சாப்பிடும் போட்டி: மாணவி பலி!


சென்னையை அடுத்து உள்ள நீலாங்கரையில் சமோசா சாப்பிட்டு, குளிர்பானம் குடிக்கும் பந்தயத்தில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவி மூச்சுத் திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் காயத்ரி சின்ன நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குத் தோழிகளுடன் நடந்துவந்தார். வரும் வழியில் ஒரு கடையில் சமோசாவும், குளிர்பானமும் வாங்கியுள்ளனர். அதை யார் முதலில் சாப்பிட்டு முடிப்பது என்று அவர்களுக்குள் போட்டி நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து காயத்ரி, சமோசாவை சாப்பிட்டுவிட்டுக் குளிர்பானத்தை வேகமாகக் குடித்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயத்ரியை உடனே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், காயத்ரி வரும் வழியிலேயே மூச்சுத் திணறி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதிகமான உணவை உட்கொள்ளும்போது சிலசமயங்களில் உணவுக் குழாய் விரிந்து மூச்சுக் குழாய் அடைத்துவிடும். இதனால் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு அந்த நபர் இறக்கவும் வாய்ப்புள்ளது. இதுவே காயத்ரி இறந்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.