அரசியல்வாதிகள்போல் செயல்படக் கூடாது!

ஆன்மிகவாதிகள் அரசியல்வாதிகள் போலச் செயல்படக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவைக் கண்டித்து இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதம் ஆரம்பித்த திருவில்லிப்புத்தூர் ஜீயர், மக்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக நேற்று (பிப்ரவரி 9) அறிவித்தார்.
திருவில்லிப்புத்தூரில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், "கவிஞர் வைரமுத்து விவகாரத்தில் சங் பரிவார் அமைப்புகள், பாஜக மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மதவாதத்துடன் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிவருகின்றனர். திருவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தது தவறு. தற்போது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது. அரசியல்வாதிகளைப்போல ஆன்மிகவாதிகள் செயல்படக் கூடாது" என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் "ஆய்வு என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும்போது, அதனைக் கண்டித்துக் கருத்து சொல்லத் தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மத்திய அரசின் கைப்பாவையாகவே அதிமுக அரசு செயல்படுகிறது. ஆளுநரின் ஆய்வு குறித்து அவர்களுக்குக் கவலையில்லை" என்று கூறிய அவர், மதுரையில் தீ விபத்து நடந்ததற்கான காரணத்தை வல்லுனர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தால்தான் உண்மை தெரியவரும். எனவே யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பது தவறாகும்" என்றும் தெரிவித்தார்.