மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

வடமாநில ரயில் கொள்ளையர்கள் கைது!

வடமாநில ரயில் கொள்ளையர்கள் கைது!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரயில்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 6 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான ரூ.50 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார் என்பது இன்றும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. முக்கியமாக சேலம், திருச்சி, காட்பாடி ஆகிய இடங்களில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்த வட மாநில கொள்ளையர்கள் 63பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் 63 கொள்ளையர்கள் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார், நேற்று அதிகாலை ரயில் செங்கல்பட்டு வந்ததும் கொள்ளையர்கள் இருக்கும் பெட்டிக்கு முன்னும் பின்னும் இருந்த பெட்டியில் மாறு வேடத்தில் ஏறியுள்ளனர்.

அதுபோன்று தாம்பரத்திலும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் காத்திருந்தனர். காலை 4.30 மணியளவில் ரயில் தாம்பரம் வந்ததும் கொள்ளையர்கள் இருந்த பெட்டியை சுற்றி வளைத்த போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்குமார், ஹன்ஸ்ராஜ், மீனு, ஜியாலால், ராஜ்பீர்சிங், தீபக் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.200 லட்சம் மதிப்பிலான 600 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2014ஆம் ஆண்டு முதல் சேலம், தருமபுரி, தாம்பரம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்பட்ட ரயில்களில் பயணித்து கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு சேலத்தில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 150 பவுன் நகைகளையும், 2017 ஆம் ஆண்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 143 பவுன் நகைகளையும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைசூர் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 303 பவுன் நகைகளையும் இவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இவர்கள் இரவு நேரங்களில் ஏசி பெட்டியில் ஏறிக்கொண்டு பயணிகள் உறங்கும் நேரத்தில் நகை பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அடுத்த ரயில் நிலையம் வந்ததும் இறங்கிக் கொள்வார்கள். இதுமட்டுமின்றி வழி தடங்களையும் அவ்வப்போது மாற்றி வந்துள்ளனர். இதனால் ரயில்வே போலீசிடம் சிக்காமல் தப்பித்து வந்துள்ளனர்.

மேலும் கொள்ளையடிக்கும் நகைகளை வட மாநிலத்துக்கு எடுத்து சென்று உருக்கி கட்டிகளாக மாற்றி மீண்டும் அதனைத் தமிழகம் எடுத்து வந்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தற்போது, போலீசில் சிக்கிய கொள்ளையர்களிடம் இருந்து சுமார் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இந்த டிக்கெட்டுகள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து சேலம், தருமபுரி, தாம்பரம் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்த 10 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இவர்களை நேற்று இரவு போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 9 பிப் 2018