மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சிறப்பு நிதி: அதிருப்தியில் சந்திரபாபு?

சிறப்பு நிதி: அதிருப்தியில் சந்திரபாபு?

மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்குச் சிறப்பு நிதி ஒதுக்காத விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரியும், வளர்ச்சிப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குமாறும் அம்மாநில அரசு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்குப் போதிய திட்டங்களும் சிறப்பு நிதியும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இடதுசாரிகள் அழைப்பு விடுத்த இந்த முழு அடைப்பில் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜனசேனா, லோக் சத்தா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. ஆளும் தெலுங்கு தேசமும் ஆங்காங்கே போராட்டம் நடத்தியது. இதேபோல், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பெரிய கவனத்தைப் பெற்றது. இதையடுத்து, ஆந்திராவுக்கான சிறப்பு நிதி அளிப்பது தொடர்பான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ள ஆந்திர முதல்வர் அங்கிருந்தபடியே தொலைபேசி மூலம் தெலுங்கு தேச எம்.பிக்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அப்போது, “மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையானது ஆந்திரப் பிரதேச மாநில மக்கள், நாம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என உணரச்செய்யும் வகையில் உள்ளது” என வேதனைத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டணி தொடர்பான முக்கிய முடிவை இரண்டொரு தினத்தில் எடுப்பதாக எம்.பிக்களிடம் அவர் கூறியதாக இந்தியா டுடே கூறியுள்ளது.

தென்னிந்தியாவில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியாகத் தெலுங்கு தேசம் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்குப் போதிய நிதியை ஒதுக்காததால் அக்கட்சியின் பெரும்பாலான எம்.பிக்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையிலேயே உள்ளனர். இந்த நிலையில், ஆந்திராவுக்குச் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்றும் இதற்காக அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூறியுள்ளார். எனவே, சந்திரபாபு நாயுடு இந்தியா திரும்பிய பின்னர் கூட்டணி குறித்த குழப்பத்துக்கு விடை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 10 பிப் 2018