மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

மாலத்தீவின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனா

மாலத்தீவின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனா

மாலத்தீவில் நிலவிவரும் அரசியல் நெருக்கடி குறித்து, இந்தியாவைத் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறியுள்ளது சீனா. அதேநேரத்தில், இந்த விவகாரம் இன்னொரு மோதலாக மாறிவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு, மாலத்தீவில் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார் அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன். இதுகுறித்து கவலை தெரிவித்த சர்வதேச நாடுகள், இதைத் தீர்ப்பதற்காக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் (பிப்ரவரி 8) மாலத்தீவில் நிலவிவரும் அசாதாரண நிலைமை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப். அப்போது, ஜனநாயக அமைப்புகளுக்கும் சட்ட விதிகளுக்கும் மதிப்பளிப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தகவல் வெளியிட்டது அமெரிக்க வெள்ளை மாளிகை.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் முகம்மது சயீத்தை சீனாவுக்கு அனுப்பி வைத்தார் யாமீன். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை, முகமது சயீத் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், மீண்டும் இந்தியாவைச் சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது சீனா.

நேற்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சுவாங், சர்வதேச சமூகம் மாலத்தீவின் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று கூறினார். மாலத்தீவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாதென்றும், அந்நாட்டிலுள்ள கட்சிகளுடன் மாலத்தீவு அரசு பேச்சுவார்த்தை நடத்த சீனா உதவி செய்யுமென்றும், முகமது சயீதிடம் வாங் யீ உறுதியளித்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஜெங்.

“மாலத்தீவில் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது, அதன் உள்நாட்டுப் பிரச்னைகளுள் ஒன்று. இதில் தொடர்புடைய கட்சிகள், இதைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலத்தீவில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவருவதற்காக, சிறப்புப் படையினரைத் தயார்படுத்தி வருகிறது இந்தியா. இதை மேற்கோள் காட்டிப் பேசிய ஜெங், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாதென்பது சர்வதேச உறவுகளில் முக்கியமானது என்றும், இதற்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த நாடும் இறங்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாலத்தீவு பிரச்னை தொடர்பாக இந்தியாவைத் தொடர்புகொண்டு சீனா பேசியதாகத் தெரிவித்தவர், அது இன்னொரு மோதலாக மாறிவிடக் கூடாது என்று அந்நாடு கருதுவதாகவும் குறிப்பிட்டார். டோக்லாம் எல்லையில் நிலவிவரும் பிரச்னை மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்துவருவது போன்றவற்றில் அந்நாட்டை விமர்சித்து வருகிறது இந்தியா. இந்த நிலையில், இந்தியாவை எதிர்த்து சீனாவின் சார்பாக இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளாகவே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது சீனா. அதன் தொடர்ச்சியாகவே, மாலத்தீவில் நிலவிவரும் பிரச்னையில் இந்தியா தலையிடுவதை எதிர்க்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்தியா தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தனது மேரிடைம் சில்க் ரோடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, இலங்கையின் ஹம்பந்தோட்டா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் முனையிலுள்ள ஜிபௌதியில் சீனா கால்பதித்துள்ளது. “இதை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே, மாலத்தீவிலும் தனது கவனத்தைப் பாய்ச்சி வருகிறது. அதற்காகவே, இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்த மாலத்தீவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியைச் செய்துவருகிறது சீனா. தற்போதைய அதிபர் யாமீன் சீனாவுக்கு ஆதரவாக இருந்துவருகிறார்” என்று கூறியுள்ளன மாலத்தீவிலுள்ள எதிர்க்கட்சிகள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018