மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

2018 குளிர்கால ஒலிம்பிக்: பனிக்குள் கனன்ற எரிமலைகள்!

2018 குளிர்கால ஒலிம்பிக்: பனிக்குள் கனன்ற எரிமலைகள்!

- சிவா

உலகமே உற்று நோக்கிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்களல்லவா, அப்படித்தான் தொடங்கியது தென்கொரியாவின் சியோல் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடர் 2018. உலகம் முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் விழாவாகக் குளிர்கால ஒலிம்பிக் தொடங்கினாலும், அமெரிக்கா - தென்கொரியா - வடகொரியா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் மற்றும் வீரர்களின் நடவடிக்கைகளே அதிகம் கவனிக்கப்பட்டன. காரணம், இந்நாடுகளுக்கிடையே இருந்துவரும் பதற்றமான சூழல் தான்.

மூன்று நாடுகளுக்கிடைப்பட்ட பதற்றமான சூழலை அதிகரிக்கும் விதத்தில், நேற்று (09.02.18) காலையிலிருந்தே தென்கொரிய மக்கள் சாலைகளில் தேங்கி போராட்ட கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். தென்கொரியாவுக்குத் தொடர்ந்து நியூக்ளியர் குண்டு வீசும்படியான அச்சுறுத்தலைக் கொடுத்துவரும் வடகொரிய நாட்டின் வீரர்கள் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதும், அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வருவதும் அம்மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், போர் சூழல்களைத் தாண்டி விளையாட்டு என்று வரும்போது ‘சரியான காரணங்கள் இல்லாமல் வடகொரிய வீரர்களை ஒதுக்கிவைக்க முடியாது. வேண்டுமென்றால் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை வேறு நாட்டிடம் கொடுத்துவிடலாம்’ என்ற முடிவுக்கு வந்தபோதுதான் தென்கொரியா, வடகொரிய வீரர்களை தனது நாட்டில் பாதுகாப்புடன் அனுமதிக்க சம்மதித்தது. ஆனால், மக்களுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை. மக்களிடம் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு, எதிர்பார்த்ததுதான் என்றாலும் வீரர்களுக்கிடையில் ஏதும் அசம்பாவிதம் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது தென்கொரியா. கிட்டத்தட்ட ஒரு மாதம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், முறைதவறி நடந்தால் விளையாட்டு வீரராக எந்த மாதிரியான எதிர்வினைகளைச் சந்திக்கவேண்டியது இருக்குமென்றும் அறிவுறுத்தப்பட்டனர். தென்கொரிய விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

தென் மற்றும் வடகொரிய வீரர்கள், வீராங்கனை 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து ஒன்றாக வந்தனர். அதிலும், கொரியாவின் பெனின்சுலா நகரத்தின் வடிவம் நீல நிறத்தில் பொறிக்கப்பட்ட ஐக்கிய கொரியாவின் கொடியை ஏந்தி அவர்கள் நடந்துவந்தது ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களிடையே ஒரு திருப்தியை ஏற்படுத்தியது. இரு நாட்டின் வீரர்கள், வீராங்கனைகள் ஏந்திவந்த ஒலிம்பிக் நெருப்பை, தென்கொரியாவின் ஸ்கேட்டிங் வீராங்கனையான யுனா கிம்மிடம் கொடுக்க ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு 2018ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் அசம்பாவிதங்கள் இன்றி தொடங்கியது. தென்கொரிய, வடகொரிய விளையாட்டு வீரர்கள் நல்லமுறையில் நடந்துகொண்டாலும், அந்நாடுகளின் அரசியல் தலைவர்களிடையே அதனால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.

வடகொரியாவை ஆளும் கிம் ஜாங் உன் இந்த ஒலிம்பிக் தொடரில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அவரது தங்கை கிம் யோ ஜோங் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். அவருடன், வடகொரியாவின் சுப்ரீம் பீபுள்ஸ் அசெம்ப்ளியின் தலைவர் கிம் யோங் நம் கலந்துகொண்டார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்தும் தனிப்பட்ட விமானத்திலேயே, அவரது தங்கை தென்கொரியா வந்தது, அந்நாட்டு மக்களை மேலும் கொதிப்படையச் செய்தது. ஒலிம்பிக் வளாகத்துக்கு உள்ளே எவ்வளவுதான் குளிர் இருந்தாலும், வெளியே மக்கள் வடகொரிய அதிபரின் படங்களைக் கிழித்தும், தென்கொரிய - அமெரிக்க கொடிகளை ஏந்தியபடி கோஷங்களைச் சொல்லியும் போராடிக்கொண்டிருந்தனர். தங்களது மக்களைச் சாந்தப்படுத்தும் வகையில் ஒலிம்பிக்குக்காக வடகொரியாவிலிருந்து வந்தவர்களை தென்கொரிய - அமெரிக்க அரசியசியல்வாதிகள் புறக்கணித்துவிட்டனர்.

அமெரிக்க பிரதிநிதியாகத் தென்கொரியாவுக்கு வந்திருந்த அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வடகொரிய நாட்டினருடன் எவ்வித நட்பும் பாராட்டவில்லை. வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங் அமர்ந்திருந்த வரிசைக்கு, முன் வரிசையிலேயே பென்ஸ் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த பலரும் கைகுலுக்கிக் கொண்டபோது யோ ஜோங்கையும் தவிர்த்துவிட்டார். ஆனால், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கிம் யோ ஜோன் உடன் கைகுலுக்கினார்கள். கிம் யோ ஜோன் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தது இந்த நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த பல நாட்டினருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், வடகொரியாவுக்கு எதிரான நாடுகளின் ஊடகங்கள் பலவற்றில் தென்கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா தாக்குதல் நிகழ்த்த வாய்ப்பிருக்கிறது என்று வெளியான தகவல்களினால்தான் கடைசி நேரத்தில் கிம் யோ ஜோங் வருவது உறுதியானது என்று வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி இப்படியாக முடிவுக்கு வர, அடுத்த நிகழ்வாக அவ்விழாவுக்கு வந்திருந்த அரசியல் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வடகொரியாவிலிருந்து வந்திருந்த சுப்ரீம் பீபுள்ஸ் அசெம்ப்ளியின் தலைவர் கிம் யோங் நம்முக்கு அருகில், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தகவல் தெரிந்ததால், அவர் இரவு விருந்தில் கலந்துகொள்ளாமல் சென்றுவிட்டார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் அதிகாரபூர்வ அலுவலகத்திலிருந்து, வடகொரிய நாட்டு அரசியல்வாதிகளுடன் அவர் எவ்வித இணக்கத்தையும் காட்டவில்லை என்று அறிவித்து, அந்நாட்டு மக்களுக்குச் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

மேலே நிகழ்வுகள் சூடாகச் சென்றுகொண்டிருக்க, ஒலிம்பிக் தொடக்க விழாவைப் பார்க்கவந்த மக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரும் அருகருகே நின்றுகொண்டிருந்ததுதான். அந்த இடத்திலிருந்த மக்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியிருக்கும். ஆனால், மிக சீக்கிரத்திலேயே அந்த இருவரும், கபடவேடதாரிகள் என்பதை உணர்ந்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் போன்று வேடமிட்டு வந்த அவர்கள் இருவருக்கும் கொஞ்சமான தைரியம் இல்லை என்பது மட்டும் உறுதி.

ஆக, 2018ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தென்கொரியாவின் பியாங்செங் மாகாணத்தில் அமர்க்களமாகவே தொடங்கியிருக்கிறது. காற்று வீசுவது குளிராக இருந்தாலும், ஒவ்வொருவருக்குள்ளும் உஷ்ணம் இல்லாமல் இல்லை. அதை, விளையாட்டு எனும் ஆயுதத்தால் சிறப்பாகவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பிப்ரவரி 25 வரை கட்டுப்படுத்தி வைத்துவிட்டால் தென்கொரிய நாட்டுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 10 பிப் 2018