குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்கட்சிகள்!


நீதிபதி லோயா மரண வழக்கு நியாயமான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டுமென்று கோரி, இன்று (பிப்ரவரி 9) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தனர் எதிர்கட்சியினர்.
சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்துவந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று மரணமடைந்தார். நாக்பூரில் நடந்த திருமண விழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது, அவரது மரணம் நிகழ்ந்தது. இதனை ஏற்காத லோயாவின் உறவினர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர்.
லோயா மரணத்திற்குப் பின்பு சொராபுதீன் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில், பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லோயாவின் மரணம் தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இது தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு. அதற்கு நீதிபதி செலமேஸ்வர், மதன் பி லோகூர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, லோயா மரணம் தொடர்பான வழக்கை, சமீபத்தில் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. லோயா மரணத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பது குறித்து விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், லோயா மரண வழக்கில் நியாயமான விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையுடன், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தனர். சிபிஐ மற்றும் தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை வேண்டாம் என்றும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுடன் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய சிறப்பு விசாரணைக் குழு மூலமாக லோயாவின் மரணம் விசாரணை செய்யப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாகத் தயார் செய்யப்பட்ட புகார் கடிதத்தில், 15 கட்சிகளைச் சேர்ந்த 114 எம்பிக்கள் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்தனர். குடியரசுத் தலைவரிடம், இன்று அந்த புகார் கடிதத்தை அளித்தனர்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்துவிட்டு வந்த பின்பு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ராகுல். அப்போது, நீதிபதி லோயா மரணத்தை மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் வேண்டுகோளைக் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.