மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: பெண்களுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்!

சிறப்புக் கட்டுரை: பெண்களுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்!

சுமித்ரா

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அறிவிப்புகள் பற்றியும், முந்தைய பட்ஜெட் அறிவிப்புக்கு இடையேயான மாற்றங்கள் குறித்தும் பார்ப்போம்.

2005-06ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில்தான் மத்திய அரசு முதன்முதலில் பெண்களின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. உலகளாவிய பெண் தொழிலாளர்களின் மொத்த பங்களிப்பு 40 சதவிகிதமாகும். இந்தியாவில் மட்டும் இதன் அளவு 24 சதவிகிதமாகும். பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் வளர்ச்சி என்பது ஒரு வீட்டின் வளர்ச்சி மட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சியுமாகும். 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் மேம்பாட்டுக்கான நிதி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். மத்திய நிதியில் பெண்களுக்கென ரூ.1,21,961.32 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இது சென்ற ஆண்டில் ரூ.1,17,221.47 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ

பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டமான ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ என்ற திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.186.04 கோடியாக இருந்தது. மேலும், பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத் தொகையாக ரூ.255.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டில் ரூ.320 கோடியாக இருந்தது.

மகப்பேறு நன்மைத் திட்டம்

மகப்பேற்றுக்கான திட்டத்தில் சென்ற ஆண்டில் ரூ.2,594.55 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் ரூ.2,400 கோடியாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நிர்பயா திட்டம்

பெண்கள் பாதுகாப்புத் திட்டமான நிர்பயா திட்டத்துக்கான நிதியாக ரூ.19.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டில் ரூ.11.20 கோடியாக இருந்தது. பெண்களுக்கான தேசிய ஆணையத்துக்கு ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் இது ரூ.25.60 கோடியாக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பெண்கள் ஹெல்ப் லைனுக்கான ஒதுக்கீடு ரூ.28.8 கோடியாகும். 2017-18ஆம் நிதியாண்டில் அது ரூ.10 கோடியாக இருந்தது.

உஜ்வாலா திட்டம்

பெண்கள் உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான உஜ்வாலா திட்டத்துக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டில் ரூ.35 கோடியாக இருந்தது.

முத்ரா யோஜனா

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கான கடன் வழங்கும் திட்டமான முத்ரா யோஜனா திட்டத்தில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களும் அதிகம் பயனடைவார்கள். இத்திட்டத்தின் மூலமாகத் தற்போது 76 சதவிகித சிறு பெண் தொழில்முனைவோருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 1.26 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் சுயஉதவிக் குழு

பெண்கள் சுயஉதவிக் குழுவுக்கான கடன் சென்ற ஆண்டில் ரூ.42,500 கோடியாக இருந்தது. தற்போது ரூ.75,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு எளிதில் கடன் வசதி கிடைப்பதோடு சிறு தொழில்களைத் தடையின்றி அவர்கள் மேற்கொள்ள முடியும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சென்ற ஆண்டில் பெண்களின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 55 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்கள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுக்காக 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.16,745 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.16,334 கோடியாக இருந்தது.

வருங்கால வைப்பு நிதி

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் தங்கள் சம்பளத்திலிருந்து செலுத்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு உயரும் என்பதால் பெண்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்.

மேலே குறிப்பிட்டுள்ள பெண்களுக்கான சலுகைகளோடு எட்டு கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, தூய்மை இந்தியா திட்டத்தில் இரண்டு கோடி கழிப்பறைகள், நான்கு கோடி கிராம ஏழைகளுக்கு இலவச மின் இணைப்பு, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதித் திட்டம் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்குவதற்குத் தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. இதுதவிர வயதான பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.

பெண்களின் வேலைவாய்ப்பை உயர்த்துவதினால் மட்டுமே சமூக பொருளாதாரம் வளர்ச்சிபெறும் என்ற நிலையில் பெண்கள் வெளிநாடு சென்று வேலை செய்வதில் உரியப் பாதுகாப்பினை மேம்படுத்தலில் அரசின் பங்கு இருப்பதும் அவசியமானதாகும். மேலும், விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கை அதிகரிக்கச் செய்வதும் அரசின் கடமையாகும்.

பெண்களின் கண்ணியத்தைச் சுட்டிக்காட்டி கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்த நிதியமைச்சர், பெண்களுக்கான சானிடரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்காததும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பெண்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமான வரி விலக்கு அளிப்பது போன்றவையும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியதாகும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018