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களே நேரடியாக விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கின. ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் செல்போன் விற்பனையை ஆட்கொள்ளத் தொடங்கின. இருப்பினும் சதீஷ் சோர்வடையாமல் மொபைல் போன்களுக்கு காப்பீடு, மதிப்பு கூட்டு சேவைகள் போன்றவற்றை அளிக்கத் தொடங்கினார். இதனால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கும் வந்து மொபைல் போன்களை வாங்கினர். அதுமட்டுமின்றி நேரடியாகக் கடைகளுக்கு வந்து மொபைல் போன்களைப் பார்த்து வாங்குவதைப் பழக்கமாகக் கொண்ட ஒரு பெரும் கூட்டம் இன்றளவிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்தக் கூட்டத்தைக் கவரும் விதமாக யுனிவர்செல் இருந்தது.

விற்பனையை அதிகரிக்க விளம்பர யுக்திகளையும் சதீஷ் கையாண்டார். தொலைக்காட்சிகள், வானொலிகளில் விளம்பரங்களை வெளியிட்டார். மொபைல் போன்கள் பற்றிய புரிதலை எளிதில் இளைய தலைமுறையினரால்தான் கொண்டு செல்ல இயலும் என்று கணித்து தோராயமாக 24 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஊழியர்களைப் பெரும்பாலும் யுனிவர்செல் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தினார். ஒட்டுமொத்தமாக இப்போது சுமார் 1,500 பேர் வரை இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இப்போது மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் போன்கள் யுனிவர்செல் நிறுவனத்தால் விற்கப்படுகின்றன. இதன்மூலம் இந்தியாவில் அதிக போன்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையமாக யுனிவர்செல் உருவெடுத்துள்ளது. தற்போது இந்நிறுவனத்துக்கு 1 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கிளைகளைப் பரப்பியுள்ளது யுனிவர்செல்.

இன்று என்னதான் ஆன்லைன் மூலமாக மொபைல் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், இன்னமும் கடைகளுக்குச் சென்று மொபைல் வாங்குவதை மட்டுமே நம்பகத் தன்மையாகக் கொண்ட வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள போதிய நம்பகமற்றத் தன்மையே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இன்னும் எத்தனை புதிய சாவல்கள் என்றாலும், அதை எதிர்கொள்ளும் துணிவோடு புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சதீஷ்.

தொகுப்பு: பிரகாசு

சென்றவார சண்டே சக்சஸ் ஸ்டோரி: அய்ய நாடார் - அய்யன் ஃபயர் வொர்க்ஸ்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018