மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் இடம் என்ன?

சிறப்புக் கட்டுரை: உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் இடம் என்ன?

களந்தை பீர் முகம்மது

நம் ஜனநாயகத்துக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம் தேசத்தின் ஜனநாயகத்தைப் போற்ற வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்தியாவின் பூகோளவியல் நமக்கு இத்தகைய பெருமையைத் தருகிறது. இந்தப் பூகோளவியல் நம் பண்பாட்டுடன், மொழியுடன் இணையும்போது பல வண்ணங்களாகின்றன. சோம்பிக் கிடந்த நாடு அல்ல இது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா அளவுக்கு இந்திய நிலப்பரப்பு விரிவானதல்ல. ஆனால், இந்தச் சின்ன நிலப்பரப்பில் மட்டும் ஏராளமான மொழிகள், ஏராளமான வளங்கள், ஏராளமான பண்பாடுகள், பலவகைத் திணைகள். இவற்றை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பகுத்தால் இன்னுமின்னும் என ஏராளமான தொன்மங்கள், பழமொழிகள், இலக்கியங்கள், கலைகளின் விரிவளாவுதல்கள்... இப்படியாகப் போய்க்கொண்டிருப்பதால் இங்கே ஜனநாயகம் அதன் உச்சத்தில் இருந்திருக்கிறது. இவை எல்லாமும் எல்லாரோடும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்துள்ளன. இடையிடையே ஆதிக்கச் சக்திகள் தலையிடாதவரை இத்தேசம் வீறுநடை பயின்றிருக்கிறது.

வரலாற்றில் ஜனநாயக விழுமியங்கள்

சங்க இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது நாம் அறியும் உண்மைகள் பல. நம்முள்ளே விரிந்துகிடந்த ஜனநாயக விழுமியங்கள்தான் பேதங்களினூடும் நம்மை வழிநடத்தி வந்துள்ளன. அத்தகைய நடைமுறைகள் நம்மைக் கர்வம்கொள்ளச் செய்கின்றன. குடவோலை முறைகள், ஆராய்ச்சி மணி, மக்கள் கூடிய அவையில் தண்டனை விதிக்கப்பட்ட முறைகள் போன்றவை இங்கு இருந்துள்ளன. இவற்றை நாம் காலம்தோறும் பெருமிதமாகப் பேசலாம்.

இருந்தும் ஏன் இந்தியாவின் ஜனநாயகம் போற்றப்படுவதில்லை? இங்கு ஜனநாயகமே இல்லாதிருந்ததைப் போன்ற ஒரு சித்திரம் வரையப்பட்டுவிட்டது. ஒருகட்டத்தில் நம்மிடையே இருந்த வேறுபாடுகளை நாம் நம் பேறாகக் கருதியிருக்கிறோம். அதனோடு ஒற்றுமை இழைகளைப் பின்னியும் வந்துள்ளோம். ஆனால், நவீன காலத்தில் நாம் அவற்றை நம் பிரிவினைக் கோடுகளாக ஆக்கியிருக்கிறோம். கால மாற்றங்களோடு அந்த மரபை முன்னெடுத்து வராத விதத்தில் நம் தேசம் பின்தங்கிவிட்டது. அறிவியல் ரீதியாகச் சமூகத்தை ஆராயவில்லை; முன்னேற்றத்துக்கான வழிமுறையைத் தேடவில்லை. ஆன்மிகத்தின் வழியாகவே உயர்வைத் தேட முனைந்திருக்கிறோம். ஆன்மிகம் அதன் இயல்புக்கு மாறான பாதையில் செலுத்தப்பட்டது. ஒற்றுமைக்கான விதையாக இல்லாமல் பிரிவினைக்கான கோடாரியாக உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. நீ வேறு, நான் வேறு என்பது ஆன்மிக இயல்பாக வலியுறுத்தப்பட்டுவிட்டது. அன்றிலிருந்து பூசல்களும் வன்முறைகளும் புகுந்துவிட்டன என்று தோன்றுகிறது. ஆன்மிக மதியை அறிவியல் மதியாகத் திசைமாற்றம் செய்திருந்தால் இன்னும் இந்த உலகுக்கு நாமே முன்னோடிகளாக இருந்திருப்போம். கடவுளைத் துதிப்பதிலும் அவன் பாதார விந்தங்களைச் சரணடைவதிலும் இருந்த நம் மனப்பான்மை மேலெழ மறுத்தது ஏன்? அதே சமயத்தில் உள்ளொளியைச் சமூகப் புனரமைப்புக்குப் பயன்படுத்தும் வல்லார்கள் இருந்துள்ளனர் என்பதைச் சித்தர் பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. இடையில் விழுந்த தடைக்கற்களை இனிமேல் நாம் பரிசீலித்தால் நம் பின்னடைவுக்கும் ஜனநாயகத் தேக்கத்துக்குமான காரணங்கள் பிடிபடலாம்.

இந்திய நிலப்பரப்பைக் காமதேனுவாகப் பாவித்த பிரிட்டிஷ் அதிகாரம் இந்திய ஒற்றுமையைச் சிதறடிப்பதில் கவனம் செலுத்தியது. மதவாதங்கள், சாதியவாதங்கள், இனப்பேதங்களெல்லாம் நம்மைப் பிரித்தாளும் அதனின் கைக்கருவிகளாயின. இவற்றையெல்லாம் விஞ்ச பிரிட்டிஷ் ஆதிக்கமானது வணிகம், விஞ்ஞானப் பயன்பாடுகள், ஆயுதங்களோடு வந்ததிலிருந்து நம் மரபுகள் கைநழுவிப் போய்விட்டன. இறுதியில் பிரிட்டிஷார் விடைபெறும்போது நம்மிடம் விட்டுச்சென்ற ஜனநாயக உபகரணங்கள் என்னவோ அவற்றின் வழியாகவே நம்முடைய ஜனநாயகத்தை நாமும் உணர வேண்டியதாயிற்று. உண்மையின் மீது ஒரு பொய்மைப் பூச்சுபோல வந்த அந்த ஜனநாயகமே, நம்முடைய இறுதி அடையாளம் என்பது போலாயிற்று.

இத்துடன், பிரிட்டிஷாரின் ஏற்பாடுகள் நம் தேசிய இன அடையாளங்களை ஒற்றைத் தரிசனமாக்கி இரண்டு நாடுகளாக்கின. இந்த இடத்திலிருந்தும் ஜனநாயகத்தை அதன் மேன்மைப் பண்புகளுடன் செயல்படவிடாமல் ஒற்றைப் பாதையில் செலுத்திச் சென்றன பிற்போக்குச் சக்திகள். தேர்தலுக்குத் தேர்தல் இத்தகைய பிரிவினைவாத முழக்கங்கள் நாட்டின் ஒற்றுமையை, வலிமையை, வளர்ச்சியைத் தொடர்ந்து சேதாரப்படுத்தி வந்தன. இதற்கான நோக்கில் முதன்மைச் சக்தியாகச் செயல்பட்டவை ஆர்.எஸ்.எஸ்ஸின் மூலத்திலிருந்தவை; அதன் வழிவந்தவை.

சிறகிருந்தும் பறக்க இயலாத நிலை

நம் செயல்பாடுகளைத் தொலைத்துவிட்டு அதன் ஆக்கபூர்வ சிந்தனையை வளர்க்காமல் இருந்தோம். அதற்காக இன்று நாம் சிறகிருந்தும் பறக்கத் தொலைவில்லாத பறவைகளாகக் கூட்டுக்குள் முடங்கி நிற்கிறோம். ஜனநாயகம் என்பதைப் பிறர் சொல்லித் தர வேண்டியிருக்கிறது; சொல்லித் தந்தாலும் அதன் பரிமாணங்கள் புரியாமல் தவிக்கிறோம்.

மதவாதமும் சாதீயவாதமும் நம்மிடையே நிலைகுத்தி நிற்பதால் ஜனநாயகத்தைப் போற்ற முடியாமல் தேங்கி நிற்கிறது நாடு. 2014க்குப் பிறகு நம் நாட்டின் பன்மைக்குரல்களும் அடக்கப்பட்டு ஒற்றைக் குரலாகிவிட்டது. நிறம் ஒற்றையானது; பாதை ஒற்றையடியானது. உண்மையான நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட வேண்டுமானால் நாட்டில் ஒருமைப்பாட்டு உணர்வும் கோடி கைகளும் இணையும் வலிமை வேண்டும். இது ஓர் அரசியல் பாலபாடம். ஆனால், வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப்பணித்திருப்பதாகச் சொல்லும் ஆட்சியாளர்கள்தான் முதன்முதலாக அதற்கு எதிரிகளாகிறார்கள்.

பிரதமர் மோடியைப் போல உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர்கள் எவரும் கிடையாது. அவர் பயணம் மேற்கொள்ளும்போது இந்தியாவில் முதலீடு செய்வதற்காக அயல்நாட்டு நிறுவனங்களை, தொழிலதிபர்களையும் அழைக்கச் சென்றிருப்பதாக ஏனைய அமைச்சர்கள் காரணம் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொல்லுகிற அமைச்சர் தொழில் துறை அமைச்சராகவோ, வேளாண் அமைச்சராகவோ, வெளியுறவுத் துறை அமைச்சராகவோ இருக்கிறார். அந்தக் கட்டத்தில் பிரதமருடன் இவரும் போயிருக்க வேண்டும். ஏனெனில் இவர் துறை சார்ந்த ஒப்பந்தங்களைத்தான் பிரதமர் அயல்நாடுகளில் கையெழுத்திடுகிறார். இந்தப் பிரக்ஞைகூட இல்லாமல் அந்த அமைச்சர் தம் பிரதமரின் பயணத்தை நியாயம் செய்கிறார். இந்த அலட்சியம்தான் பிரதமரின் நோக்கத்தையும் பிரகடனத்தையும் சந்தேகப்பட வைக்கிறது. தம் சகாக்களின் ஆலோசனையும் உடனிருப்பும் அவசியமற்றவை என்ற நிலையில் பிரதமர் செயல்படுகிறார். இது நிர்வாக நடைமுறைகளிலான ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது.

அயலக முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதெனில் அந்த முதலீடுகள் பத்திரமாக இங்கு இருந்தாக வேண்டும். அவை பத்திரமாக இருக்க வேண்டுமெனில் சமூகத்தில் அமைதி தவழ வேண்டும். தொட்டதற்கெல்லாம் வன்முறைகளும் விஷம் தோய்ந்த வதந்திகளும் தோன்றக் கூடாது. இத்தகைய நிலவரங்கள் தொழில் உற்பத்தியைப் பாதிக்கும். காலாகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தங்கள்படி உற்பத்தியானவை அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்து உரிய இடங்களுக்குச் சென்றாக வேண்டும். கலவரத் தீ தொழிற்கூடங்களை எரித்துவிடலாகாது. இப்படியான சூழல்கள் இல்லையென்றால்தான் அயலக நிறுவனங்களோ, தொழிலதிபர்களோ வருவார்கள். ஆனால், மோடி அரசும் கட்சியும்தான் விபரீதச் சூழல்களை நாள்தோறும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு என்று முழங்கி வாக்குச் சேகரித்த மோடி இதுவரை நான்கு கோடிப் பேருக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், லட்சக்கணக்கில்கூட வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்கிறார்கள் தொழில் துறை நிபுணர்கள். உருவான வேலைவாய்ப்புகளும் உத்தரவாதமற்ற தினக்கூலி வேலைக்கான தன்மை பெற்றவையாக இருக்கின்றன. இத்தகைய வளர்ச்சியின்மையை மறைக்க மதவாதப் பிரிவினைக் கோஷங்கள் உதவுகின்றன. இந்த மதவாதப் பிரிவினைக் கோஷங்கள் எழும்பிக்கொண்டே இருப்பதால் வளர்ச்சியின்மை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. மாபெரும் விஷ வட்டம் இது. ஒன்றையொன்று அனுசரிக்கும் இப்போக்கு ஒருகட்டத்தில் தன் சுழற்சியை விட்டுவிட்டால் சகலமும் தெறித்துவிடும்.

இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலை

நிலைமை இப்படியெல்லாம் போய்க்கொண்டிருப்பதால் அது நேரடியாக ஜனநாயக நடைமுறைகளைப் பலவீனப்படுத்துகிறது. இப்படியாகத்தான் கடந்த ஆண்டு ஜனநாயகத்தைவிடவும் இந்த ஆண்டின் ஜனநாயக மாண்புகள் குலைந்துபோயிருப்பதாக ‘எக்கானாமிஸ்ட் இன்டெலிஜென்ட் யூனிட்’ என்ற அமைப்பு கூறுகிறது. 32ஆவது இடத்திலிருந்த இந்தியா இப்போது மேலும் பத்து இடங்கள் பின் தள்ளிப்போயிருக்கிறது. இதற்கான அளவீடுகளாக அது பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

நாட்டின் பன்மைத் தன்மையைக் காப்பதில் அரசு கொள்ளும் அக்கறை, அரசியல் பண்பாட்டின் செழுமை, தேர்தல் நடைமுறைகள், மக்கள் அமைப்புகளுக்கான சுதந்திரம் போன்றவை அந்த அமைப்பின் கவனத்திற்குரியாகின்றன. சில அமைப்புகள் சட்டம் ஒழுங்கைத் தம் கைவசப்படுத்திப் பகிரங்கமாக வன்முறைகளில் ஈடுபடுவதும் கொலைகள் புரிவதும் அதிகரித்திருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது. நாட்டில் ஜனநாயகம் அபாயத்துக்குள்ளாகி இருப்பதாக அதிருப்தியாளர்கள் சொல்வது உண்மைதான் என்று எக்கானமிஸ்ட் இன்டெலிஜென்ட் யூனிட் ஒப்புக்கொள்கிறது.

இந்தியப் பெருமைக்கு ஊறுவிளைவிக்கும் இவை குறித்துப் பிரதமரும் அவருடைய அரசும் கவலை கொள்ளவில்லை. மாட்டிறைச்சி என்று ஒருவர் யூகித்தால் போதும், எவ்வளவு பெரிய வன்முறைகளையும் புரியலாம் என்ற அளவில் நாடு சிக்கியிருந்தது. அது சர்வதேச ரீதியான கவனத்தை ஈர்த்தபோதும் பிரதமர் அதன்மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்போதும் நாள்தோறும் கட்சி அமைப்புகளில் பெரும் பொறுப்பிலுள்ளவர்கள் அல்லது தலைவர்கள் குடிமக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உளவியல் ரீதியாக ஒரு சமூகம் திட்டமிட்டே ஒடுக்கப்படும்போதோ அச்சுறுத்தப்படும்போதோ அந்நாட்டின் வளர்ச்சி என்பது கற்பனையான யூகமாகத்தான் இருக்க முடியும்.

இந்தக் கவலைகளை மிகைத்திருப்பது இந்திய ராணுவத்தின் அரசியல் குறுக்கீடுகள். இப்போது அமைச்சர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் பொதுவெளியில் உரையாடுவதுபோல ராணுவமும் பொதுவெளியில் பேசத் தொடங்கியிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளை ராணுவம் வகுக்கிறதோ என்கிற சந்தேகம் பல விஷயங்களில் உருவாகியுள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் ராணுவம் மாநில அரசை வழிநடத்தவும் மத்திய அரசைக் கட்டுக்குள் வைக்கவுமான ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. அரசின் முடிவுக்கு ராணுவம் இசைய வேண்டிய சூழலில், ராணுவமே முன்கையெடுத்துப் பேசுவதால் அரசின் போக்குகள் ஊசலாட்டமாகக் கூடும். இத்தகைய போக்குகள் ஊடகங்களின் சுதந்திரச் செயல்பாடுகளுக்குத் தடைகளாக விளங்குகின்றன. இவ்விஷயங்களையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் பல்வேறு இடையூறுகள் அதன் ஆரம்பகாலம் தொட்டே இருந்துவருவனதான். ஆனால், ஜனநாயகம் பலமாக விளங்கியதால் அந்த இடையூறுகளை அவ்வப்போது சமாளித்து இந்தியா தன்னைத்தானே பலப்படுத்தி வந்துள்ளது. ஆனால், இப்போது மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியிலுள்ளவர்கள் சகிப்புத்தன்மையற்ற மனநிலையில் இருப்பவர்கள். தம் குறைகளைச் செவியுறவும் செம்மை செய்யவும் மறுப்பவர்கள். அத்துடன் நாட்டின் கட்டமைப்பை மதரீதியான ஒழுங்குகளுக்குள் கொண்டுவந்து நிறுத்த விழைகிறார்கள். அரசியல் சட்டம் விரும்பாத பலவற்றையும் பகிரங்கமாகப் பேசி மக்களைப் பிளவுபடுத்தும் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

முன்னர் பல சமயங்களில் சர்வதேச அமைப்புகள் இந்தியா குறித்து வெளியிடும் கருத்துகளில் நம்பகத்தன்மை இல்லாதிருப்பது வழக்கம். தமக்குத் தேவையானபோது இந்தியாவை மிகைப்படுத்திப் புகழ்வதும் தேவையற்ற சூழல்களில் விமர்சிப்பதும் உண்டு. அவ்வாறான கருத்துகள் இங்கே பொருட்படுத்தப்பட்டு ஒருநாளும் விவாதிக்கப்படுவதில்லை. எவ்வகைக் கருத்தாக இருந்தாலும் நாட்டின் குடிமகன் அதன் உண்மை நிலவரத்தை அறிந்திருப்பவன் அல்லவா? ஆனால், இப்போது ‘எக்கானமிஸ்ட் இன்டெலிஜென்ட் யூனிட் முன்வைக்கும் கருத்துகள் ஒவ்வொரு குடிமகனின் அனுபவ ரீதியிலானவை என்பதால் இது முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆளும்கட்சியினர் இதற்கு எதிரான கருத்துகளை முன்வைக்கவில்லை என்பதையும் இதனோடு சேர்த்து நோக்க வேண்டும்.

ஜனநாயகச் செயல்பாடுகளில் 32ஆவது இடத்திலிருந்த இந்தியா 42ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியல் அடுத்துவரும் ஆண்டுகளில் இதைவிடவும் மோசமான இடத்தை வழங்காமல் இருந்தால் அதுவே நம் நற்கதி.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: களந்தை பீர் முகம்மது எழுத்தாளர், ஊடகவியலாளர், இஸ்லாமியச் சமூகம் குறித்து பரந்துபட்ட பார்வையுடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் எழுதிவருபவர். திரைப்படம் இலக்கியம், அரசியல் குறித்தும் நுண்ணுணர்வுடன் தன் சிந்தனைகளைப் பதிவு செய்துவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 9 பிப் 2018