மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

இவர்கள் எப்படி அமைச்சர்களாக இருக்கிறார்கள்?: துரைமுருகன்

இவர்கள் எப்படி அமைச்சர்களாக இருக்கிறார்கள்?: துரைமுருகன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், காவிரிப் பிரச்சினையில் தமிழக அமைச்சர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். எந்தவொரு திட்டத்தைப் பற்றியும் அமைச்சர்கள் முன்னோக்கி யோசிப்பதில்லை என்றும், அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் மார்ச் 24, 25ஆம் தேதிகளில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக மண்டல மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்காக, சரளை என்ற பகுதியில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு திடலை, இன்று (பிப்ரவரி 9) பார்வையிட்டார் திமுகவின் முதன்மைச் செயலாளரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் மாநாடு இது என்று குறிப்பிட்டார்.

அதன் பின் காவிரி விவகாரம் பற்றிப் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ முறையிடுவதால் எந்தவிதப் பயனும் இல்லை என்று தெரிவித்தார். “காவிரி விவகாரத்தில், மத்திய அரசிடம் போய் கேட்போம் என்கின்றனர் தமிழக அமைச்சர்கள். இப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது. ஏனென்றால், கர்நாடகாவில் தண்ணீர் திறந்துவிட்டால் ஓட்டு கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். இந்த தந்திரங்கள்கூடத் தெரியாமல், இவர்கள் எப்படி அமைச்சர் பதவியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, எந்த அமைச்சராக இருந்தாலும் சரி; அவர்கள் எதையுமே முன்னோக்கி யோசிப்பதில்லை, சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. கமிஷன் வந்ததா, அதை வாங்கினோமா, அத்தோடு வேலை முடிந்ததா என்று இருக்கிறார்கள். கல்லா எவ்வளவு கட்டினோம் என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்” என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார் துரைமுருகன்.

பெருந்துறை வருவதற்கு முன்பு, கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும் காவிரி விவகாரம் குறித்துப் பேசினார் துரைமுருகன். “இதுவரை, காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அமைச்சரவை எடுத்த நடவடிக்கைகள் என்ன? பயிர் கருகிக்கொண்டிருப்பதே இவர்களுக்கு இப்போதுதான் தெரிகிறது.

கர்நாடக முதலமைச்சர் தேர்தலில் முனைப்பாக இருக்கிறார். அவருடைய பதவிக் காலத்தின் கடைசி நேரம் இது. இப்போதுபோய், அவரைப் பார்க்கப் போகிறேன் என்கிறார்கள். இப்போது வந்த புத்தி, ஏன் முன்னாடியே வந்திருக்கக் கூடாது” என்று கேள்வி எழுப்பினார். மேட்டூர் அணையில் எவ்வளவு தண்ணீர் இருப்பு இருக்கிறது என்றோ, காவிரி டெல்டா பகுதியில் எத்தனை லட்சம் ஏக்கருக்கு, எத்தனை டிஎம்சி தண்ணீர் தேவை என்றோ, தமிழக அமைச்சர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

இதேபோல, தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மீது அதிகரித்துவரும் புகார்கள் பற்றியும் பேசினார். “ஒரு துணைவேந்தர்கூடத் திறமையின் அடிப்படையிலோ, கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை. எல்லாரும் கல்லா கட்டிக்கொண்டு வருகிறார்கள்; இங்கு கல்லா கட்டி மாட்டிக்கொண்டார்கள்” என்றார் துரைமுருகன்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018