மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

சிறப்புக் கட்டுரை: ஆஸ்திரேலிய மாமியார் உடைத்த மண்குடம்!

சிறப்புக் கட்டுரை: ஆஸ்திரேலிய மாமியார் உடைத்த மண்குடம்!

கிங் விஸ்வா

பந்தைச் சிதைக்கும் செயல், அதற்கான தண்டனைகளைப் பற்றி விவாதிக்கும்போது மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. மூன்று தனிப்பட்ட சம்பவங்கள்... அவை எப்படி விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது என்பது பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

சம்பவம் 1: ஜூலை 4, 2001; இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் (ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்புப் போட்டி)

இந்த ஒருநாள் ஆட்டத்தின் 29ஆவது ஓவரை வீச வருகிறார். மேற்கிந்தியத் தீவின் கார்ல் ஹூப்பர். வீரேந்திர சேவாக் சற்றே தடுமாற, அவரை ஸ்டம்பிங் செய்கிறார் விக்கெட் கீப்பர் ரிட்லி ஜேகப்ஸ்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பந்து ஜேகப்ஸின் இடது கையில் இருக்க, அவர் வலது கையினால் ஸ்டம்பிங் செய்தார். நடுவரும் அவுட் கொடுத்துவிட, சேவாக் வெளியேறுகிறார். ஆனால், இதைத் தொலைக்காட்சியில் பார்த்த மூன்றாவது நடுவர், புகாரளிக்க, ரிட்லி ஜேகப்ஸுக்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படுகிறது.

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஜேகப்ஸ் திட்டமிட்டு இப்படி ஒரு செயலைச் செய்யவில்லை. மாறாக, அவர் தன்னிச்சையாக, உடனடியாக இதைச் செய்தார். இருந்தாலும் அவர் செய்தது கிரிக்கெட் விதிகளின்படி தவறு என்பதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இங்கே ஆட்டத்தின் மேட்ச் ரெஃப்ரியாக இருந்தவர் தென்னாப்பிரிக்காவின் டெனிஸ் லின்ட்ஸே.

சம்பவம் 2: ஆகஸ்ட் 26, 2010; இங்கிலாந்து – பாகிஸ்தான் 4ஆவது டெஸ்ட் போட்டி (இங்கிலாந்து, லார்ட்ஸ் மைதானம்)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வேண்டுமென்றே பந்தை நோ பால் ஆக வீசுமாறு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் கேட்க, பந்து வீச்சாளர் முகம்மது ஆமிரும் அப்படியே செய்கிறார்.

மேட்ச் ஃபிக்ஸிங் போல, இதுபோன்ற செய்கைகளை ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பார்கள். அதாவது, கிரிக்கெட் சூதாட்டத்தில், இத்தனையாவது ஓவரின் இத்தனையாவது பந்தில் விக்கெட் விழும், நோ பால் ஆகும், நான்கு ரன்கள் அடிப்பார்கள் என்று பந்தயம் கட்டி விளையாடுவது.

இந்த பாகிஸ்தான் அணியின் ஸ்பாட் ஃபிக்ஸிங்கை ஊடகப் புலனாய்வு நடவடிக்கை (Sting Operation) மூலமாக உலகமே தெரிந்துகொள்ள, கேப்டன் சல்மான் பட்டுக்குப் பத்தாண்டுகள் தடையும், அவர் சொன்னபடி நோ பால் வீசிய பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப்புக்கு ஏழாண்டுகள் தடையும், முகம்மது ஆமிருக்கு ஐந்தாண்டுகள் தடையும் விதிக்கப்படுகின்றன.

இது ஒரு திட்டமிட்ட சதி வேலைதான். ஆனால், மேட்ச் ஃபிக்ஸிங் என்பது வேறு. ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது வேறு. இரண்டாவதில் ஆட்டத்தின் முடிவு பாதிக்கப்படாது. இது குற்றம்தான். இருந்தாலும் இதுவரைக்குமான கிரிக்கெட் முறைகேடுகளை மனதில் வைத்துப்பார்த்தால், இது சற்றே அதிகமாகத்தான் தெரிகிறது.

சம்பவம் 3: ஜூலை 23, 1994, இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி (இங்கிலாந்து, லார்ட்ஸ் மைதானம்)

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்கும் நிலையில் இருக்கிறது இங்கிலாந்து அணி. அணித் தலைவர் மைக்கேல் ஆதர்ட்டனுக்கு 25 வயதுதான் ஆகிறது. எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஒரு காரியம் செய்கிறார்.

மைதானத்தில் இருந்த அழுக்கு மண்ணை எடுத்துத் தன் கால்சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். இதை வைத்துப் பந்தின் நடுவில் தைத்த நூலின் மேலாகப் பூசி, ஒரு பக்கம் எடை கூடும்படியாகவும், ஒரு பக்கம் ஷைனிங் ஆக இருக்கும்படியாகவும் செய்கிறார். ஆனால், தொலைக்காட்சியில் இது காண்பிக்கப்பட, ஆதர்டன் மாட்டிக்கொள்கிறார். நடுவர் பீட்டர் பர்ஜ் அழைத்து விசாரித்தபோது, தனது கை விரல்களில் நிறைய வியர்க்கும் என்பதால், மண்ணை வைத்துக் கையை உலர்வாக வைத்திருந்ததாகச் சொல்கிறார்.

ஆனால், உண்மையைத் தெரிந்துகொண்ட அப்போதைய இங்கிலாந்தின் பயிற்சியாளரான இல்லிங்வொர்த் உடனடியாக ஒரு காரியம் செய்கிறார். அவசர அவசரமாகப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அந்தச் சந்திப்பில் அவர் மட்டும்தான் உரையாடுகிறார். ஆதர்டனுக்கு இரண்டாயிரம் பவுண்டுகள் அபராதம் விதித்திருப்பதாகச் சொல்கிறார். இந்த அபராதம் ஆதர்டனுக்கான சரியான தண்டனை என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வரும்படியாக அவர் பார்த்துக்கொண்டார்.

ஆதர்டனுக்கு இரண்டு போட்டிகளில் ஆடத் தடை உத்தரவு கொடுக்கலாமா என்று பீட்டர் பர்ஜ் யோசிக்கும்போது, இப்படி ஒரு “தண்டனை” என்று பரவலாகப் பேச்சு எழ, ஆதர்டனுக்கு போட்டிகளில் விளையாடத் தடையோ, பெரிய அளவிலான இதர தண்டனைகளோ விதிக்கப்படவில்லை.

அதன் பிறகு, ஆதர்டனை பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் ஒரு பண்ணை வீட்டில் மறைத்துவைக்கிறார் இல்லிங்வொர்த். பிரச்சினையின் சூடு தணிந்த பிறகு, ஆதர்டன் திரும்ப வந்து, இரண்டாவது டெஸ்ட்டில் ஆடுகிறார்.

இங்கேதான் இங்கிலாந்தின் பயிற்சியாளரான இல்லிங்வொர்த்தின் ‘மேதைமை’யைப் பாராட்ட வேண்டும். திட்டமிட்டுச் செய்த ஒரு சட்ட விரோதச் செயலை மறக்கடிக்க, உடனடியாக அபராதம் விதித்து, அதையே ஒரு பேசுபொருளாக்கி அனைவரது கவனத்தையும் திசை திருப்பி ஆதர்டனை தண்டனையிலிருந்து காப்பாற்றிவிட்டார்.

சரி, இப்போது மூன்று சம்பவங்களையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறதா என்று விவாதிக்கலாம்.

உடனடியாக, யோசிக்காமல் அந்த நொடியில் செய்த ஒரு தவற்றுக்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படுகிறது. தண்டனைக்குள்ளானவர் – மேற்கிந்தியத் தீவு அணியைச் சேர்ந்தவர்.

திட்டமிட்டுச் செய்த ஒரு சதியாலோசனைக்குப் பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இது (ஒப்பீட்டளவில்) சிறிய குற்றம்தான். தண்டனைக்குள்ளானவர் – பாகிஸ்தான் / ஆசியாவைச் சேர்ந்தவர்.

திட்டமிட்டுச் செய்த ஒரு சதிச் செயலுக்கு இரண்டாயிரம் பவுண்டுகள் அபராதம். தண்டனைக்குள்ளானவர் – இங்கிலாந்து அணியின் தலைவர்.

இங்கேதான் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் சதர்லேன்டின் பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இன்னமும் புலனாய்வு அறிக்கை கைக்கு வரவேயில்லை. ஆனால், முதல் கட்ட அளவிலேயே அவர்கள் மூவரையும் அடுத்த போட்டியில் விளையாட அனுமதிக்காமல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப அனுப்புகின்றனர்.

ஏற்கெனவே சர்வதே கிரிக்கெட் வாரியம் பேன் க்ராஃப்டுக்கு அவரது போட்டித் தொகையில் 25 சதவிகிதத்தை அபராதமாகவும், கேப்டன் ஸ்மித் ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதித்திருக்கிறது.

ஆக, கேப்டன் சொன்னதைக் கேட்டு நடந்த ஆமிருக்கு, ஐந்தாண்டுகள் தடை.

ஆனால், பேன்க்ராஃப்டுக்கு 25 சதவிகிதம் அபராதம் மட்டுமே.

கேப்டன் சொன்னதைக் கேட்டு, மற்றவர்களை ஈடுபடுத்திய ஆசிப்புக்கு ஏழாண்டுகள் தடை.

ஆனால், டேவிட் வார்னருக்கு அதிகாரபூர்வமாகத் தடை எதுவும் இல்லை.

திட்டமிட்டு சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட கேப்டன் சல்மான் பட்டுக்குப் பத்தாண்டுகள் தடை.

ஆனால், ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட மட்டுமே தடை.

முன்பு ரே இல்லிங்வொர்த் செய்ததைப் போல, இப்போது ஆஸ்திரேலிய நிர்வாகமும் அவசர அவசரமாகப் பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்குசெய்து, அதில் இன்னமும் விசாரணையே முடியவில்லை. ஆனால், நாங்கள் கடுமையான தண்டனை விதிப்போம் என்று கூறுகிறார்கள். வாக்கி டாக்கியில் அவசர அவசரமாக மஞ்சள் டேப்பை / உப்புத் தாளை மறைக்கச் சொன்ன பயிற்சியாளர் லீமேனுக்கு எதுவும் தெரியாது என்றும் விளக்கம் அளிக்கிறார்கள்.

ஆக, இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லலாம்.

இறுதியாக, ஸ்மித், வார்னர் இருவருக்கும் ஓராண்டும் கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் கிரிக்கெட் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆஸ்திரேலிய வாரியம் அளித்துள்ள தண்டனை. ஐசிசி அளித்த தண்டனை அல்ல. சேவாக் அவுட் ஆன விஷயத்தில் ஜேக்கப்ஸுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஐசிசி அளித்தது. இங்கே ஐசிசி ஒரு போட்டிக்கான தடை, அபராதம் என்பதோடு நிற்கிறது. இதர குற்றங்களையும் அவற்றுக்கான தண்டனைகளையும் எதிர்வினைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சட்டம் எப்படி ஆளுக்கேற்றபடி செயல்படுகிறது என்பது தெரிகிறது.

மூவருக்குமே குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் தடை என்பதைத் தவிர வேறெந்த தண்டனையும் நியாயம், சம அளவிலான நீதி போன்ற சொற்களுக்கு மதிப்பளிக்காது. ஆனால், ஓராண்டுத் தடை என்னும் தண்டனையே அதிகம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆட்டக்காரரான ஷேன் வார்ன் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங் விஷயத்தில் அதிகபட்சம் பத்தாண்டுகள் தண்டனை பெற்றபோது ஷேன் வார்ன் அதை அநீதி என்று சொல்லவில்லை.

தண்டனைகள், அபராதம் ஆகிய அனைத்துமே சமமானவை அல்ல. அவை ஆளுக்கு ஏற்றாற்போல், நாட்டுக்கு ஏற்றாற்போல், அந்தத் தண்டனையை விசாரிக்கும் நடுவருக்கு ஏற்றாற்போல் மாறும். அனிமல் ஃபார்மில் ஜார்ஜ் ஆர்வெல் சொன்னதைப்போல, Some are more equal than others.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கிங் விஸ்வா, ஊடகத் துறையில் 16 ஆண்டுகளாக இயங்கிவருபவர். காமிக்ஸ், கிரிக்கெட், சினிமா ஆகியவற்றின் மீது ஆர்வம்கொண்டவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

வெள்ளி 30 மா 2018