மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

விஜய் சேதுபதி: அவல நகைச்சுவையின் நாயகன்!

விஜய் சேதுபதி: அவல நகைச்சுவையின் நாயகன்!

விமர்சனம்: ஜுங்கா

மதரா

காமெடியான நிபந்தனைகளுடன் ஆள்கடத்தலில் ஈடுபடுவது, ‘நானும் ரவுடி தான்’என்று நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு சுற்றுவது, அடி கொடுக்காமல் அடி வாங்கும் அடியாளாக வருவது என்ற வரிசையில் விஜய் சேதுபதி கஞ்ச டானாக வரும் படம் ஜுங்கா. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மூலம் கவனம் ஈர்த்த கோகுல் மீண்டும் அதே பாணியில் ஜுங்கா படத்தையும் உருவாக்கியுள்ளார்.

கன்டெக்டராக கோவையில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருக்கும் ஜுங்கா எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் நான்கு பேரை அடித்துவிடுகிறார். அப்போது தான் அவரது அம்மா (சரண்யா பொன்வண்ணன்) தனது குடும்பமே ஒரு ‘டான்’ குடும்பம் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார். மேலும் அவரது அப்பா, தாத்தா இருவரும் பெருமைக்கு செலவழித்தே குடும்ப சொத்தான ‘சினிமா பேரடைஸ்’ என்ற தியேட்டரை இழந்ததையும் சொல்ல ஜுங்கா டானாக உருமாறுகிறார். நண்பனுடன் (யோகி பாபு) சென்னை சென்று மற்ற டான்களுக்கு வரும் ஆஃபர்களையும் குறைந்த விலையில் ஜுங்கா கைப்பற்றுகிறார். ஆனால் வழக்கத்துக்கு மாறான ‘கஞ்ச’ டானாக வரும் அவர் தியேட்டரை வாங்க ஒரு கோடியை தயார்செய்து கேட்கும் போது தியேட்டர் ஓனரான செட்டியாருக்கும் அவருக்கும் முட்டிக்கொள்கிறது. செட்டியாரிடமிருந்து தனது தியேட்டரை ‘கஞ்ச டான்’ எப்படி வாங்குகிறார் என்பதாகக் கதை விரிகிறது.

கதைச் சுருக்கத்தில் கதாநாயகி பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும் ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். ஜுங்காவின் வாழ்வில் ஏற்படும் முக்கிய மாற்றத்துக்குக் காரணமாக அமையும் சண்டை அவரது காதலியால் (மடோனா) ஏற்படுகிறது. தனது சபதத்தை நிறைவேற்ற ஜுங்கா போடும் திட்டத்தின் மையப்புள்ளியாக மற்றொரு நாயகி (சாயிஷா) வருகிறார்.

விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகிய இருவரும் படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கின்றனர். பணத்தை மிச்சம் பண்ணுவதற்காக விஜய் சேதுபதி செய்யும் ஒவ்வொரு காரியமும் ரசிக்க வைக்கின்றன. தனித்துவமான கதாபாத்திரங்களின் உருவாக்கம் படத்தின் மிகப் பெரிய பலம். டான் அம்மா, டான் பாட்டி, டான் சோப்ராஜ், ‘பொயட்’ தினேஷ், என்கவுண்டருக்கு அழைத்துச் செல்லும் போலீஸ், இன்ஸ்பெக்டர் முதலான கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாகப் படைக்கப்பட்டுள்ளன. அதில் நடித்தவர்கள் அதற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

குடும்ப வரலாற்றை சரண்யா சொல்லும் விதமும், செட்டியார் மற்றும் அவரது ஆள்களுக்குப் பாட்டி குடைச்சல் கொடுப்பதும் பார்வையாளர்களை வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்றன. ஜுங்காவின் கஞ்சத்தனத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது யோகி பாபுதான். வார்த்தைகளாலும் உடல் மொழியாலும் காமெடி பண்ணிக்கொண்டே இருக்கிறார்.

அழகுப் பதுமையாக வந்து நடனம் ஆடும் சாயிஷா விஜய் சேதுபதி தனது வாழ்க்கை பற்றிக் கூறும்போது முதிர்ச்சியான நடிப்பைத் தனது நுட்பமான முகபாவங்களில் வெளிப்படுத்துகிறார்.

முதல் பாதியில் இடம் பெற்ற காட்சிகள், அறிமுகமான கதாபாத்திரங்கள் படத்தின் தன்மைக்குக் கச்சிதமாக பொருந்திப்போகின்றன. உதாரணமாக டான்களின் மீட்டிங் நடைபெறும்போது அத்தனை டான்களும் படத்தின் பாணிக்கு ஏற்ப படைக்கப்பட்டிருப்பர். அதே நேரம் இரண்டாம் பாதியில் பாரிஸில் வரும் போலீஸ், தீவிரவாதக் குழு போன்றவை வழக்கமான தன்மையுடனே வெளிப்படுவதால் அந்த இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால், அதிலும் ஏற்கனவே அறிமுகமான கதாபாத்திரங்கள் பண்ணும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

கிளைமேக்ஸ் துப்பாக்கிச் சண்டையில் தியேட்டரில் சிலை வைக்க வேண்டும், டிக்கெட் ரேட்டை விட பாப்கானை குறைவாக விலைக்கு விற்க வேண்டும் என்று கூறும்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.

ஜுங்கா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களின் அணுகுமுறைகள் பல இடங்களில் திரைத்துறையை விமர்சிக்கின்றன. படம் சில இடங்களில் சில திரைப்படங்களை, சமூகத்தை, அரசியலையும் பகடி செய்கிறது. நேரடியாகக் கதைக்குள் பேசுவதாக இருந்தாலும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

தான் எடுத்துக்கொண்ட பாணியிலிருந்து பெரிதாக விலகாமல் முழுமையான படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர். யதார்த்தத்திற்கும் மிகுபுனைவுக்கும் நடுவே தனது திரைக்கதையை அமைத்து அதைப் பார்வையாளர்களிடத்திலும் சரியாகக் கொண்டுசேர்த்துள்ளார். படத்தின் வண்ணமும் இதற்குப் பொருந்திப்போயுள்ளது.

அவல / அபத்த நகைச்சுவைப் பாணி சமீபகாலமாகப் பல இயக்குநர்களால் முன்னெடுக்கப்படுகிறது. சமகால வாழ்வை மாறுபட்ட சித்தரிப்பின் மூலம் விமர்சனத்துக்கு உட்படுத்துவதே இந்தப் பாணி. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அபத்தமாகத் தோன்றும் சித்தரிப்புகள் சற்று நுட்பமாகப் பார்க்கும்போது கூர்மையான விமர்சனத்தைக் கொண்டிருக்கும். அவல / அபத்த நகைச்சுவையின் தன்மை இது.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல் இத்தகைய பாணியில் உருவாகும் படங்கள் சற்றுப் பிசகினாலும் பார்வையாளர்களால் உடனடி விமர்சனத்துக்கு உள்ளாகும். எந்தப் பாணியில் படம் இயக்குகிறோம், குறிப்பிட்ட காட்சியை பார்வையாளர்கள் எந்த உணர்வு நிலையுடன் உள்வாங்க வேண்டும் என்ற தெளிவு இயக்குநருக்குக் கட்டாயம் இருக்க வேண்டும். அதை வசனங்கள், துண்டுக்காட்சிகள், தொழில்நுட்ப உத்திகள் மூலம் சரியான விதத்தில் திரைக்குக் கடத்தும் திறன் கைவரப் பெற வேண்டும். அதோடு நடிகர்களின் பங்களிப்பும் இந்த இடத்தில் முக்கியமானது.

சூது கவ்வும் படத்தைத் தொடந்து பல படங்கள் மேற்சொன்ன பாணிகளில் வெளியாகியிருந்தாலும் மூடர் கூடம், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய சில படங்களே வரவேற்பு பெற்றன. இயக்குநர்கள் திரைக்கதைக்கும் அதன் பாணிக்கும் நேர்மையாக இருந்ததன் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது.

வெற்றி பெற்ற படங்களில் உள்ள மற்றொரு பொதுத் தன்மை அதில் பெரும்பாலும் விஜய் சேதுபதியே கதாநாயகனாக நடித்துள்ளார். கமர்ஷியல் கதாநாயகனுக்கான மேற்பூச்சுகள் அற்ற இயல்பான நடிப்பால் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்கிறார். இதுவே குறுகிய காலத்தில் முன்னணிக் கதாநாயகர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றதன் காரணம். விஜய் சேதுபதியின் வளர்ச்சியோடு தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ள அவல நகைச்சுவை பாணியையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. தன்னால் செய்ய முடியாததைத் தனது கதாநாயகன் செய்கிறான் என்று ரசித்த தமிழ் ரசிகர்கள், தன்னைப் போலவே ‘பல்ப் வாங்குகிற’ யதார்த்தமான கதாநாயகனை ரசிக்கத் தொடங்கினார்கள். இந்தப் பாணியில் விஜய் சேதுபதியின் நடிப்பு கச்சிதமாக பொருந்திப் போகிறது. இளம் தலைமுறை இயக்குநர்கள் உருவாக்கும் இதுபோன்ற படங்களின் நாயகனாக விஜய் சேதுபதி உருவெடுத்துள்ளார்.

மற்ற பாணியிலான படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் மேற்சொன்ன படங்களில் அவரைத் தவிர யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு இதுபோன்ற படங்களில் கச்சிதமாக அவர் பொருந்திப்போகிறார். இந்தக் காலகட்டத்துக்கான பாணியாக அவல / அபத்த நகைச்சுவை உள்ளது என்றால் இந்த காலகட்டத்துக்கான நாயகனாக விஜய் சேதுபதி உள்ளார். அதை ஜுங்காவும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018