மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

சிறப்புக் கட்டுரை: வெவ்வேறு பாதையில் வடக்கும் தெற்கும்!

சிறப்புக் கட்டுரை: வெவ்வேறு பாதையில் வடக்கும் தெற்கும்!

மிகிர் சர்மா

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருக்குக் கிடைத்த வரவேற்பு அவரைத் திடுக்கிடச் செய்திருக்க வேண்டும். பாதி நகரமும் மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டியதுபோல் தெரிந்தது. மேலும், அவர் வரவிருந்த பாதைகளில் ‘மோடியே திரும்பிச் செல்’ என்ற வாசகம் பொருந்திய பேனர்கள் பொருத்தப்பட்டிருந்தன. கறுப்புக் கொடி விவகாரத்தை அறிந்த பிரதமர் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார். ஆனால், போராட்டம் செய்தவர்களோ விவரமாகக் கறுப்பு பலூன்களை காற்றில் பறக்கவிட்டனர்.

இந்த எதிர்ப்புகள் முழுவதும் தனிப்பட்ட எதிர்ப்புகள் அல்ல. டெல்லி அமைப்பின் உயர் பிரதிநிதியான மோடி தமிழர்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்படுவதாகச் சென்னையின் போராட்டக்காரர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவதே போராட்டக்காரர்களின் கோபத்துக்குக் காரணம். ஆனால், தென்னிந்தியாவின் ஏமாற்றமும், ஆதங்கமும் ஒரு தனிப் பிரச்சினைக்கோ அல்லது ஒரு மாநிலத்துக்கோ மட்டுமானதல்ல. பாஜகவும் கர்நாடகாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலை கர்நாடகாவின் பெருமைக்கான ஒரு பொது வாக்கெடுப்பாக மாற்றுவதில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தீவிரமாக இருந்தார்.

இந்தியா ஐரோப்பாவை விடப் பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும், ஆப்பிரிக்காவை விட அதிக மக்கள்தொகை கொண்டதாகவும் உள்ளது. ஆனால், எப்போதுமே இந்தியா முழுமையாக ஒத்திசைந்ததில்லை. ஒரு ரூபாய் நோட்டில் 17 மொழிகளுக்கான இடம் வழங்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டமோ 22 மொழிகளை இந்தியாவின் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கிறது. அவை இருபத்தி மூன்றாவது மொழியான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், வடஇந்திய மாநிலங்களின் மொழியான இந்தி மொழியே ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்திய மாநிலங்களை இணைக்கும் மொழியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பினால் தென்னிந்தியாவில், முக்கியமாகத் தமிழ்நாட்டில் கலவரங்களும், பிரிவினைவாத இயக்கங்களும் கூட விளைந்தன. ஆகையால் மாநிலங்களை இணைக்கும் மொழியாக ஆங்கிலம் நிரந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தச் சமரசம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. இந்தி பேசும் மாநிலங்களும், இந்தி பேசாத மற்ற மொழி மாநிலங்களும் ஒன்றோடு ஒன்று குழம்பிக்கொண்டன.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த ஒற்றுமை அண்மையில் உடைந்துவிட்டது. இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் வடக்கிலும் தெற்கிலும் ஓட்டுகளை வாங்கி இரு பிராந்தியங்களையும் இணைத்து வந்தது. அதற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த பாஜக அரசு வடக்கிலும் மேற்கிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், தென்மாநிலங்களில் தனது இருப்பைப் பதிவு செய்ய முடியவில்லை. முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வரலாறு என்பதே இல்லை.

இதைவிடப் பெரிய சீர்குலைவு என்னவென்றால், வடக்கும் தெற்கும் மக்கள்தொகையில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் வேறுபடுகின்றன. செல்வத்துடன் இருக்கும் தென்மாநிலங்கள் வடமாநிலங்களிடம் நிதியை இழப்பதை வெறுக்கின்றன. தமிழ்நாடு டெல்லிக்கு அனுப்பும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், டெல்லியிலிருந்து 30 ரூபாய் மட்டுமே தமிழகத்துக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஆனால், பீகாருக்கோ ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 219 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. தென்மாநிலங்களின் நிதியை மத்திய அரசு வடமாநிலங்களுக்குத் திருப்புவதாக அண்மையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தியாவின் வடமாநிலங்களின் மனிதவளக் குறியீடுகள் ஆப்பிரிக்காவின் சகாரா பிராந்தியத்துக்கு இணையாக உள்ளன. ஆனால், தென்மாநிலங்களின் மனிதவளக் குறியீடுகளோ மேல் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு இணையாக உள்ளன. முக்கியமாக, குறிப்பாகப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சராசரியாகத் தென்மாநில பெண்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை. வடமாநிலங்களிலோ பெண்கள் சராசரியாக மூன்று அல்லது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த விவரங்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, தென்மாநிலங்கள் அரசியல் ரீதியாகச் சிறுபான்மையினராக மாற்றப்படலாம் என்ற வருந்தத்தக்க முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பாஜகவை ஆதரிக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். பாஜகவின் ஆதரவு குறைவான பகுதிகளில் மக்கள்தொகை சுருங்கிக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் இந்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துகிறது. ஆனால், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான வரிப் பகிர்வு, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆகியவற்றைப் பொருத்தவரை 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஒரு சமரசம் ஏற்பட்டது. ஆகவே 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களே இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்பிறகு ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே ஒரு மறைமுகமான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

வரிப் பகிர்வு என்று வரும்போது இந்தச் சமரச ஒப்பந்தத்தை தற்போதுள்ள மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு நிதி பெற வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் பாகுபாடற்ற நிதிக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு மத்திய அரசுக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டியதில்லை என்றாலும் கூட, இக்குழு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்குவதற்கான உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த நிதிக் குழுவில் 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களுக்குப் பதிலாக, 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களைப் பயன்படுத்துமாறு நிதிக் குழுவுக்கு மத்திய அரசு விதிமுறைகளை விதித்துள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடுமையாக உழைத்த தென் மாநிலங்களின் வரி வருவாய் மத்திய அரசின் விதிமுறைகளால் இழக்கக்கூடும் என்று தென்மாநிலங்கள் வருந்துகின்றன.

முந்தைய ஆட்சிக் காலங்களில், இதுபோன்ற பிரச்சினை அரசியல் அமைப்புக்குள்ளேயே அமைதியாகப் பேசித் தீர்க்கப்பட்டன. ஆனால் இப்போது, வடமாநிலங்களின் பிரதிநிதியாக இருக்கும் பாஜகவும், தென்மாநிலங்களை ஆளும் பிராந்திய அரசியல் கட்சிகளும் இவ்விவகாரம் குறித்து ஒரு சமரசத்துக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் முற்றிலும் வேறான ஆர்வங்களும், தேவைகளும், எதிர்பார்ப்புகளும் உள்ளன. இப்பிரிவுகளைச் சீர்செய்வது எதிர்காலத் தலைவர்களின் தொடர் பணியாக இருக்கும்.

நன்றி: பிசினஸ் ஸ்டாண்டர்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: நிதியமைச்சர்களுக்கு ஒரு திறந்த மடல்!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வியாழன் 17 மே 2018