மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: ஐ போன்களை இந்தியா முடக்கிவிடுமா?

சிறப்புக் கட்டுரை: ஐ போன்களை இந்தியா முடக்கிவிடுமா?

ஹரிஹரசுதன் தங்கவேலு

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனம் Apple Inc. கணினியிலிருந்து கைக்கடிகாரம் மற்றும் செயலிகளில் இருந்து செயற்கை மூளைகள் வரை ஆப்பிளின் தயாரிப்புகள் நுழையாத நாடுகள் இல்லை. ஒவ்வொரு வணிக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் இருப்பது இயல்பு, ஆனால் தன் தரமான விலையுயர்ந்த தயாரிப்புகளால் வாடிக்கையாளர்களைத் தங்கள் ரசிகர்களாக மாற்றிய நிறுவனம் ஆப்பிள். அப்படியான ரசிகர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு முதலில் பெற்றுத்தந்தது அதன் பெருமை மிகு தயாரிப்பான ஐ போன்.

2007இல் நிகழ்ந்த ஐபோனின் அறிமுகம் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது. பொத்தான்களிலிருந்து தொடுதிரை, மற்றும் இணைய தேடுதல், GPS வழிகாட்டி, பாடல்கள் என அனைத்தையும் ஒரு சிறு கருவியில் அடக்கி, பேசுவதற்கு மட்டுமான சாதாரண போன் அல்ல, இனி இதன் பெயர் ஸ்மார்ட்போன் என்று கூறிப் புதிய தொழில்நுட்பத்தை விற்பனைக்குக் கொண்டுவந்தார் ஸ்டீவ் ஜாப். அந்த நாள்முதல் ஆப்பிளின் கொடி, கோடிகள், பில்லியன்கள் வருமானத்தில் தொடர்ந்து உச்சத்தில் பறக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களுக்கு, போட்டியாளர்களை விட மூன்று மடங்கு அதிக விலை வைத்தாலும் அதை ரசிகர்கள் தொடர்ந்து வாங்குவதற்கு காரணம், அதன் தரம். பல வருடங்கள் பயன்படுத்தினாலும் பிரச்னையின்றி தொடர்ந்து உழைக்கும் IOS இயங்கு தளம், அதன் செயலிகள், அதன் தகவல் பாதுகாப்பு என ஐபோனின் வெற்றிக்கு பல காரணங்கள் இருப்பினும், ஐபோன் பயன்படுத்துவதை ஒரு சமூக அந்தஸ்தாக பயனாளர்களை நினைக்க வைத்ததே ஆப்பிளின் வெற்றிக்கு முதன்மை காரணம். இந்த ஒரு காரணத்துக்காக எத்தனை விலை வைத்தாலும் அதை எப்படியும் வாங்கிவிட அதன் ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கினர்.

உலகின் அதிக விற்பனை ஆகும் அலைபேசிகளில் ஐபோனுக்குத்தான் முதலிடம். 2007இலிருந்து 2017 வரை 100 கோடி ஐபோன்களை விற்றுச் சாதனை படைத்திருக்கிறது ஆப்பிள். ஒவ்வொரு வருடமும் சாம்சங்கும் ஆப்பிளும் இந்த முதலிடத்தை மாறி மாறிக் கைப்பற்றினாலும், இந்தியாவைப் பொறுத்தவரை நிலைமை வேறு! 2017ஆம் ஆண்டு விற்பனையில் XIOMI முதல் இடத்தையும் சாம்சங் இரண்டாம் இடத்தையும் பெற்றன. ஐபோனுக்கு இந்தியாவில் மூன்றாமிடம் எனினும் இந்தியாவில் மட்டுமே ஒரு கோடிப் பேர் ஐபோன் பயன்படுத்துகிறார்கள். இப்போது இந்த ஒரு கோடி ஐபோன்களின் சேவை முடக்கப்படுமா என்பது இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் (TRAI) ஆப்பிள் நிறுவனத்துக்கும் நடக்க இருக்கும் தர்ம யுத்தத்தின் முடிவில் தெரியும் !

என்ன பிரச்சினை?

இந்தியாவில் மொபைல் போன் பயனாளர்கள் சந்திக்கும் மிகப் பெரும் சிக்கல் டெலிமார்கட்டிங் அழைப்புகள். எப்படியாவது பயனாளர்களின் எண்களைப் பெறும் இந்த நிறுவனங்கள் தங்கள் தினசரி வணிக அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளால் வாடிக்கையாளர்களை வதை செய்வதையே தங்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. வணிக ரீதியான அழைப்புகளைக் கடந்து கோடி ரூபாய் பரிசு, இலவச மசாஜ், என மோசடிக் குறுஞ்செய்திகள் பல்கிப் பெருகும் நிலையைக் கண்டு இதற்கு நிரந்தர முடிவு கட்ட நினைத்த TRAI, ஒரு பிரத்யேகச் செயலியை உருவாக்கியது. அதன் பெயர் DND 2.0. பயனாளர்கள் இந்தச் செயலியை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவுவதன் மூலம் அவர்களுக்கு வரும் அழைப்புகளையும் செய்திகளையும் கண்காணிக்கும் TRAI தேவைற்ற ஸ்பாம் செய்திகளில் இருந்து பயனாளர்களைக் காக்கும். மேலும் பயனார்களும் இந்த செயலியின் மூலம் மோசடி அழைப்புகள், செய்திகள் மீது புகார் அளிக்கலாம். அப்படி அளித்த புகாரின் தற்போதைய நிலை, நடவடிக்கை என அனைத்தையும் பயனாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்டு இந்த செயலியை வடிவமைத்தது TRAI.

வடிவமைத்ததுடன் நில்லாமல் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. Telecom Commercial Communication Customer Preference Regulation 2018 என்ற அந்த அறிக்கையில், DND2.0 செயலியை வாடிக்கையாளர்கள் தரவிறக்கிக்கொள்வதற்கான வசதிகளைச் செய்துதர வேண்டும், இதற்கான கால அவகாசம் 6 மாதங்கள். இந்த ஆறு மாதங்களுக்குள் எந்த மொபைல் நிறுவனம் இந்தச் செயலியை அனுமதிக்கவில்லையோ அதன் சேவையை உடனடியாக முடக்க வேண்டும் எனக் கட்டளையிட்டது. அறிக்கையை வாசித்த கூகிள் நிறுவனம் தன் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இந்தச் செயலியை உடனடியாக அனுமதித்தது.

கைவிரித்த ஆப்பிள்

ஆனால் ஆப்பிள் தன் IOS இயங்கு தளத்தில் இந்தச் செயலியை அனுமதிக்க மறுத்தது, காரணம், ஐபோன் பயனர் பாதுகாப்புக் கொள்கையின்படி அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவை பயனாளிகளின் தனிப்பட்ட உரிமை. அதைப் பெறவோ அந்தத் தகவல்களை உபயோகித்துக்கொள்ளவோ எந்த ஒரு மூன்றாம் தரப்புச் செயலிகளுக்கும் அனுமதி இல்லை. ஆகவே DND 2.0 செயலியை அனுமதிக்க முடியாது என ஆப்பிள் கைவிரித்துவிட்டது. இதனால் கோபமுற்ற TRAI இந்த செயலியின் பயன்பாடு, உருவாக்கியதற்கான காரணம், இந்திய நாட்டு சட்ட திட்டங்களை விளக்கி ஆப்பிளுக்கு ஒரு எச்சரிக்கை அறிக்கை அனுப்பியது. அதற்கும் அசராத ஆப்பிள் இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் எங்கள் IOS 12 இயங்கு தளத்திலேயே இதற்கு ஒரு வசதி உள்ளது. ஆகவே உங்கள் செயலி தேவை இல்லை என மறுத்துவிட , கடுப்பான TRAI ஆறு மாத காலத்துக்குள் இந்தச் செயலியை அனுமதித்தே ஆக வேண்டும், இல்லையெனில் ஐபோன்களின் பயன்பாடு இந்தியாவில் முடக்கப்படும் எனத் தற்போது மிரட்டியுள்ளது.

இதுபோன்ற மிரட்டல்கள் ஆப்பிளுக்குப் புதிதல்ல. அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் தேவாலயத்தில் புகுந்து 27 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைகாரர் டெவின் பாட்ரிக் கெல்லி (Devin Patrick Kelley) ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர். சம்பவ இடத்திலிருந்து இவரது ஐபோனைக் கைப்பற்றிய எஃப்.பி.ஐ., அதைத் திறக்க முடியாததால் குற்றவாளி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள ஆப்பிளின் உதவியை நாடியது. ஆனால் கொலைகாரனாக இருந்தாலும் அவர் எங்கள் நிறுவனத்தின் பயனாளர், அவர் தகவல்களை பகிர முடியாது என ஆப்பிள் மறுக்கவே எஃப்.பி.ஐ.க்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் பெரும் சட்டப் போராட்டம் வெடித்தது. அதன் இறுதியில் எஃப்.பி.ஐ. அமைப்பிற்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஆப்பிள். அதற்குள் பல தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு ஒரு லட்சம் டாலர்கள் செலவு செய்து குற்றவாளியின் ஐபோனைச் சட்ட விரோதமாகத் திறந்தது எஃப்.பி.ஐ.

ஆக அமெரிக்கத் தீர்ப்பிற்கே மசியாத ஆப்பிள் இந்தியாவின் மிரட்டலுக்குப் பணிந்துவிடுமா? முறைப்படி இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது ஆப்பிள். இந்த வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே இந்தியாவில் ஐபோனின் எதிர்காலம் அமையும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018