ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுப்பு : மருத்துவர் சஸ்பெண்ட்!


ஹரியானாவில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையின் மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தும் அரசின் நலத் திட்டங்கள், மானியம் எனப் பலவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணி ஒருவருக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியைச் சேர்ந்த முன்னி கேவத் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கணவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வலியால் துடித்த பெண்ணை உடனடியாக மருத்துமனையில் அனுமதித்து பிரசவம் பார்க்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் ஆதார் இல்லாததால் அவசரப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் செவிலியரும் மறுத்துள்ளனர். அவர்களுடன் நடந்த போராட்டத்துக்கிடையே முன்னி கேவத்துக்கு அவசரப் பிரிவுக்கு வெளியே குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து முன்னி கேவத்தின் கணவர் அருண், “ஆதார் இல்லாததால் எனது மனைவிக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டது. எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அரசு மருத்துவமனை மருத்துவர் இவ்வாறு நடந்துகொண்டதற்கு ஹரியானா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்பெண்ணின் குடும்பத்தினர் இந்தச் செயலைக் கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்ற குர்கான் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் பி.கே. ரஜோரா, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவரையும்செவிலியரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது போன்று கடந்த மாதம், உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாஜ்கஞ்ச் நகரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டு அவர் மருத்துவமனை வாசலில் பிரசவித்தது குறிப்பிடத்தக்கது.