மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: வாழ்வாதாரத்துக்குப் போராடும் முசாகர்கள்!

சிறப்புக் கட்டுரை: வாழ்வாதாரத்துக்குப் போராடும் முசாகர்கள்!

முகமத் இம்ரான் கான்

மொஷாதி மஞ்சி தனது வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் ஒரு நிலமற்ற விவசாயி. இவருடைய தந்தை நிலமற்ற விவசாயியாகவே இறுதிவரை வாழ்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய தாத்தாவும் இப்படியே இறந்தார். கடந்த ஐம்பது வருடங்களில் எதுவுமே மாறவில்லை. இவர் பீகாரிலுள்ள கயா மாவட்டத்தின் சிரியவான் பஞ்சாயத்தில் உள்ள மோகன்பூரில் வசித்து வருகிறார். இந்தப் பகுதியில் முசாகர் (பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிற தலித் சமூக மக்கள்) சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மொஷாதியும் முசாகர் சமூகத்தை சேர்ந்தவராவார். இவர் ஒருவருடைய கதை 25 லட்சம் முசாகர் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவர்கள் பீகாரின் வறட்சி பாதித்த மத்திய பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய வடக்குப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

மேம்பாடு மற்றும் மாற்றம் ஆகிய வார்த்தைகளை மட்டுமே தொடர்ச்சியாக இவர்களுக்கு அரசு நிர்வாகம் அளித்து வந்துள்ளது. இவர் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் ஒரு கூரை வேயப்பட்ட வீட்டில் வசித்து வந்தார். இவருடைய முன்னோர்களுக்கு நிலம் இல்லாததால் இவருக்கும் நிலம் இல்லை. அனைத்து முசாகர் மக்களுக்கும் இது பொருந்தும். சிலர் மட்டும்தான் இதில் விதிவிலக்கு. இப்பகுதிகளைப் பொறுத்தவரையில் நிலமற்ற தலித் மக்கள் எலி உண்பவர்களாக மேல் ஜாதியினரால் இழிவாக அறியப்படுகின்றனர். இந்தியாவில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக முசாகர் சமூகம் உள்ளது. இங்கு வாழ்கின்ற உயர்ஜாதி இந்துக்கள் இவர்களை தீண்டத்தகாதவர்களாக எண்ணுகின்றனர். நிலமற்ற விவசாயக் கூலிகள் என்பதுதான் இவர்களின் அடையாளமே. இவர்கள் எந்தவிதமான சமூகப் பொருளாதார மாற்றங்களையும் தற்போதோ, விரைவிலோ காண்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

பீகாரில் வாழ்கின்ற 96.3 சதவிகித முசாகர் சமூக மக்கள் நிலமற்ற தலித்துகளாவர். இவர்களில் 92.5 சதவிகிதப் பேர் விவசாயக் கூலிகளாவர். இவர்களுடைய நிலையில் 1980ஆம் ஆண்டு முதல் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இவர்களில் படிப்பறிவு பெற்றவர்களே வெறும் 9.8 சதவிகிதப் பேர் தான். அதிலும் படிப்பறிவு பெற்ற பெண்கள் 1 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். லால்பூரில் 25 முசாகர் குடும்பங்களும், சுற்றியுள்ள மற்ற கிராமப்பகுதிகளில் 100 முசாகர் குடும்பங்களும் வசிக்கின்றனர். இந்தக் கிராமங்கள் எல்லாம் கயா மாவட்டத்தின் தொலைதூரக் கிராமங்களாகும். சில காலங்களுக்கு முன்புவரை மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகவும் இருந்தது. மேலும் கயா மாவட்டத்தின் வளர்ச்சி குறைந்த மற்ற சில கிராமங்களிலும் இம்மக்கள் வசிக்கின்றனர். மோகன்பூரிலிருந்து சரியாக 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது போத் கயா (புத்த கயா) (வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோயிலின் பின்புறம் உள்ள போதி மரத்தின் (அரச மரம்) அடியில் அமர்ந்துதான் கவுதம புத்தர் ஞானம் பெற்றார்). மோகன்பூரில் இருந்து புத்த கயாவிற்கு செல்ல ஒரு கடினமான கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புத்த கயா ஒரு மாறுபட்ட உலகமாகும். இங்கு அதிக எண்ணிக்கையில் குடியிருப்பவர்கள் பீகாரின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராவர். குறிப்பாக யாதவ் சமூகத்தினர் இங்கு அதிகமாக வசிக்கின்றனர். மேலும் முசாகர் உள்ளிட்ட மகாதலித் பிரிவினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். (மகாதலித் என்பது பீகாரில் வசிக்கும் தலித் பிரிவு மக்களை குறிக்கும் வார்த்தையாகும்).

மொஷாதி உள்ளிட்ட முசாகர் சமூக மக்களின் உணவுத் தேவைக்கான சிக்கல்கள் இன்றும் தொடர்கிறது. இவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான தேடல்கள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கும் இந்தப் பிரச்னைகள் தொடருமென்றும் இவர் கருதுகிறார். "ஒரே ஒரு மாற்றம் தான் நடந்துள்ளது. என் தந்தை விவசாயக்கூலியாக வாங்கிய ஊதியத்தை விட நான் இருமடங்காக வாங்குகிறேன். வேறெந்த மாற்றத்தையும் காணவில்லை"" என்கிறார் மொஷாதி.

சுதா வெர்கீஸ் முசாகர் மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறார். இவர் பத்மா விருதையும் பெற்றுள்ளார். "கடந்த 40 வருடங்களாக முசாகர் மக்களின் வாழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் பணிகளுக்கும் அதிகளவில் இயந்திரங்கள் வந்துகொண்டிருப்பதால் இவர்களின் குறைந்த வருமானத்துக்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகிறது" என்கிறார் அவர். என்னுடைய தாத்தா 20 வருடங்களுக்கு முன்பு கொத்தடிமையாக இருந்தவர் என்று நினைவு கூறுகிறார் மொஷாதி. முசாகர்கள் பணக்கார நிலவுடைமை சமூகத்தினரிடமும், கடன் கொடுத்தவர்களிடமும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டவர்கள். முசாகர் சமூக மக்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள, நிலக்கிழார்கள் தங்களுக்கு சொந்தமாகக் கிராமத்துக்கு வெளியிலிருந்த தரிசு நிலங்களில் அவர்களை குடியிருக்க வைத்தனர்.

"எந்த சந்தேகமும் வேண்டாம். முந்தைய காலங்களில் நாங்கள் இலவசமான கொத்தடிமைகளாகத் தான் இருந்தோம். ஆனால் இப்போதும் சிலர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்" என்கிறார் மனோஜ் மஞ்சி. இவர் முசாகர் சமூகத்தைச் சேர்ந்தவர், படித்தவர். இவர் பீகாரில் உள்ள தனது சமூகத்துடன் நெருக்கமாக இருந்து பணியாற்றி வருகிறார். "என்னுடைய தாத்தா கொத்தடிமையாக இருந்தார். அப்போது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முசாகர்களும் கொத்தடிமைகளாகத் தான் இருந்தார்கள்" என்கிறார் ரம்ஜித் மஞ்சி. இவர் ராஜுயாந்தி கிராமத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய ஐந்து பிள்ளைகளும் நிலமற்ற விவசாயக் கூலிகள் என்று கூறி கவலைப்படுகிறார்.

லுங்கி மற்றும் மேலாடை அணிந்த தோற்றத்தில் மொஷாதி நம்மிடம் பேசினார். இந்தத் தலைமுறையில் தான் அனைவரும் அணியும் ஆடைகள் கூட இச்சமூகத்துக்குக் கிடைத்துள்ளது. அதேபோல உணவும் இப்போதுதான் முழுமையாகக் கிடைக்கிறது. ஆனால் குளிரால் பல நாட்களுக்கு வேலை இல்லாமல் போகும் நிலையும் உள்ளது. முகேஷ் மஞ்சி தனது 30 வயதுக்கு முன்பாகவே பாட்னாவில் உள்ள நூரிசாக் கிராமத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டார். இந்தக் கிராமம் உத்தரப்பிரதேசத்துக்கு அருகில் உள்ளது. இவர் அங்குள்ள செங்கல் சூளையில் பணிபுரிகிறார். "விவசாயக் கூலிகளுக்கான தேவைக் குறைந்து வருவதால் கடந்த எட்டு மாதங்களில் 3000க்கும் அதிகமான முசாகர்கள் சொந்தக் கிராமங்களை விட்டு வெளியூர்களில் வேலைகளுக்காக குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் முகேஷ்.

"80 சதவிகித முசாகர்கள் வேறு மாநிலங்களுக்கு குடியேறி விட்டனர். இப்போது பல்வேறு முசாகர்கள் குடும்பத்தோடு செங்கல் சூளைகளிலும், கட்டுமான நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்கின்றனர்" என்கிறார் மனோஜ். எஞ்சியவர்களில் பெண்கள், குழந்தைகள் தான் விவசாயக் கூலிகளாகவும், ஆடு மற்றும் பன்றி வளர்ப்பவர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். "வயதானவர்கள் மட்டும்தான் இன்னும் சொந்தக் கிராமங்களில் இருக்கிறார்கள்" என்கிறார் சுரேஷ் மஞ்சி.இவர் சொல்வதைப் போல மொஷாதிக்கும், ராம்ஜிக்கும் இப்போது 50 வயதுக்கு மேலாகிறது. "நாங்கள் வேலைகளுக்காக வெளியூருக்கு குடிபெயரவில்லை" என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

அஷ்ரஃபி சடா 'முசாகர் விகாஸ் மன்ச்' அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு பீகாரின் வடக்கு மாவட்டங்களில் பணியாற்றுகிறது. "முசாகர்கள் குடிபெயர்ந்து வெளியூர்களுக்கு சென்ற பிறகு அவர்களுக்கு ஒரு கண்ணியமான ஊதியம் கிடைக்கிறது. இதனால் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலையிலிருந்து விடுபடுகிறார்கள்" என்றார் அஷ்ரஃபி. வாழ்வாதாரத்துக்கான சூழலை உருவாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. "இங்கிருந்து குடிபெயராதவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை அளிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்" என்கிறார் ஷோயப் அக்தர். இவர் சிரியவான் பஞ்சாயத்து வேலைவாய்ப்பு சேவையில் பணியாற்றி வருகிறார். "அரசின் நலத்திட்டங்கள் இந்த மக்களை அடைவது கடினமான ஒன்றாக உள்ளது" என்கிறார் வெர்கீஸ். "எங்கள் மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும், போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருப்பதால் அரசின் நலத்திட்டங்களை அடைவது மிகுந்த சிரமமான ஒன்றாக உள்ளது. பல குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்" என்கிறார் சர்ஜூ மஞ்சி.

சில குழந்தைகள் குழுவாக இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிகளிலும் பாகுபாடு பார்ப்பதே இக்குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததற்கு காரணமாகவுள்ளது. "நாங்கள் சுத்தமற்றவர்கள், ஏனென்றால் நாங்கள் எலி சாப்பிடுகிறோம். பன்றி வளர்க்கிறோம், ஏழைகளாக இருக்கிறோம் என்பார்கள்" என்கிறார் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒருவரான போலா மஞ்சி. "அரசாங்கம் இந்தச் சமூக மக்களுக்கு எந்த விதமான சுகாதார வசதிகளையும் செயல்படுத்தவில்லை" என்கிறார் சடா. இந்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை. முசாகர் சமூகக் குழந்தைகள் மிக எளிதாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். முசாகர் சமூக பெற்றோர்கள் குழந்தை இறப்புகளுக்கு பொதுவாகக் கூறும் காரணம் இதுவாக உள்ளது.

மனோஜ் மேலும் கூறுகையில், "2009ஆம் ஆண்டு மாநில அரசு நிலமற்ற மகாதலித்துகளுக்கு (முசாகர்களுக்கும் சேர்த்து) 3 டெசிமல் (1,307 சதுர அடி) நிலம் வழங்க உறுதியளித்திருந்தது. ஆனால் இன்றுவரையில் இதை நிறைவேற்றவே இல்லை. முசாகர்கள் அரிதாக 60 வயதுக்கு மேல் யாரேனும் வாழ்ந்திருந்தால் கூட இதுவரையில் ஒருவர் கூட ஓய்வூதிய நிதி பெற்றதே இல்லை. பீகார் மாநிலத்தின் பட்டியலின மற்றும் பட்டியலின பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரமேஷ் ரிஷிதாவ் கூறுகையில், "முசாகர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளாகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எங்கள் அரசு சிறப்பான வளர்ச்சி கொடுக்க முயற்சித்து வருகிறது. அவர்களின் வாழ்நிலைகளில் மாற்றம் ஏற்படும்" என்றார்.

அதேபோல முசாகர்களின் நலனுக்காக வேலை செய்யும் மந்தான் அமைப்பைச் சேர்ந்த பிலிப் மந்த்ரா கூறுகையில், "சமமான வாய்ப்புகளை அவர்களுக்கு அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். முசாகர் சமூக குழந்தைகளுக்கு கல்வி உடனடியாகத் தேவைப்படுகிறது" என்றார். "இவர்களுக்கு சிறப்பு கல்வித் திட்டம் தேவைப்படுகிறது என்கிறார் அந்தோ ஜோசப். இவர் பீகார் தலித் விகாஸ் சமிதி அமைப்பின் இயக்குநராக உள்ளார்.

நில சீர்திருத்தங்கள் உட்பட சில முக்கியமான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படும்போது இவர்களின் நிலைமை மாற்றமடையும் என்கிறார் மனோஜ். பாட்னாவைச் சேர்ந்த ஏ.என். சின்ஹா இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுனில் ராய் கூறுகையில், "தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து முசாகர் சமூக மக்கள் புறக்கணிக்கப்படுவதை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் அவர்கள் நிலை மேற்கொண்டும் அப்படியே தொடரும். ஒரு கௌரவமான வாழ்க்கையை அவர்களும் வாழ அவர்களுக்கு இச்சமூகம் இடமளிக்க வேண்டும்" என்றார்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்

தமிழில்: பிரகாசு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018