மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஏப் 2018

விஷாலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

விஷாலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

தென் மாநிலங்களில் டிஜிட்டல் கட்டணங்களைக் குறைக்க வேண்டி, திரைத் துறையினரால் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. அவர்களுடன் தமிழ் திரைப்படத் துறையும் இணைந்து போராடும் என நீங்கள் அறிவித்தீர்கள். பிற மாநிலங்கள் டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்பட்டது. தமிழ் சினிமாவில் புதிய படங்களைத் திரையிடுவதை நிறுத்தி, படப்பிடிப்புகளையும் ரத்து செய்து ஒட்டுமொத்த திரைப்படத் தொழிலையும் முடக்கிவைத்துள்ளீர்கள்.

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்திய நீங்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறபோது புதுப் புது கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினீர்கள். தெளிவான முடிவு, அதனை அமல்படுத்தத் திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்படுகிற எந்த ஒரு போராட்டமும் மாலுமி இல்லாத கப்பலைப் போன்று தடுமாறி திசைமாறி பயணிக்கும். அப்படித்தான் நம்முடைய வேலைநிறுத்தம் பயணிக்கிறது.

டிஜிட்டல் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்திய போராட்டம் வழி மாறி, ’இனிமேல் VPF கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்ட மாட்டோம், அதற்காகத்தான் போராட்டம்’ என மாற்றிப் பேசத் தொடங்கினீர்கள். ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றீர்கள். இவை எல்லாமே நடைமுறை சாத்தியம்தான். இதனை அமல்படுத்த நீங்கள் முயற்சிக்கும் வழிமுறைதான் சரியில்லை. குறிப்பிட்ட சில திரையரங்குகளின் உரிமையாளர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, மொத்தத் திரையரங்க உரிமையாளர்களையும் பாதிக்கிற வேலைநிறுத்தத்தை அறிவித்தது நியாயம்தானா?

எல்லோரும் திருடுகிறார்கள் என்று புறம் பேசலாமா? தவறு செய்கிற தியேட்டர் உரிமையாளர்களை ஆதாரத்துடன் பகிரங்கமாக அறிவிக்கலாமே.

கடந்த 45 நாட்களாக வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்கள், வருமானத்தை இழந்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களின் இழப்புக்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்? இப்போது புது டிஜிட்டல் நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் படங்களைத் திரையிடத் தயாராக இருக்கின்றன என புதுப் புது கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்வதாகச் செய்திகளை வெளியிட்டுவருகிறீர்கள்.

VPF கட்டணம் செலுத்தமாட்டோம் என அறிவித்துவிட்டு, அதைக் குறைக்கும் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் என்பது முரண்பாடாகத் தெரியவில்லையா? நீங்கள் எப்போது படம் தயாரிக்க வேண்டும், என்ன பட்ஜெட், எப்போது ரிலீஸ் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்களுடையது. தேவைப்பட்டால் பிறரிடம் ஆலோசனை கேட்பது உங்கள் விருப்பம். அதுபோல்தான் என்னுடைய திரையரங்கில் என்ன புரஜெக்டர் இருக்க வேண்டும், என்ன படம் திரையிட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களின் படங்களைத் திரையிடுவதால் கேன்டீன், பார்க்கிங்கில் வருமானம் வருகிறது. அதிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும் என ஒரு அர்த்தமற்ற கோரிக்கை தயாரிப்பாளர்களால் முன்வைக்கப்படுகிறது. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகர், நடிகைகள் அந்தப் பட வெற்றிக்குப் பின் பிரபலமாகி, கடை திறப்பு விழா மற்றும் விளம்பரப் படம் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். சம்பந்தபட்ட தயாரிப்பாளர் அந்த வருமானத்தில் பங்கு கேட்க முடியுமா?

கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள திரையரங்கை, படங்கள் திரையிடுவதன் மூலம் வரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிடைக்கும் பங்குத் தொகையை மட்டும் வைத்துப் பராமரிக்க முடியாது. பத்துக் கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்தை (100 தியேட்டர்) சுமார் 500 கோடி முதலீட்டை விழுங்கி நிற்கும் தியேட்டர்களில் திரையிட்டுதான் வருமானத்தை எடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்கிற உண்மை தெரியுமா?

தற்போது இருக்கும் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணக் குறைப்புக்கு மறுக்கும்போது நீங்கள் எங்களை அணி சேர்த்திருக்க வேண்டும்; பேச்சுவார்த்தைதான் மிகப் பெரிய ஆயுதம்; வேலைநிறுத்தம் இல்லை என்பதை உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா, இல்லை தெரியவில்லையா?

உலக சினிமா வரலாற்றில் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து 45 நாட்களைக் கடந்து வேலைநிறுத்தம் செய்துவருவது முதல் முறை என்கிற பெருமை உங்களால் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கப்போகிறது. நாளை அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இப்போதாவது அனுபவசாலிகளுடன் பேசித் தெளிவான முடிவு எடுத்து, அது பற்றிய நடைமுறை சாத்தியத்தை பிறருக்குப் புரியவைத்து கோரிக்கைகளில் வெற்றிபெற முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு:

மின்னம்பலத்தில் வெளியாகும் ‘தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்’ என்கிற குறுந்தொடருக்குக் கிடைத்த பேராதரவின்பேரில் பலரும் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்கள். அவர்களில், முகம் காட்ட விரும்பாத திரையரங்க உரிமையாளர் ஒருவர், விஷாலிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்று குறிப்பிட்டவற்றை இங்கு தொகுத்திருக்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

திங்கள் 16 ஏப் 2018