மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: மதமாற்றம் செய்வது சரியா?

சிறப்புக் கட்டுரை: மதமாற்றம் செய்வது சரியா?

சத்குரு ஜகி வாசுதேவ்

இன்று பரவலாகப் பத்திரிக்கைகளில் பதிவேற்றம் செய்யப்படும் ஒரு செய்தி - மதமாற்றம். பல திசைகளிலிருந்தும் இதைப் பற்றிய கூப்பாடுகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஆதரிப்போரும் எதிர்ப்போரும் தங்கள் கருத்துக்களைப் பதித்த வண்ணம் உள்ளனர். மதமாற்றம் சரியா? அல்லது தாய்மதத்திற்குத் திரும்புதல் சரியா? சத்குருவிடம் இந்தக் கேள்விகளை முன்வைத்தது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம். அந்தப் பேட்டியின் தொகுப்பு உங்களுக்காக...

இன்று ஊடகங்கள் முழுவதிலும் தேவாலயங்களைச்சேதப்படுத்துதல், பலவந்தமான மதமாற்றங்கள், தாய்மதம் திரும்புதல் போன்றவை பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளன. இந்தச் சூழ்நிலையை உங்களைப் போன்ற தலைவர்களால் சரிசெய்ய முடியுமா?

மதமாற்றம் சம்பந்தப்பட்ட இந்த விஷயங்கள் யாவும் யாரோ ஒருவரால் தூண்டிவிடப்படுகிறது. நாசவேலைக்காரர்கள் தேவாலயங்களை எரிக்கவில்லை. இரண்டு கற்களை எரிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். இப்படித்தான் எல்லா இடத்திலும் நடந்திருக்கிறது.

ஆனால், கல்கத்தாவில் வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாரே?

அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு கன்னியாஸ்திரியாக இருக்கலாம், வேறு எவராகவும் இருக்கலாம். ஆனால், முதலில் அவர் ஒரு பெண். நம் தேசத்தின் அப்பகுதியில் நிலவும் அசாதாரணமான துணிச்சல், மோசமான சட்டநடைமுறை இந்த காரியத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளது. திருட்டும், கொள்ளையும் கூட நடக்கத்தான் செய்கிறது, அதையெல்லாம் எதற்கு ஒரு மதத்துடன் தொடர்பு படுத்துகிறீர்கள்? மதம் சம்பந்தபட்ட செயல்கள் நடைபெறுவதில்லை என நான் சொல்ல வரவில்லை. ஆனால், நீங்கள் கூறியதைப் போன்ற சம்பவங்கள், அங்குள்ள காவல் துறையினரால் கையாள முடியாத சில பிரச்சினைகளாக வடிவெடுத்துள்ளன. சற்றே விநோதமான நிகழ்வுகள் இவை. தேசிய அளவிலான கவனம் இவற்றிற்கு தேவையில்லை. பிரதம மந்திரியும் இவற்றிற்கு விளக்கங்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றை சட்டத்தின் கைகொண்டு கையாள வேண்டும்.

கலவரங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. என் காரினை யாரோ ஒருவர் கீறிவிட்டுச் சென்றால், மதவாதிகள் ஒரு "இந்து குருவின்" காரினை கீறிவிட்டார்கள் என்றா சொல்வீர்கள்? இதுபோன்ற சம்பவங்கள் பலவிதமான மனிதர்களுக்கு நிகழ்கின்றன. ஆனால், இன்று இச்சம்பவங்களை நாம் கையாளும் விதத்தைப் பார்த்தால் அரசாங்கத்தைத் தாக்கும் நோக்கில், தேவையில்லாமல் திரிக்கப்பட்டு, அடிக்கோடிடப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

சிறுபான்மையினர் மீது செய்யப்படும் தாக்குதல்களாகத்தான் இவை பார்க்கப்படுகின்றன. இதனை எவ்வாறு எதிர்கொள்வது?

இதனை தேசிய பிரச்சினையாக, சர்வதேச பிரச்சினையாகப் பார்ப்பது முறையல்ல. இந்தியா பல்மதங்களை சகித்துக்கொள்ளாத ஒரு நாடு என சிலர் சொல்லத் துவங்கிவிட்டனர். இவை மதச் சகிப்பில்லாமை சார்ந்த பிரச்சினை அல்ல, இவை சட்டம் சார்ந்த பிரச்சினை. ஒவ்வொரு தேசமும் தன் பங்கிற்கு முட்டாள்களை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது, நாமும் உருவாக்கியிருக்கிறோம். இந்த முட்டாள்களை முன்னிலைப்படுத்த வேண்டாம். அவர்கள் ஓரமாக இருக்கட்டும். முட்டாள்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்?

அப்படியென்றால் எதற்காக ஒருவரை இந்து என அடையாளப்படுத்த வேண்டும்? யார் இந்து?

'இந்து' என்பது நிலம் சார்ந்த ஒரு அடையாளம். அதற்கும் மத அடையாளத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் மதத்தின் திசையில் இதனை நாம் பார்க்கத் துவங்கிவிட்டோம். இந்த மண்ணில் பிறக்கும் ஒரு பூச்சியும்கூட இந்துதான். மத அடையாளத்தின் பேரில் அல்ல, நில அடையாளத்தினால். ஆப்பிரிக்காவில் பிறக்கும் பூச்சி எப்படி ஒரு ஆப்பிரிக்கனோ அதைப் போலத்தான் இதுவும்.

சரி, அப்போது சீக்கியர், இந்து, கிறிஸ்துவர் என முத்திரை குத்துவது எதற்காக?

பிரிவு எங்குள்ளது? நீங்கள் பிரிவினையை கற்பனை செய்துகொள்கிறீர்கள். நீங்கள் மனிதனாகப் பிறந்தீர்கள். யாரோ ஒருவர் உங்களை கிறிஸ்துவராகவும், இஸ்லாமியராகவும், இந்துவாகவும் அடையாளப்படுத்தினார். இந்தக் கலாச்சாரத்திலும், யோக முறைகளிலும் ஒருவர் எதன் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருப்பதில்லை, தேடல் கொண்டவராக இருக்கிறார். ஏதோ ஒன்றன் மீது நம்பிக்கை கொள்ளும்போது உங்களால் எதையும் தேட முடியாது.

இந்த தேசத்தின் பிறப்பு-இறப்பு விகிதாச்சாரத்தில் ஏற்படும் திடீர் முரண்பாடுகளைப் பார்க்கும்போது இந்துக்கள் சற்றே வருத்தமடையத்தான் செய்கிறார்கள். நாகாலாந்து, மேகாலயா, போன்ற இடங்களுக்குச் செல்லுங்கள் அங்கு 98 சதவிகிதம் மதமாற்றம் நிகழ்ந்துவிட்டது. லட்சத் தீவுகளுக்குச் செல்லுங்கள் அங்கு 100 சதவிகிதம் மதமாற்றம் நிகழ்ந்தேறிவிட்டது. கேரளத்திற்கும், தென் தமிழகத்திற்கும் செல்லுங்கள் அங்கு 50 சதவிகித மதமாற்றம் நிகழ்ந்துவிட்டது. இவையெல்லாம் எப்போது நிகழ்ந்தன? வெறும் 25 வருடங்களில். வெகு சீக்கிரமாக இதுபோன்ற செயல்கள் அரங்கேறும்போது ஒருவருக்குள் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. நாளை உங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது.

மக்கள் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள்என்கிறீர்களா?

ஆம். நான் அனைவரைப் பற்றியும் பேசுகிறேன். நீங்கள் பெரும்பான்மையானவராக இருந்தாலும், சிறுபான்மையினராக இருந்தாலும் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை மாற்ற முயற்சிக்க வேண்டாம். நாம் என்னவாக இருக்கிறோமோ அப்படியே வாழ்ந்துவிட்டுச் செல்வோம். இந்த தேசத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது எப்படி என்று பார்ப்போம். இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்களைக் கணக்கெடுத்தால் 10 சதவிகிதத்தை விஞ்சாது. அவர்களுடைய கொள்கை அப்படி வகுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களை அவர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

அமெரிக்காவிலும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இல்லாத பட்சத்தில் அரசியலில் நுழைய முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவராக இருக்க வேண்டியது அவசியம். பாபி ஜிண்டாலைப் பாருங்கள். ஓபாமாவைப் பாருங்கள். "நான் ஒரு கிறிஸ்துவன்" என பலமுறை பிரகடனப்படுத்திக்கொள்கிறார். மக்கள் ஒபாமாவை ஒரு இஸ்லாமியராகப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட தேசம் அல்ல நம் தேசம். இங்கு ஒரு சீக்கியர் பிரதமராக முடியும், ஒரு இஸ்லாமியர் ஜனாதிபதியாக முடியும். ஒரு இஸ்லாமியர் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தாலோ திரைப்பட நடிகராக இருந்தாலோ நம் மக்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், மக்கள்தொகை விகிதாச்சாரங்கள் மாற்றி அமைக்கப்படும்போது பாதுகாப்பில்லா மனநிலையே மேலோங்கும். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தாய்மதம் திரும்புதல் போன்ற நிகழ்ச்சிகள் நிகழத் தேவையில்லை எனச் சொல்லவருகிறீர்களா?

நான் சொல்லவருவதெல்லாம் நாட்டின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை மாற்றும் முயற்சி கூடாது என்பதுதான். பல இடங்களில் படுவேகமாக மதத்தின் அடிப்படையிலான மக்கள்தொகை விகிதாச்சாரம் மாறிவருகிறது. நான் எந்தவொரு மதத்துடனும் அடையாளம் கொண்டவன் அல்ல. இந்த தேசத்தில் மதம், கடவுள் பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. முக்தியைப் பற்றித்தான் இங்கு அக்கறை கொண்டனர். 800-1000 வருடங்கள் வெளிநாட்டவர் ஆட்சியின் கீழ் பலமில்லாமல் வாழ்ந்ததால், தற்சமயம் பெரும்பான்மை சமூகம் பாதுகாப்பின்மையை உணர்கிறது. தன் வாழ்வையும், இந்த தேசத்தையும் எந்தத் திசையில் எடுத்துச் செல்வது எனத் தெரியாமல் பல செயல்களையும் செய்யத் துவங்கிவிட்டனர். எல்லோருக்கும் சமத்துவமான பாதுகாப்பினை உருவாக்குவோம். சிறுபான்மையினர் பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள் என்கிறீர்களே, நான் சொல்கிறேன் கதிகலங்கிப் போகும் அளவிற்கு பெரும்பான்மையினரை பயம் கவ்விக்கொண்டுள்ளது.

இந்தியா 60 ஆண்டுகளுக்கு முன்னமே சுதந்திரம் பெற்றுவிட்டதே...?

60 வருடத்தில் ஒரு தேசத்தின் கலாச்சாரம் மாறாது. காஷ்மீரில் நடந்த விஷயங்கள் இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்கவில்லை. மக்கள் அதனை மறந்துவிடவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் கிலி பிடித்துவிட்டது. 25 வருடங்களுக்கு முன்னால் காஷ்மீர் பண்டிட்கள் வீடுகள் எரிக்கப்பட்டு காஷ்மீரை விட்டுத் துரத்தப்பட்டனர். இன்று அவர்ளைப் பற்றி பேசுவார் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. தில்லியிலும், பிற இடங்களிலும் அகதிகளைப் போல் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களது சொந்த பூமிக்கு அவர்கள் செல்வதைப் பற்றி யார் கவலை கொள்வது? புலம்பெயர்ந்த காஷ்மீர் சைவர்களுக்கு மீண்டும் இடமளிக்க எந்த அரசாங்கமாவது முன்வருமா? அவர்களை மீட்டு அவரிடத்திற்கு உங்களால் கொண்டுவர முடியுமா? யாருக்கும் துணிவில்லை.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018