மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

மருத்துவமனையில் ஆளுநர், தலைவர்கள் நலம் விசாரிப்பு!

மருத்துவமனையில் ஆளுநர், தலைவர்கள் நலம் விசாரிப்பு!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால், குலாம் நபி ஆசாத் மற்றும் முக்கிய தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுத்து வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று நள்ளிரவு ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை முன்பு அதிகளவில் திரண்டுள்ள தொண்டர்கள் ’கலைஞர் வாழ்க’ என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். தொண்டர்கள் அதிகளவில் திரள்வதாலும், முக்கிய தலைவர்களின் வருகையாலும் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் மருத்துவமனை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சரியாக 11மணிக்கு மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை சந்திக்காமல், ஸ்டாலினிடம் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், “கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக வந்தேன். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவலைப்பட வேண்டியதில்லை அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். தேவையற்ற முறையில் சிலர் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு யாரும் இடமளிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். கருணாநிதி உடல்நலம் குணமடைந்து நிச்சயம் தமிழக மக்களுக்கு மீண்டும் பணியாற்றுவார். அவரது அழுத்தமான குரலில் பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”என்று தெரிவித்தார்.

மேலும் நடிகர்கள் நாசர், பிரபு, ஆடிட்டர் குருமூர்த்தி, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவேரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வரும், மரியாதைக்குரிய பெரியவருமாகிய கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர் குணமடைந்து வருகிறார். அவருக்கு மருத்துவ உதவி தேவை என்று இதுவரை கேட்கவில்லை. மருத்துவ உதவி கேட்டால் தமிழக அரசு அதனைச் செய்து தருவதற்கு தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018