மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஏப் 2018

கள்வனின் காதலியும்... ரோமியோ ஜூலியட்டும்!

கள்வனின் காதலியும்... ரோமியோ ஜூலியட்டும்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 37

இராமானுஜம்

கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்கிறபோது அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும். அதைப் படிக்கிறவர்களுக்கு எழுத்தின் மீது நம்பகத் தன்மை ஏற்பட வேண்டும். இது சாதாரண விஷயமல்ல. அதற்காக மெனக்கெடல் வேண்டும். இந்தத் தொடர் தொடங்கப்பட்டபோது தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம், அதற்கான தீர்வு என்பதை விவாதப் பொருளாக மாற்றவே விரும்பினோம். உண்மைகளைத் தேடி ஓடியபோது ஆங்காங்கே கால் இடறியது. இடறிய இடமெல்லாம் குறுந்தொடருக்கான தகவல்கள் தாமாகவே வந்து சவாரி செய்யத் தொடங்கியது.

சமூக விழிப்புணர்வு, அரசியல் விமர்சனம், ஒழுக்கம், தொழில் நேர்மை, பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்திப் பேசிய படங்களை வாங்கியவர்கள் அந்தப் படங்களின் கருத்துக்கு எதிராகவே தொழில் நாணயத்தைக் கடைப்பிடித்திருப்பதை அறிய முடிந்தது. தொழில் கூட்டாளிக்கு குழி தோண்டிய கதைகள், ஒரிஜினல் உரிமையாளருக்குத் தெரியாமல் படங்களை விற்ற கதை, வாங்கிய கதை எனச் சென்னை முதல் நெல்லை வரை பரவிக் கிடக்கிறது அப்படியொரு கதைதான் 2006 பிப்ரவரி 17 அன்று வெளியான ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த லெட்சுமணன் காதலியைக் கள்வனிடம் பறிகொடுத்த நிகழ்வு. இது கொடுத்த கோபம் தான் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்க உந்து சக்தியானது.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக அறிமுகமான முதல் படம் ‘கள்வனின் காதலி’. நயன்தாரா ஜோடி, இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு ஏகாம்பரம் என மிரட்டிய படம் இது. படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு. அவுட்ரேட் அடிப்படையில் படத்தை விற்க வாய்ப்பு இருந்தும், ஃபைனான்ஸ் கொடுத்த சீனிவாசன் விநியோக அடிப்படையில் வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற தவறான வழிகாட்டுதலால் ஏரியா அடிப்படையில் வடஆற்காடு, தென்னாற்காடு, கோவை, சேலம் ஆகிய பகுதிகளைக் கையகப்படுத்திக் கொண்டார். படத்துக்கு லெட்சுமணன் வாங்கியது 50 லட்சம் ரூபாய் ஃபைனான்ஸ். ஏரியா அட்வான்ஸ் 1.30 கோடி ரூபாய் என்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நயன்தாரா - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி நடிப்பில் 2006 பிப்ரவரி 17 அன்று கள்வனின் காதலி ரிலீஸ் ஆனது. முதல் மூன்று நாள்கள் பிரமாண்டமான வசூல். படம் சுமார் ரகம் என்பதால் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கவில்லை. திட்டமிட்டதைக் காட்டிலும் அதிக பட்ஜெட் ஆனது. அதற்குரிய வியாபாரமும் வசூலும் கிடைக்காமல் போனது. நான்கு ஏரியாகளுக்கும் சேர்த்து 70 லட்சம் ரூபாய் வருவாய் எனக் கணக்குக் கொடுத்தார் சீனு. ஒரு கோடி கடனாளியான லெட்சுமணன் படத்தின் உரிமையை சீனுவின் நெருக்கடியால் 90 லட்சத்துக்கு ராஜ் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்கிறார். அந்தக் காசோலையை சீனு வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுகிறார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் லெட்சுமணன் குறைந்தபட்ச தொகை கேட்டுக் கெஞ்சுகிறார். ஏளனப் பார்வையுடன் அதை நிராகரிக்கும் சீனுவைப் பார்த்து, தவறாக வழிகாட்டியதுடன் கள்ளக் கணக்கு காட்டி என்னைக் கடனாளி ஆக்கிய நீ நூற்றுக்கணக்கான லாரிகள் ஏறி................ய் என்று பெரும்குரல் எடுத்து சாபமிட்டதை மறக்க முடியாது என்கிறார் இதை நேரில் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர். அந்த அடி தந்த வலியும் அனுபவமும் படம் தயாரிக்க வந்தவரை சீனிவாசனின் அதிரடி நடவடிக்கையால் ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநராக மாற்றி வெற்றிபெற வைத்திருக்கிறது. துன்பத்தில் இன்பம் என்பது இதுதான் போல.

நாளை காலை 7 மணி அப்டேட்டில் ஆட்டோகிராஃப் அதிரடியும், சிந்தாமணி முருகேசனின் அறச்சீற்றமும்...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 6 ஏப் 2018