மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்?

சிறப்புக் கட்டுரை: இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்?

பா.நரேஷ்

நம் நாட்டில் இளைஞர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள நீங்கள் எந்த ஆய்வறிக்கைகளையும் படிக்கத் தேவையில்லை. உங்கள் ஊரில் எத்தனை இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் போதும். இப்படி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை எடுத்தால், நம் நாடு எவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது புரியும்!

இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் வேகமெடுக்கப்போவதில்லை என்று International labour Organisation (ILO) – சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது (ஆதாரம் – World Employment and social Outlook Report).

பக்கோடா தீர்வு

சரி, வரப்போகும் இந்த வேலைவாய்ப்பின்மையையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசின் இரு பெரும் ஆளுமைகள் வகுத்த திட்டங்கள் என்ன தெரியுமா? வேலையில்லாதவர்களை பக்கோடா போட்டு பிழைத்துக்கொள்ளச் சொல்வது! ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். “லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த பட்டாதாரி இளைஞர்கள், வேலையில்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்று ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிப்பதும் வேலையாகத்தான் கருதப்படும்” என்று நம் நாட்டின் வளர்ச்சி நாயகர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இவரைவிட ஒரு படி மேலே போன பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, “கூலி வேலைக்குப் போவதைக்கூடச் சிறந்ததாகக் கருதுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

நாட்டின் வேலைவாய்ப்பின்மையைத் தற்போது சரி செய்ய இயலாது; ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்கின்றன இவை போன்ற தொலைநோக்குத் திட்டங்கள்.

“இன்று வேலைவாய்ப்பின்மைக்குப் பக்கோடா விற்பதைத் தீர்வாகச் சொன்ன மோடி, நாளைக்குப் பிச்சையெடுப்பதைக்கூடத் தொழில் வாய்ப்பாகக் கருதலாம் என்று சொன்னாலும் சொல்லுவார்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்வினையாற்றியுள்ளார்.

உடனே இதை ஏதோ பெரிய அவமானமாகக் கருதிய மத்திய அரசு, தன் கருத்திற்குத் திருவாய் மலர்ந்து நியாயம் சேர்த்திருக்கிறது. அதுவும் யாருடைய திருவாய் தெரியுமா? பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, முதன்முறையாக மாநிலங்களவையில் திருவாய் மலர்ந்துள்ளார். “வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தப் பிரச்னை இப்போது உருவானதல்ல. சுதந்திரத்துக்குப் பிறகான 55 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி என்னதான் செய்திருக்கிறது? வேலையில்லாமல் இருப்பதைவிடக் கூலி வேலைக்குப் போவதோ, பக்கோடா விற்பதோகூட சிறந்ததுதான். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆம், அவர் எப்படி வெட்கப்படுவார்? நாட்டின் மக்களைச் சுரண்டி, தன் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து, தன் மகனின் தொழில்களை ஏகபோகத்துக்கு வளர்த்துவிட்டு, அது பூதாகரமாக வெளியே தெரிந்தபோதுகூட எந்த வெட்கமுமின்றித் திரிந்தவர்தானே அவர். அப்படிப்பட்டவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? அவர் மகன்தான் நம் வரிப்பணத்தில் செட்டில் ஆகிவிட்டாரே! நடுத்தர வர்க்க மக்களின் மகன்களும் மகள்களும் பக்கோடா விற்றால் என்ன, பிச்சையெடுத்தால் அவருக்கென்ன?

அது மட்டுமா? பிரதமரின் ஜன் யோஜ்னா திட்டம் மூலம் 31 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்ததையும், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றையும் பட்டியலிட்டு, மோடியின் பெருமைகளைப் பாடி சிலாகித்துள்ளார். 31 கோடி அல்ல, அதற்கும் மேலான பெரும் மக்கள்தொகை இந்தியாவில் வறுமையில் உள்ளது. வெறும் வங்கிக் கணக்கு அவர்களை உயர்த்திவிடும் என்று நினைப்பதையும், அதை ஒரு பெருமையாக ஆளும்கட்சியின் தேசியத் தலைவர் மாநிலங்களவையில் சொல்வதையும்விட ஒரு கேலிக்கூத்து வேறு இருக்க முடியாது.

ஆனால், நம் இளைஞர்கள் பிரதமரின் வாக்குக்கு மரியாதை கொடுப்பவர்கள். அதனால்தான் கர்நாடக மாநிலத்தில் மோடியின் வருகையை முன்னிட்டு மோடி பக்கோடாக்களையும், அமித் ஷா பக்கோடாக்களையும் தெருவில் விற்று நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்காற்றியுள்ளனர்.

அதிக முதலீடு, குறைந்த வேலைவாய்ப்பு

நாட்டின் நிலமை இப்படியிருக்க, தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் வெளியாகியுள்ளது. அதில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான எந்தத் திட்ட அறிக்கைகளையும் காண முடியவில்லை. ஆனால், சர்வதேச முதலீடுகள் மட்டும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இந்தியாவின் பணக்காரர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இவை யாவும் வியூகங்கள் அல்ல, அதிகாரபூர்வமான அறிவிப்புகள். இந்தப் புத்தாண்டின் ஜனவரி மாதத்தில் நடந்த அந்நிய முதலீடு மட்டும் பல ஆயிரம் கோடிகள். அசாமில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய மோடி, “வரலாறு படைக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டுள்ளன” என்று தனது தலைமையிலான அரசின் சாதனைகளைப் பட்டியலிடுகிறார். அதே மேடையில், ரிலையன்ஸ் நிறுவனம் அசாம் மாநிலத்தில் 2,500 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவிக்கிறார். அது மட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் மட்டும் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முதலீடுகள் யாவும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காகத்தான் என்று இந்த அரசு ஆரூடம் சொன்னால், ஒரு சாதாரண கேள்வியை நாம் கேட்க வேண்டும்.

வரலாறு காணாத முதலீடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த ஆட்சியில், வேலைவாய்ப்பு பெருகியிருக்க வேண்டுமே! வேலைவாய்ப்பின்மைதானே பெருகிவருகிறது? இவ்வளவு முதலீடுகளும் சாமானிய மக்களின் வளங்களைச் சுரண்டித்தானே பெறப்படுகிறது? இதிலிருந்தே தெரியவில்லையா, இது யாருக்கான அரசு என்பதும், இங்கே இயற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் யாருக்கானவை என்பதும்!

எளியவர்களுக்கு எட்டாத சிறு, குறு தொழில்கள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு தொழில்களே என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிடுகிறார். ஆனால், அந்த சிறு, குறு முதலீட்டாளர்கள் நடுத்தர வர்க்கப் பட்டதாரி இளைஞர்களாக இருப்பதில்லையே? அதையும் பெருநிறுவன முதலாளிகளின் நேரடி முதலீட்டுத்தளமாக மட்டும்தானே மாற்றிவைத்திருக்கிறீர்கள்! அனைத்துக்கும் உச்சமாக, இந்த ஆளும் பிஜேபி அரசு அனுமதித்துள்ள சில்லரை வர்த்தகத்துக்கான நேரடி அந்நிய முதலீடு என்பது, சொந்த நாட்டின் தொழில்முனைவோருக்கான மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. அந்த முதலைகளின் குட்டையில் நம் மீனவர்கள் பிழைப்பதே கடினம் எனும்போது, வளர்வதெல்லாம் முதலைக் கண்ணீர்தான்!

இந்த அரசியல் வாய்ச்சவடால்களிலும், பொருளாதார விளையாட்டுகளிலும் பாதிக்கப்படப்போவது என்னவோ வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள்தான்.

படித்தால்தானே வேலைவாய்ப்பின்மை என்பது உருவாகும், இனிமேல் யாரும் படிக்க வேண்டாம்; பக்கோடா தயாரித்து விற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018