விஜய் படத்தில் சாயீஷா?


விஜய் நடித்துவரும் புதிய படத்தில் நடிகை சாயீஷாவும் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் தந்துள்ளார் சாயீஷா.
துப்பாக்கி, கத்தி படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கிவருகிறது. விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பைரவா படத்தை அடுத்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக சாயீஷா நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இந்தப் படம் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சாயீஷா விளக்கியிருக்கிறார். “நான் விஜய் சாரின் மிகப் பெரிய ரசிகை. அவரின் ரசிகை என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறேன். விஜய் சாரின் படத்தில் நடிக்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். இந்தப் படத்தில் நான் நடிப்பது தொடர்பாக படக்குழுவினர் என்னிடம் அணுகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.