நிர்மலா சீதாராமனுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குடியரசு தலைவருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. அப்பகுதியில் மூன்று தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியப் பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு சோபியான் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மூன்று பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு ஜம்மு காஷ்மீர் மாநில எதிர்க்கட்சிகள் மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தநிலையில், முதல்வர் மெகபூபா முப்தி ஒரு சில ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 8) இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.