மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: மருத்துவக் கல்லூரிகள்: தமிழகம் புறக்கணிப்பு!

சிறப்புக் கட்டுரை: மருத்துவக் கல்லூரிகள்: தமிழகம் புறக்கணிப்பு!

ர.ரஞ்சிதா

நாடு முழுவதும் 82 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகூட இல்லை. மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

2018-2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்திருந்தார்.

முதல் கட்டமாக 58 இடங்களிலும், இரண்டாவது கட்டமாக 24 இடங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிவித்த மொத்தம் உள்ள 82 இடங்களில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகூட அறிக்கப்படவில்லை. தென்மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்படவில்லை.

புதிய மருத்துவக் கல்லூரிகள்

உத்தரப் பிரதேசத்தில் 13 மருத்துவக் கல்லூரிகளும், பீகாரில் 7 கல்லூரிகளும், ஜார்கண்டில் 5 கல்லூரிகளும், மத்தியப் பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், ராஜஸ்தான், மேற்கு வங்கம், சிக்கிம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 10,000 இளநிலைப் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கும். அதேபோல முதுநிலைப் படிப்புகளில் 8,058 இடங்கள் அதிகரிக்கும். 2020-2021ஆம் ஆண்டுக்குள் 82 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வளவு கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் நிலையில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகூட அறிவிக்காமல் இருப்பது தமிழக மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 7) டெல்லியில் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான் 82 கல்லூரிகளை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரிகள் இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

முதல்கட்டமாக 58 இடங்களிலும், இரண்டாவது கட்டமாக 24 இடங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க உள்ள அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். குறிப்பாக பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் அல்லது ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவத் தேவை அதிகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் மூன்று மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், தமிழகத்தில் கடலூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளே இல்லை.

நமக்கு நாமே!

“மருத்துவக் கல்லூரிகள் பொதுப்பட்டியலில் இருப்பதால், பொதுவாக மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசும் தொடங்கலாம், மத்திய அரசும் தொடங்கலாம். தமிழகத்தில் போதுமான அளவு மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. தமிழகத்தில் மாநில அரசே மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும். ஆனால், எய்ம்ஸ் தமிழகத்தில் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். அதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்” என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மூன்று நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

“தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகள் இருப்பதனால், இருக்கின்ற கல்லூரிகளுக்குக் கூடுதல் இடங்களை உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டது. கோவை, நெல்லை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் 345 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஒரு சீட்டுக்கு ரூ.1.2 கோடி என்ற அடிப்படையில் சுமார் 350 இடங்களுக்கு ஒப்புதல் அளித்து, அதற்கு சுமார் ரூ.420 கோடி திட்டமதிப்பீட்டில் 60 விழுக்காடு மத்திய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் இணைந்து கூடுதல் இடங்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இதேபோன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டம், திருநெல்வேலியில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டம் மற்றும் மதுரையில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டங்கள் தற்போது தொடங்கும் தறுவாயில் இருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப மாநில அரசே கொள்கை ரீதியாக ஆண்டுக்கொரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காகத் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஏற்கெனவே ஆண்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் மாநில அரசு திட்டத்தைச் செயல்படுத்தி வரும்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 1,000 இடங்களை அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடங்களை மத்திய அரசு இறுதிக்கட்ட பரீசிலனை செய்து, இன்னும் மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது” என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டிக்கத்தக்க புறக்கணிப்பு

நாடு முழுவதும் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான இடங்கள் குறித்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மருத்துவக் கல்லூரி கூடத் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. தமிழகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது,

இதுகுறித்து, இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:

“மத்திய அரசின் இந்த அறிவிப்பே, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, அவற்றின் நிதி ஒதுக்கீட்டோடு நடைபெறும் மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் அறிவிப்பை மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவிப்பது, மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் செயலாகும்.

தமிழகம் ஏற்கெனவே, மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிவருகிறது. அதுபோன்று ஒவ்வொரு மாநில அரசுகளும் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் சம அளவில் பிரித்து வழங்க வேண்டும். அதை விடுத்து, மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதாக மத்திய அரசே அறிவிப்பதும், ஏற்கெனவே நிறைய மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது எனத் தமிழகத்தை வஞ்சிப்பதும் கண்டனத்துக்குரியது.

நீண்ட காலமாக சொந்த நிதியில், படிப்படியாக ,அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிய தமிழகத்தை தண்டிக்கும் வகையிலும், மருத்துவக் கல்லூரிகளையே தொடங்காமல் பொறுப்பற்று இருந்த மாநிலங்களுக்குப் பரிசுகளை வழங்குவது போலவும் மத்திய அரசு செயல்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், தமிழகத்துக்கான உரியப் பங்கை மத்திய அரசு, மாநில அரசிடம் வழங்கிட வேண்டும். மாநில அரசு இந்த நிதியைக் கொண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட வேண்டும்.

மருத்துவக் கல்வியையும், மருத்துவச் சேவையையும் முற்றிலும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து பறித்து, நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுவது நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் பாதிக்கும். இந்நோக்கத்தோடுதான், மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை புகுத்தியுள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவர முயல்கிறது.

‘எய்ம்ஸ்’ போன்ற மருத்துவ நிறுவனங்களை, மாநிலம் தோறும் இன்னும் மத்திய அரசு தொடங்கவில்லை. அக்கல்லூரிகளில் அவை இடம் பெற்றுள்ள மாநில மாணவர்களுக்கென தனி ஒதுக்கீட்டை வழங்கவில்லை. இந்த நிலையில், மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றி, அவற்றைத் தனியாரிடம் தாரை வார்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, மறைமுகத் திட்டத்தோடு மத்திய அரசு செயல்படுவது சரியல்ல. இது மாவட்ட மருத்துவமனைகளை மத்திய அரசு, மாநிலங்களிடமிருந்து அபகரிக்கும் செயலாகும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 9 பிப் 2018