மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வதந்திக்கே டயர்டு ஆகியிருக்கும்: அப்டேட் குமாரு

வதந்திக்கே டயர்டு ஆகியிருக்கும்: அப்டேட் குமாரு

இன்னைக்கு நேத்தா வதந்தி வருது, ஐம்பது வருசமா வதந்தி வந்துகிட்டு தான் இருக்கு. எல்லாத்தையும் ஒரே சிரிப்புல கடந்துட்டு மறுபடியும் கோட்டையில ஏறி கொடி ஏத்துனவர் தானே சார் அவர். கிண்டல் அடிச்சவங்க, சாபம் விட்டவங்கன்னு அத்தனை பேருக்கும் சேர்த்து தானே திட்டங்களைப் போட்டாரு. 70கள்ல அவர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த திட்டத்தை விரைவில் கொண்டு வருவோம்னு மத்த ஸ்டேட்காரங்க இப்பத் தான் முழங்கிக்கிட்டு இருக்காங்க. பழைய சிலபஸை கையில வச்சுகிட்டு இருக்குற அவங்களை பார்த்து பரிதாபப்படுறதா இல்ல, இது எதுவும் தெரியாம அவரால படிச்சு வேலை வாங்கிட்டு ஏசி ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு அபத்தமா ஸ்டேட்டஸ் போடுறாங்களே நாலஞ்சு பேர் அவங்களை சொல்றதான்னே தெரியல. சரி அவங்களை விடுங்க. என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளேன்னு அந்த ஒரு வார்த்தையைக் கேட்குறதுக்கு திமுக காரங்க மட்டும் இல்ல, தமிழ்நாடே காவேரி ஹாஸ்பிட்டல் வாசலைப் பார்த்து நிற்குது.. நீங்க அப்டேட்டை பாருங்க, நானும் போய் பார்த்துட்டு வந்துடுறேன்.

@manipmp

ஹோட்டல் உணவு செரிப்பதில் பில்லில் உள்ள ஜி.எஸ்.டி முக்கிய பங்கு வகிக்கிறது

@amuduarattai

"வயிற்றுக்கும் தொண்டைக்கும், உருவமில்லாதொரு உருளையும் உருளுதடி". கேஸ் ட்ரபிளா இருக்குமோ?!

@ShivaP_Offl

ஷாப்பிங் போக மனைவியிடம் கொடுத்த பணமும்,

பார்ட்டிக்கு போறேன்னு கணவன் எடுத்துச்சென்ற பணமும் முழுசா வீடுதிரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை!!

@gips_twitz

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘வருங்கால தமிழக முதல்வரே’ என போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் - செய்தி

இப்ப தான் புரியுது ரஜினி ஏன் இன்னும் கட்சி ஆரம்பிக்கலைனு

@HAJAMYDEENNKS

13 நாள் ட்விட்டர் பக்கம் வராவிட்டாலே எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் யாருன்னு கேட்பாங்க.. ஆனால் 13 வருஷம் ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருந்தாலும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது இந்தியாவில் யாரும் செய்யாத சாதனை !

@ajmalnks

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி - செய்தி

வரும்போது எத்தனை ஆயிரம் கோடி முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்ன்னு தெரியலையே...

@Aaathithamizhan

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு

வருங்கால தமிழக முதல்வரே

என போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

-செய்தி

அப்போ வேங்க மவன்

யாரும் ஆதரவின்றி

வீட்லையும் ஒத்தையா தான்

நிப்பாரு போல

@BlackLightOfl

கொஞ்சநாள் முன்னாடி மொபைல் யூஸ் பண்ணாதவங்களை ஆச்சிரியமா பார்த்த காலம் மாறி இன்னைக்கு ஜியோ நெட்வொர்க் யூஸ் பண்ணாதவங்களை ஆச்சிரியமாக பார்க்கிறோம்.

@sultan_Twitz

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பானது - எடப்பாடி பழனிசாமி

எது தூத்துக்குடில வாயில சுட்டீங்களே அது தான் பெண்கள் பாதுகாப்பா!!

@udaya_Jisnu

இரண்டு ரூபாய் லாலி பாப்புக்கும்,

இரண்டாயிரம் ரூபாய் ரிமோட் காருக்கும்,

ஒரே மாதிரியான சந்தோஷத்தை வெளிப்படுத்த, குழந்தைகளால் மட்டுமே முடியும்...

@2Vettipaya

அவர் கட்டிய ஐடி பார்க்கில் உட்கார்ந்து கொண்டு ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தான்.

கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்று...

@sultan_Twitz

நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக முடியும் - பாஜக எம்.பி. ஹேமமாலினி #

ஒரு நிமிஷத்தில் ரெடியாக அது என்ன மேகி நூடுல்ஸா!?

@SaranyaTwtzz

அவமானத்திற்கு பின் வரும் தைரியம்

ஆயிரம் வெற்றிக்கான தன்நம்பிக்கையை தரக்கூடியது.

@Thaadikkaran

இப்போதெல்லாம் வீட்டுக்கு பொருள் வாங்கியதில் பல மாத உழைப்பைவிட பல மாத EMIயே ஒளிந்திருக்கிறது..!

@_Velmurugan

"மீம் கிரியேட்டர்களுக்கு நானும் தமிழிசை சௌந்தர்ராஜனும் தான் டார்கெட்" அமைச்சர் ஜெயக்குமார்

மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு பேங் கட்டிக்கொடுங்க இனி உங்க பக்கமே அவங்க வர மாட்டாங்க

@Wasim_twitz

ருசியாக சமைப்பது எப்படி என்ற புத்தகம் என்று எங்கள் வீட்டில் வந்ததோ அன்றில் இருந்து சாப்பாட்டில் ருசியை காணோம்

@Hariharasuthan Thangavelu

நகரம் பரபரத்துக் கிடக்கிறது. வதந்திகள் அசுர பலம் பெற்று உலவுகின்றன. எது உண்மை எது பொய்யெனத் தெரியவில்லை. ராஜாஜி ஹால் என்கிறார்கள். அண்ணா சதுக்கம் என்கிறார்கள். கரகரக் குரலோனின் கடைசி நிமிடங்கள் என்கிறார்கள். ஒரு புறம் கோபாலபுரம் மக்கள் வெள்ளத்தில் நிறைகிறது. மறுபுறம் திமுகவின் அதிகார பூர்வ அறிக்கைகள் திடீர் நம்பிக்கைகளை உருவாக்குகிறது. 'அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. நல்லாருக்கார் கிளம்புங்க' என்று கனிகிறது காவல்துறை. ம்ஹூம். ஒரு அடி கூட நகர மறுக்கிறது கூட்டம்.. இணையப் போராளிகள் போல அல்ல இந்தக் கூட்டம். எதற்கும் அசராத இதயப் போராளிகளாக இருக்கிறார்கள், கலைஞரின் ரசிகர்கள்.

பொய்யாமொழி ... நீ போய் சாப்டு வந்துறுடே.. அப்பா இங்கன படுத்துருக்கேன்.. என தலையில் கட்டிய துண்டை உதறி விரித்து மரத்தடியில் தலை சாய்கிறார் ஒரு நரை மீசை.

.சார்... சார் !! இங்க படுக்ககூடாது.. எந்திருங்க !! ப்ளீஸ் !! என விரைகிறது காவல்துறை.

ஐயா.. இருங்க.. அட இருங்க!! .. சாப்டீங்களா.. தம்பி ..பொய்யாமொழி.. அப்படியே ஐயாக்கு 4 இட்லி வாங்கிட்டி வந்துர்றா என குழைகிறார் தந்தை.

அப்ப கடைசி வரைக்கும் நீ சாப்பிட மாட்ட ! என முணுமுணுத்துக் கொண்டே நகர்கிறான் பொய்யாமொழி.

அது.. ரொம்ப நாள் கழிச்சு குடிச்சிட்டேன் பாருங்க .. அதான் நம்ம சிங்கத்துக்கு கோபம்.. 18 வருசம் சார்.. 18 வருசம்.. திருநெல்வேலி பொதுக்கூட்டத்துல தலைவரு சொன்னாரு .. அய்யாக்கண்ணு.. குடிச்சா நீ திமுக காரனே கிடையாதுனு.. கேட்டதும் சாராயத்த விட மனசு ரணமா எரிஞ்சுது.. அன்னக்கு விட்டேன்.. இன்னிக்கு என் தலைவன்.. இப்படிக் கிடக்க ....

அய்யாக்கண்ணு.. விம்முகிறார்.. இருமுகிறார்.

அவரை நெருங்கினேன். ...சார் .. உங்க பையனுக்கு தலைவர் தானே பேர் வச்சார் ... கரெக்டா ? என்றேன்

எப்படி தம்பி என வியந்துவிட்டு அவரே தொடர்கிறார், "ஆமா தம்பி. திருநெல்வேலி 1988 மைதான பொதுக்கூட்டம் .. கொட்டுற மழை தம்பி.. பையன் ஆசுபத்திரில இருக்கான் தலைவா.. கொண்டு வர முடிலனு கையப் பிடிச்சு அழுதேன்.. "

தலைவர் என் கையப் பிடிச்சு அழுத்தி சொன்னாரு.. "அவனுக்கு பொய்யாமொழினு பேர் வைடான்னார்"..

"அதேன்.. அதோ..அங்க போறான் பாருங்க சிங்ககுட்டி .. என் தங்கம் பொய்யாமொழி.. " என இட்லி கடையை சுட்டிக் காட்டுகிறார்.

"ஐயா.. கமிஷனர் வந்தா எங்கள தான் சத்தம் போடுவார்.. இங்க நில்லுங்க பராவல்ல .. ஆனா படுக்காதீங்க !! என கால்துறை கடமையாற்ற , பொய்யா மொழி கையில் பார்சல் சகிதம் தடாலென உள்நுழைகிறான் . 'சார் இட்லி எடுத்துங்க' என மூவருக்கும் நீட்டுகிறான்..

"காசு பத்துச்சாடா பொய்யா ? " என்கிறார் தந்தை..

"காசே வாங்கலைப்பா கடைக்காரரு.. என் பேர மட்டும் கேட்டாரு .... சொன்னேன்.. சிரிச்சிட்டே அவர் பொண்ணு பேர சொல்லிட்டு இட்லிய தந்தார்.."

அத்தனை பேருக்கும் ஆர்வம் மேலிட, அனைவரையும் முந்திக் கொண்டு கேட்டார் காவலர்..

" அவர் பொண்ணு பேரு என்னங்க ?"

"தமிழழகி சார் " என்றான் பொய்யாமொழி...

-லாக் ஆஃப்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018