மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கட்சியினருக்கு மாயாவதி கட்டுப்பாடு!

கட்சியினருக்கு மாயாவதி கட்டுப்பாடு!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்துத் தனது பணிகளைத் தொடங்கியுள்ளார். கட்சியில் ஒழுக்கத்தை அதிகரிப்பதற்காகக் கடுமையான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுவருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பல்வேறு கட்சிகளுடன் பேசிவரும் இந்த நேரத்தில் கட்சியின் உள்ளேயிருந்து எந்தத் தவறான தகவலும் வெளியே சென்றுவிடக் கூடாது என்பது அவரது எண்ணம்.

கடந்த ஜூலை 16ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் துணை தலைவருமான ஜெய்பிரகாஷ் சிங் பேசும்போது, ராகுல் காந்தி தனது தந்தையைப் போல் இல்லாமல், தாய் சோனியாவைப் போல் உள்ளார். இதன் காரணமாக அவர் பிரதமராவதற்கு வாய்ப்பில்லை” என்ற கருத்தை தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அவரது பதவியைப் பறித்த மாயாவதி பின்னர் அவரைக் கட்சியிலிருந்தும் நீக்கினார். ஜெய்பிரகாஷ் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றொரு தேசிய ஒருங்கிணைப்பாளரான வீர் சிங்கின் பதவியையும் மாயாவதி பறித்தார். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயற்சித்துவரும் நிலையில், ராகுல் குறித்த விமர்சனம் சிக்கலாக அமையக்கூடும் என மாயாவதி கருதுவதையே இது காட்டுகிறது.

மாயாவதி மற்றும் சோனியா காந்தி இடையே இணக்கமான உறவு இருந்தாலும் ராகுலுடனான மாயாவதியின் நட்பு சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் மாயாவதி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தவர் ராகுல் காந்தி.

எனினும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பழைய கசப்புணர்வுகளை கடந்து இயல்பாகவே அவர்கள் இருந்தனர். எதிர்கால அரசியல் நன்மையான முயற்சியில் ஈடுபட்டுவரும் வேளையில், பிற கட்சிகள் மீதான விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே கட்சியில் கடுமையாக நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் கூற வேண்டாம் எனக் கட்சி தொண்டர்களுக்கும் தலைவர்களும் ஒரு வித எச்சரிக்கையை மாயாவதி வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் மாயாவதி வெளியிட்டிருந்தார். அதாவது, தங்களது கட்சி எந்த சமூக வலைதளத்திலும் இல்லை. பகுஜன் சமாஜ் பெயரில் சமூக வலைதளத்தில் உள்ள பக்கங்கள் போலியானவை என்று அவர் தெரிவித்தார்.

தேவாஷிஸ் ஜராரியா என்பவர் தன்னை பிஎஸ்பி கட்சியின் உறுப்பினர் என்று கூறிக்கொண்டதோடு பிஎஸ்பி யூத் என்ற பெயரில் இணையப்பக்கம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இளைஞர்களிடம் கட்டணமாக பணத்தையும் பெற்றுவந்த அவர் பிஎஸ்பி ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்றுவந்துள்ளார்.

இதற்குத் தனது அறிக்கையில் விளக்கமளித்திருந்த மாயாவதி, சுதிந்திர பதோரியா என்பவர் மட்டுமே பிஎஸ்பியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே செய்தித் தொடர்பாளர் என்று தெரிவித்தார்.

மாயாவதியின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஒருவர் ஸ்க்ரோல் ஊடகத்திடம், “தனது கட்சியின் சார்பாகப் பதற்றமான சூழ்நிலையில் பலரும் பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மாயாவதி கவலைப்படுகிறார். எனவே, அனைவரையும் ஒழுங்குப்படுத்தக் கையில் சாட்டையை எடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018