மோடிக்கு வழிகாட்டிய தமிழ்நாடு!


மாநிலக் கட்சிகளின் திட்டங்களை மத்திய அரசு பயன்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இது மத்திய அரசின் பட்ஜெட் போல இல்லாமல் தேர்தல் அறிக்கை போல இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் தெரிவித்துவருகின்றனர். பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து நேற்று (பிப்ரவரி 9) நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக சார்பில் உரையாற்றிய திருச்சி எம்.பி சிவா, “சமூக நீதியில் திமுக எப்போதுமே முதல் இடத்தில் இருக்கிறது. சமூக நலத் திட்டங்களில் மற்ற மாநிலங்களுக்கு திமுக முன்னுதாரணமாக உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டம், உழவர் சந்தை, மகப்பேறு நிதியுதவி, ஏழை மக்களுக்கு மானிய விலையில் காஸ் ஆகியவை இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை.
2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்துக் கிராமங்களிலும் மின் வசதி செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உறுதிமொழி ஏற்றுள்ளது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் 1972ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மின்வசதி செய்து கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்த சிவா, “மாநிலக் கட்சிகளின் திட்டங்களை மத்திய அரசு பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.