மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 மா 2018

ஸ்டாலின் முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள்!

ஸ்டாலின் முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற இரண்டு நாள்கள் மண்டல மாநாட்டில் அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் என்பது உட்பட புதிய ஐம்பெரும் முழக்கங்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்ட முழக்கங்களை முன்னிறுத்தி திமுக மண்டல மாநாடு கடந்த இரண்டு நாள்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று (மார்ச் 25) ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற நோக்குடன் செயல்படும் மத்திய அரசுக்குக் கண்டனம், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட முக்கிய பிரச்சினைகள் குறித்து 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து பேசிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா, “தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை. அது செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் வெற்றியின் இடம்” என்று குறிப்பிட்டார்.

முன்னணி நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு மாநாட்டின் நிறைவுரையாற்றிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை அண்ணா மறைவுக்குப் பிறகு 1970ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி நமக்கு வழங்கியிருக்கிறார். தற்போது அவர் உடல் நலிவுற்றிருக்கிற நிலையில் கருணாநிதியால் மாநாட்டுக்கு வர இயலவில்லை. ஆனாலும் அவருடைய வாழ்த்து நமக்கு இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “எப்படி அண்ணா இல்லாத மாநாட்டில் கருணாநிதி ஐம்பெரும் முழக்கங்களை நமக்குத் தந்தாரோ, அதேபோல கருணாநிதி இல்லாத மாநாட்டில் அவருடைய அனுமதியோடு நான் இங்கு ஐம்பெரும் முழக்கங்களை முன்வைக்கிறேன்” என்று கூறி, “கலைஞரின் கட்டளையைக் கண் போலக் காப்போம், தமிழை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம், மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம், வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்” என்னும் ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தார்.

மேலும், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மேற்பார்வை ஆணையத்தை அமைக்கப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளதை ஏற்க முடியாது” என்று கூறிய அவர், “மேற்பார்வை ஆணையம் அமைப்பது தமிழகத்தின் உரிமைகளைப் பறிப்பதற்கான பகிரங்கமான எதிர்மறைச் செயல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். அதற்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் டெல்லிக்குச் சென்று போராட்டத்தைத் தொடர்வோம்” என்றார்.

தொடர்ந்து, “எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற ஓராண்டு சாதனை என்ற பெயரில் பல செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசு மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இத்தனை விளம்பரம் அரசு நிதியில் அவசியமா என்று யோசிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, “தற்போதைய ஆட்சி கவிழ்ந்ததும் யாருடைய தயவுமின்றி திமுக ஆட்சியை அமைக்கும்” என்று தெரிவித்த ஸ்டாலின், “தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தால் 30 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

திங்கள் 26 மா 2018