மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

எய்ம்ஸ்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

எய்ம்ஸ்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு தமிழக சுகாதாரத் துறைக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். இதில் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.

ஆனால் தமிழகத்தில் மட்டும் 3 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மத்திய, மாநில அரசுகள் மீது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 இடங்களைத் தேர்வு செய்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இந்த 5 இடங்களிலும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்தியக் குழு வந்து ஆய்வு செய்தது. இந்தக் குழுவின் மதிப்பெண் அடிப்படையில் இடம் தேர்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவமனை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை 2017 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்" என்று கடந்த வருடம் (2017) ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட தேதிக்குள் மத்திய அரசு அறிவிப்பு வெளியிடாததையடுத்து, மத்திய சுகாதார அமைச்சரவைச் செயலர் பிரிதீ சுதன் மீது மனுதாரர் கே.கே.ரமேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 9) விசாரித்த நீதிபதிகள், மத்திய சுகாதார அமைச்சரவைச் செயலர் பிரிதீ சுதன் இதில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே பிரதமர் அலுவலகம், தமிழக சுகாதாரத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், ”தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து தமிழக சுகாதாரத் துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பரிந்துரைக் கடிதத்தின் நகல், உயர் நீதிமன்றக் கிளையில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த கே.கே.ரமேஷுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்களவையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 9 பிப் 2018