மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: நாப்கினுக்கு வரி விலக்கு - அரசு மனம் மாறியது ஏன்?

சிறப்புக் கட்டுரை: நாப்கினுக்கு வரி விலக்கு - அரசு மனம் மாறியது ஏன்?

ரோகன் வெங்கடராமகிருஷ்ணன்

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதில் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. எனினும் அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவே இல்லை. தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவாகியுள்ள நிலையில், சானிட்டரி நாப்கின்கள் விவகாரத்தில் அரசு தன் மனதை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றம் ஏன்? யாருக்குச் சாதகம்? யாருக்குப் பாதகம்?

ஜூலை 22ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இதில் சானிட்டரி நாப்கின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. சானிட்டரி நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டிலிருந்து பூஜ்யம் விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது, இதனால் நாடு முழுவதிலுமிருந்து அரசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வரிக் குறைப்புக்கு வரவேற்பளித்துள்ளனர். நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு பிரச்சாரம் நடத்தியவர்கள் அனைவரும், இந்த வரிக் குறைப்பு ஒரு மாபெரும் வெற்றி என்று கொண்டாடிவருகின்றனர்.

வரி விலக்கு அளிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிப்பதற்கு ஏன் ஓராண்டு காலத்தை அரசு எடுத்துக்கொண்டது? வாஷிங் மெஷின்கள், வேக்கம் கிளீனர்கள், டிவி போன்றவற்றுக்கான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினரைக் கவருவதற்காகவே வரிகளை அரசு குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் அருண் ஜேட்லி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோவில் நாப்கின்களுக்கு 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறார். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையிலும் இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, சானிட்டரி நாப்கின்களுக்கு மொத்தமாக 13 விழுக்காடு வரி விதிக்கப்பட்டதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாப்கின்களுக்கு 12 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், உள்ளீட்டு வரிக் கடன் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். ஒரு பொருளை வாங்கும் வணிகர், அப்பொருளைத் தயாரிப்பதற்கான ஒவ்வொரு படிநிலைக்கும் வரி செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் ஒரு உற்பத்தியாளர், அதற்கான மூலப்பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டும்; பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்கும் வரி செலுத்த வேண்டும். இந்த இரு வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காகத்தான், மூலப் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட மொத்த வரியையும் அரசு திருப்பிச் செலுத்திவிடுகிறது. அதாவது ரீஃபண்ட் செய்து விடுகிறது. இதுதான் உள்ளீட்டு வரிக் கடன் என்று கூறப்படுகிறது.

சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் கிடைக்காது என்று மேற்கண்ட வீடியோவில் அருண் ஜேட்லி வாதிடுகிறார். அதாவது, மூலப் பொருட்களை வாங்கும்போது அவற்றுக்கு உற்பத்தியாளர்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், நாப்கின்களை விற்பனை செய்யும்போது, உள்ளீட்டு வரிக் கடன்களைத் திரும்பப் பெற இயலாது. அதேநேரத்தில், வெளிநாட்டு உற்பத்தியாளர்களோ மூலப் பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டியதில்லை; விற்பனை செய்வதற்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை. இதன் விளைவாக வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

அந்த வீடியோவில் அருண் ஜேட்லி, “நாப்கின்களுக்கான 12 விழுக்காடு வரியை நீக்கினாலோ, குறைத்தாலோ, இந்திய உற்பத்தியாளர்கள் எவரும் மிஞ்சமாட்டார்கள். வெறும் சீனப் பொருட்கள் மட்டுமே இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் தொழிலும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் பேசியுள்ளார்.

நாப்கின்களுக்கு வரி நீக்கப்படக் கூடாது என்று அருண் ஜேட்லி கூறுகிறார். ஆனால், தற்போது நிதித் துறையைக் கவனித்து வரும் அமைச்சரான பியூஷ் கோயல், நாப்கின்களுக்கான வரியைக் குறைத்துள்ளார். அருண் ஜேட்லி எதைச் செய்யக் கூடாது என்று கூறினாரோ, அதைத்தான் பியூஷ் கோயல் நிறைவேற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல், நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு பாஜக கட்சியினர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.

பாராட்டுகள் பொழிந்துவரும் அதே வேளையில், நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதால் விலை உயரும் என்று பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர். உள்ளீட்டு வரிக் கடன் கிடைக்காது என்பதால், நாப்கின்களின் விலையை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர்த்துவார்கள் என்றும், அதன் விளைவாக நுகர்வோருக்கு அதிக விலையில் நாப்கின்கள் சென்றடையும் என்றும் வாதிடப்படுகிறது. நாப்கின்களுக்கு 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டதை இதுநாள் வரை ஆதரித்து வந்தவர்களும் இதே வாதத்தைத்தான் முன்வைக்கிறார்கள்.

நாப்கின்களின் விலை அதிகரிக்காது என்று சிலரும், வரிக் குறைப்பால் விலையும் குறையாது என்றும் பலதரப்புகளில் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் கேள்வியெழுப்பப்பட்ட போது, சானிட்டரி நாப்கின்களுக்கான உள்ளீட்டு வரிக் கடன் 3 முதல் 4 விழுக்காடு வரை இருப்பதாகவும், உற்பத்தி செய்யப்பட்ட நாப்கின்களின் விலை குறைவாக இருக்கும்படி அரசு உறுதி செய்துகொள்ளும் என்றும் நிதியமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

அரசு எதனால் தனது மனதை மாற்றிக் கொண்டு நாப்கின்களுக்கு வரி விலக்கு அளித்தது? இந்த வரிக் குறைப்பால் சீனப் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் வந்து குவியாதா? சானிட்டரி நாப்கின்களின் நுகர்வோருக்கான விலையில் என்னென்ன மாற்றம் ஏற்படும்? உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கான சாதக, பாதகங்கள் என்ன? வரியைக் குறைக்க முடிவு செய்தாலும், அதற்கு ஏன் ஓராண்டு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் அரசுதான் விளக்கமளிக்க வேண்டும்.

நன்றி: ஸ்க்ரால்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: 1967க்குப் பிறகு தமிழக நில உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்! (பாகம் - 2)

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018