வங்கிக் கணக்கில் ரூ.90,000: மேலாளர் விளக்கம்!


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரின் கணக்கில் திடீரென ரூ.90 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அதை எடுக்க முடியாமல் அவர்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியை அடுத்து உள்ள பாப்பம்பட்டியில் செயல்பட்டுவரும் எஸ்.பி.ஐ வங்கியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் சுமார் 15 ஆயிரம் பேர் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கி கிளை மூலம் முதியோர் உதவித்தொகை, நுாறுநாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பளம், உதவித்தொகை ஆகியவை அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக நுாற்றுக்கும் மேற்பட்ட நுாறுநாள் திட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அத்தொழிலாளர்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி கணக்கு இருப்பு விபரத்தை சரிபார்த்தபோது, ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.90,000 முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதலாக இருப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து மக்கள், தங்கள் கணக்கில் கருப்பு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தனர்.