கண்ணாடி அணிந்த எடப்பாடி


கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து நலம் விசாரித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவையில் கண் பரிசோதனையில் செய்து கொண்டார். கடந்த வாரத்தில் மீண்டும் கண்ணில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை தி.நகரிலுள்ள ராஜன் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கண்ணில் புரை வளர்ந்திருப்பது தெரியவந்ததால் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 4ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே முதல்வர் வீடு திரும்பினார். நான்கு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து தற்போது வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். முதல்வரைக் கடந்த 6ஆம் தேதி பரிசோதித்த மருத்துவர் மோகன் ராஜன், முதல்வர் நன்கு குணமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வருக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், முதல்வர் பூரண குணமடைவதற்கு இறைவனை வேண்டுவதாகவும், விரைவில் முதல்வர் தனது பணியினைத் தொடர வாழ்த்துக்கள் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.