மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிறப்புத் தொடர்: பேசிக்கொள்ள விஷயம் இருக்கிறதா?

சிறப்புத் தொடர்: பேசிக்கொள்ள விஷயம் இருக்கிறதா?

வெண்பா கீதாயன்

ஓவியம்:சசி மாரீஸ்

நீ கூடிடு கூடலே-13: உறவுகளை அலசும் தினசரி தொடர்

எப்படியும் ஒரே வீட்டில் இருப்பதால் கொஞ்ச நாட்களில் சுவாரஸ்யமற்ற காதலர்களாக மாறிவிடுவோம். ஏனெனில் காதலிக்கும்போது காதலை அதிகரிப்பதில் தொலைவும் நேரமின்மையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘அச்சோ, 800 கிமீட்டருக்கு அப்பால் இருக்கிறானே' என்கிற எண்ணம் காதலை அதிகப்படுத்தும். 'பேசணும்போல இருக்கு, ஆனா, வேலைல இருப்பாளே' என்று தேடும்போது காதலின் அளவு ஜிவ்வென ஏறியிருக்கும்.

90களின் முடிவுவரை காதல்கள் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் இந்தத் தொலைவும் ஆவலும்தான். காதலனை மாதம் ஒருமுறை ஏதாவது பொதுஇடத்தில் ஒரு ஐந்து நிமிடம் சந்திக்கக் கிடைக்கின்ற தருணம் அவர்களுக்கு ஆயுட்காலம் போன்று அமைந்தது. இப்போது காதலில் அத்தகைய அருமை பேணுதல் அறவே கிடையாது.

இருவரும் ஒருவரை ஒருவர் அணுகுவது எளிது; ஒரே வீடென்றால் கேட்கவே வேண்டாம். பணி நேரம் தவிர்த்து மீதிநேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே ஆக வேண்டும். முதலில் காதலாக இருக்கும். அடுத்து கூர்ந்து கவனித்தால் காதலியின் மூக்கு சற்றுக் கோணலாகத் தெரியும். காதலிக்கோ காதலனின் முகம் அழுக்கடைந்ததாகத் தோன்றும். இது ஒரு இயல்பான மனநிலை. ஒரு சூழலை சுவாரஸ்யமாக்கிக்கொள்ள அதில் இருக்கின்ற குறைகளைக் கண்டறிந்தால் போதும்.

"டேய், ஏன்டா கருப்பாகிட்டே போற" என்று காதலி வாயைப் பிடுங்ககூடும். உடனே அவன், "ஆமாடி, நீ பெரிய பேரழகி, நீயே சுமார்தான், நானா இருக்கப்போய் உன்ன லவ் பண்ணேன்" என்று வார்த்தையை விடுவான். இது ஒரு உலகப் போருக்கான அறைகூவல் போன்றதாகும். பேச விஷயம் இல்லாத பட்சத்தில் சண்டைகள் வளரத் துவங்கும். இத்தனை நாள் ஜாலியாக இருந்த நிகழ்வுகள் இப்போது கடுப்பாகத் தோன்றும். அடுக்கி அடுக்கி பெரிய பிரச்சினையாக்கி ஒருநாள் "உன்னப்போய் லவ் பண்ணேன் பாரு, என்ன செருப்பால அடிச்சுக்கணும்" என்று இறுதி உரை நிகழ்த்தப்பட்டு உறவு இனிதே நிறைவடையும்.

இதற்கு ஒரே வழி ஒரே வீட்டிலிருந்தாலும் தனித்தனியாக உங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கி ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள். ஓவியம், நடனம், ஜிம், இசை, விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். என்னைப்போல சிறந்த சோம்பேறியாக இருப்பவர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பின்பற்றலாம். இத்தகைய செயல்கள் உங்களுக்கென ஒரு நேர மதிப்புடன் கற்றல் பண்பையும் வளர்க்கிறது.

இதற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எழலாம்.

இவ்வாறு ஒரு பயிற்சி பெற்று திரும்புவதால் அந்நாளின் மன இறுக்கம் அகலும். தேவையற்ற வம்பிழுப்பதற்கான ஸ்டாமினா குறைந்திருக்கும். இவற்றைவிட முக்கியமாக, உரையாடுவதற்கு விஷயம் கிடைக்கும்.

காதலில் உரையாடல் கலை முக்கியம். அன்றைய பயிற்சி குறித்தோ அன்று வாசித்த பக்கங்கள் குறித்தோ விவாதிக்கலாம். இருவருக்கும் கொஞ்சம் தகவல்கள் தெரியவரும். மொட்டை மாடியிலோ பால்கனியிலோ இரவின் குளுமையில் அமைதியாகப் பேசியபடி காதலை நிறைவுறச் செய்யலாம்.

(காதல் தொடரும்)

(கட்டுரையாளர்:

வெண்பா கீதாயன்

எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளை பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018