மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: அதிகார பீடத்தை அசைக்கும் சிரிப்பு!

சிறப்புக் கட்டுரை: அதிகார பீடத்தை அசைக்கும் சிரிப்பு!

அங்ஷுகந்தா சக்கரவர்த்தி

நம் வரலாற்றிலும், புராணக் கதைகளிலும் பெண்கள் சிரித்ததற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அரசவையில் அரசரை அனைவரும் துதிபாடிக்கொண்டிருக்கும்போது, யாராவது உரக்கச் சிரிப்பது அரசரை அவமதிப்பதாகக் கருதப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 7) உரையாற்றிக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி ரேணுகா செளத்ரி சத்தமாகச் சிரித்தார். ‘காங்கிரஸ் இல்லாத பாரதத்தை காந்தி விரும்பினார், சர்தார் பட்டேல் இல்லையென்றால் காஷ்மீரைப் பிரித்திருக்க முடியாது’ என்றெல்லாம் மோடி பேசிக்கொண்டிருந்தார். இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை, மோசடியான உரிமை கோரில்களைப் பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினாலும், அவர், காந்தி - நேரு குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசமாக முழங்கியதாகவே ஊடகங்கள் நமக்குக் காட்டுகின்றன. ஆனால், உயர்நிலைப் பள்ளி மாணவர்கூட அவர் கூறிய வரலாற்றுத் திரிபுகளைக் கேட்டுச் சிரித்துவிடுவார்.

1947ஆம் ஆண்டின் ‘உண்மைகள்’ மற்றும் காஷ்மீர் விவகாரம் ஆகியவை குறித்த உண்மையான தகவல்களை வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன் ட்விட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து, பலர் பிரதமர் மோடி கூறியதை எண்ணிச் சிரித்ததோடு, ட்விட்டரில் பகிரத் தொடங்கினர்.

பிரதமர் மோடி, “கடந்த 1998ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்துவமிக்க தேசிய அடையாள அட்டையை (ஆதார்) வழக்க வேண்டும் என்ற யோசனையை முதலில் முன்வைத்தார். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு தாங்கள்தான் ஆதார் அட்டைத் திட்டத்தை உருவாக்கியதாகப் பெருமை தேடிக்கொள்கிறது” என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி ரேணுகா சௌத்ரி உரக்கச் சிரித்தார். இது, சபையில் கண்ணியமற்ற வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, “என்ன ஆயிற்று? உங்களுக்கு எதுவும் பிரச்னை என்றால், தயவுசெய்து மருத்துவரிடம் செல்லுங்கள்” என ரேணுகா செளத்ரியிடம் கூறினார். இது முறையற்ற நடத்தை என்றார். பிரதமர் மோடி உரையாற்றும்போது கூறிய வரலாற்றுத் திரிபுகள், பொய்களின்போது அவர் குறுக்கிடவில்லை. இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு குறித்து மோடி விமர்சித்தபோதும் அவர் குறுக்கிடவில்லை. ஆனால், ரேணுகா செளத்ரி சிரித்தபோது மட்டும் கண்ணியமாக நடந்துகொள்வது பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்.

ரேணுகா செளத்ரி சிரித்ததற்கு மோடி பதிலடி கொடுத்தார். ராமாயணம் தொடருக்குப் பிறகு இப்போதுதான் ஒரு பெண்ணிடமிருந்து அத்தகைய சிரிப்பைக் கேட்பதாகக் கூறினார். அவர் குறிப்பிட்டது ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடரில் சூர்ப்பனகை எகத்தாளமாகச் சிரித்ததை. மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மேற்படிக் காட்சியை ட்விட்டரில் பதிவிட்டு, ரேணுகாவின் சிரிப்பைக் கோபமூட்டும் சிரிப்பு என்று வர்ணித்திருந்தார். சில ஊடகங்கள் ரேணுகாவின் சிரிப்பை மோசமான சிரிப்பு என விமர்சித்தன.

தான் சிரித்தது ஏன் என்று ரேணுகா விளக்கமளித்துள்ளார். “ஒரு காலத்தில் ஆதார் திட்டத்தை எதிர்த்து மோடி நீண்ட உரை நிகழ்த்தியுள்ளார். தற்போது, ஆதார் அவர்களின் திட்டம் எனக் கூறுகிறார். அவரது இந்தப் பேச்சு எனக்குச் சிரிப்பை மூட்டியது. அதனால் சிரித்தேன். பிரதமர் மோடி எனக்கு எதிராகத் தனிப்பட்ட விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு பிரதமர் எப்படி இவ்வாறு பேசலாம்? அவரது கலாசாரம் எத்தகையது என்பதை இது காட்டுகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் இவ்வாறு பேசியிருந்தால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ராமாயணத்துக்குப் பல வடிவங்கள் உண்டு. ஆனால், வடஇந்தியர்களைப் பொறுத்தவரை தந்தைவழிச் சமூகம் கூறும் ராமாயணக் கதைகளே பரவலாகப் புழக்கத்தில் இருக்கின்றன. அந்த ராமாயணத்தின்படி, அரசர் ராமருடைய ஆட்சியில் சிரிக்கும் பெண்கள் நாயகியர் அல்ல. ராவணன் தங்கை சூர்ப்பனகை லட்சுமணனைப் பார்த்து சிரித்ததற்காக அவளின் மூக்கை லட்சுமணன் துண்டித்துவிடுவார். ராமாயணத்தைப் பொறுத்தவரையில் சிரிக்கும் பெண்கள் தீயவர்கள், பெண்கள் சிரிப்பது அபாயகரமானது.

ராமாயணத்தின் மீதான பெண்ணிய வாசிப்புகளில் ராமாயணத்தின் மாறுபட்ட வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சீதை சிரிக்கிறாள். பாடுகிறாள். தன் கருவுறுதலின் மீது அவளுக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. அவள் சொந்தமாக முடிவெடுக்கிறாள். ஆணின் பார்வையில் எழுதப்பட்ட ராமாயணத்தில், சீதை தன்னுடைய கற்பை நிரூபிக்க, கணவருக்காகத் தன்னைத் தானே எரித்துக்கொள்கிறாள்.

மகாபாரதத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் சிரித்ததால் போர் உருவானதாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் வரும் பெண் கதாப்பாத்திரமான திரெளபதி அதிகமாகச் சிரிப்பாள். ஐந்து ஆண்களுடன் உறவு கொள்வாள். இந்திரபிரஸ்தத்தில் அமைக்கப்பட்டிருந்த அரண்மனையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, துரியோதனன் தரை போன்ற நீர்நிலையில் விழுந்துவிடுவான். அப்போது திரெளபதி அவனைப் பார்த்துச் சிரிப்பாள். அதனால் அவமானப்பட்ட துரியோதனன், திரெளபதியைப் பழி வாங்கத் தானும் ஒரு சபா மண்டபத்தைக் கட்டுவான். பாண்டவர்களைச் சூதாட்டத்துக்கு அழைப்பான். இந்தச் சூதாட்டத்தில் நாடு முதல் அனைத்தையும் இழக்கும் தருமர் இறுதியாக திரெளபதியை இழந்துவிடுவார். துரியோதனன் தம்பி துச்சாதனன் திரெளபதியைப் பெரியவர்கள் கூடிய நிறைந்த அவையிலே இழுத்து வந்து, திரெளபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்த நினைப்பான். இதன் விளைவாக குரு வம்சம் போரில் ஈடுபடும்.

ரேணுகா செளத்ரி மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் உரையின்போது சிரித்தார். அது அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து அதிகாரமற்றவர் சிரிக்கும் சிரிப்பு. ரேணுகாவின் சிரிப்பு கிரேக்கப் புராணத்தில் வரும் பவுபோ என்னும் கிரேக்கப் பெண் கடவுளின் சிரிப்பைப் போன்றது. அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து பவுபோ சிரித்தால் அதிகாரத்தில் இல்லாதவர்களின் துயரம் களையப்படும் என அந்தப் புராணக் கதை கூறுகிறது. அதிகாரத்துக்கு வெளியில் இருக்கும் ரேணுகாவின் சிரிப்பு அதிகார பீடத்தைப் பார்த்துச் சிரித்த பவுபோவின் சிரிப்பையே நினைவுபடுத்துகிறது.

நன்றி: dailyo.in

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018