2ஜி மேல்முறையீடு: சிறப்பு வழக்கறிஞர் நியமனம்!


2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் கூறியிருந்தது. தொடர்ந்து 2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனால் விரைவில் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்ட்டது.
இந்நிலையில் 2ஜி வழக்கின் சிறப்பு வழக்கறிஞராக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது நேற்று மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இவருடைய தலைமையிலான வழக்கறிஞர் குழு விரைவில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.