மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

விமர்சனம்: சவரக்கத்தி!

விமர்சனம்: சவரக்கத்தி!

அப்பாவித்தனமான மனிதரும் முரட்டுத்தனமான ரவுடியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொள்ளும்போது நிகழும் சுவாரஸ்யமான துரத்தலையும் பழிவாங்கலையும் நகைச்சுவையாகக் கூறும் படம் சவரக்கத்தி.

மிஷ்கின் திரைக்கதை எழுதி, தயாரித்துள்ள இந்தப் படத்தை அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறையாக இயக்கியுள்ளார். ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் இந்தப் படம் பிளாக் ஹியூமர் பாணியில் உருவாகியுள்ளது.

முடி திருத்தும் தொழில் செய்யும் பிச்சை (ராம்), கர்ப்பிணியான மனைவி (பூர்ணா), இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் செல்லும்போது ரவுடி மங்காவுடன் (மிஷ்கின்) எதிர்பாராத விதமாகப் பிரச்னையில் ஈடுபட நேர்கிறது. மாலை ஆறு மணிக்குள் பரோல் முடிந்து சிறை திரும்ப உள்ள மங்கா, பிச்சையைக் கொல்வதற்காகத் துரத்துகிறார். ரவுடி கும்பலால் பிச்சையைப் பிடிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்பும் நகைச்சுவையும் கலந்து சொல்கிறது படம்.

பிளாக் ஹியூமர் பாணியில் உருவாகும் படங்களில் கதை மாந்தர்கள் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு துயரங்களை அனுபவிக்கும்போது இயல்பாக உருவாகும் சூழ்நிலை பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும். இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இந்த அம்சம் கச்சிதமாக அமைந்து அரங்கத்தைச் சிரிப்பலையால் நிறைக்கிறது. பிச்சை, மங்கா என எதிர்நிலைகளில் உள்ள கதாபாத்திரங்கள் மோதும்போது உருவாகும் முரண் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

சீராக ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. சிக்கல்கள் இயல்பாகப் பின்னப்படுகின்றன. பிரதான கதாபாத்திரங்களுக்கு நிகராக ரவுடி கும்பல், காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய தனது மகளைத் துரத்தும் பெண் வீட்டார், டீக்கடை கதாபாத்திரங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர், சைக்கிள் கடைக்காரர் எனத் துணைக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் படங்களில் நாம் வழக்கமாகக் காணும் இந்த அம்சத்தை ஆதித்யா சிறப்பாகப் பிரதிபலித்துள்ளார்.

அடிதடி, ரத்தம், பழிவாங்கல் எனப் படம் பயணப்பட்டாலும் குரோதம் வெளிப்படாமல் அப்பாவித்தனமும் நகைச்சுவையுமே படம் முழுக்க நிரம்பியிருக்கின்றன. மனிதம் பேசும் காட்சிகளும் அங்கங்கே வைக்கப்பட்டுள்ளன. க்ளைமாக்ஸ் காட்சியில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக்குப் பிறகு நடக்கும் திருப்பம் கவித்துவமானது.

நகைச்சுவை இயல்பாக உருவாகும் தருணங்கள் ரசிக்கவைக்கும் அதே நேரத்தில் நர்ஸ் கதாபாத்திரம் உள்ளிட்ட அங்கங்கே பல கதாபாத்திரங்கள் கார்ட்டூன் தன்மையுடன் அமைந்திருப்பது உறுத்தலாக உள்ளது. படத்தின் பெரிய பலமே ஒரே நாளில் கதை ஆரம்பித்து முடிந்துவிடுவதுதான். மங்கா உட்பட எந்த கதாபாத்திரத்துக்கும் பிளாஷ்பேக் போய் இழுக்கவில்லை. அதே நேரத்தில் ஒரே பிரச்சினையை மீண்டும் மீண்டும் காண்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

இரண்டு மூன்று தரப்பினர் வெவ்வேறு நோக்கங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்பாராத சந்திப்புகளும் அதனால் ஏற்படும் குழப்பங்களும் கதைக்குச் சுவை கூட்டுபவை. ஆனால், இந்த ஊடாட்டம் சில இடங்களில் நம்பகத்தன்மையின் எல்லையைத் தாண்டிச் செல்கின்றன.

ராம், மிஷ்கின் இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தியுள்ளனர். மிஷ்கினின் உடல்மொழியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்கள் மூலம் அவர் மேல் உள்ள முரட்டுத்தனமான பிம்பமும் அவரது கதாபாத்திரம் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. தங்க மீன்களில் அப்பாவாக வந்த ராம், இன்னும் ஒருபடி மேலேபோய் அப்பாவியாகக் காட்சியளிக்கிறார். அவரது உருவ அமைப்பு கதாபாத்திரத்தை நெருக்கமாக உணரவைக்கிறது. பூர்ணா தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

அரோல் குரொலியின் இசையில் இரண்டு பாடல்களும் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளன. தமிழச்சி தங்கபாண்டியன், மிஷ்கின் வரிகள் மனிதத்தன்மையின் உன்னதத்தை அழகாகப் பிரதிபலிக்கின்றன. கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. ஜூலியன் படத்தொகுப்பில் கதை சொல்கிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 10 பிப் 2018