வாகன விபத்து இழப்பீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!


வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றில், ‘வாகனத்தை மற்றவர்களுக்கு விற்றாலும் பதிவுச் சான்றிதழில் பெயர் மாற்றப்படாமல் இருந்தால் பழைய உரிமையாளரே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஜூலை 12, 2007 அன்று தன்னுடைய காரை மற்றொரு நபருக்கு விற்றுவிட்டார். அவர் செப்டம்பர் 18, 2008 அன்று வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் நவீன் குமார் என்பவருக்கு கார் கைமாறியது. நவீன் குமாரும் அந்தக் காரை மீர் சிங் என்பவருக்குக் கொடுத்துவிட்டார். இதுபோன்று ஆறு பேருக்கு அந்த கார் கைமாறியுள்ளது.
ஆனால், இந்த கைமாறுதலில் ஒருவர்கூட வாகனப் பதிவு சான்றிதழை தங்கள் பெயருக்கு மாற்றவில்லை. அதன்படி அந்த காரின் பதிவு சான்றிதழ் விஜயகுமார் பெயரிலேயே இருந்துள்ளது.
கடைசியாக மீர் சிங் கையில் கார் இருந்தபோது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி கார் விபத்துக்குள்ளானது. அப்போது அவரது ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார். விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், காரை இயக்கியவரும் பதிவு சான்றிதழில் பெயருள்ள உரிமையாளரும் ரூ.3.85 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விஜயகுமார் பஞ்சாப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜயகுமார் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனு கடந்த செவ்வாய் அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கார் உரிமையாளர்களில் ஒருவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 2(30)ன் படி, யார் பெயரில் கார் உள்ளதோ, அவர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, “வாகனத்தின் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்ட விஜயகுமார் வாகனத்தை மாற்றிக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். ஆனால், பெயர் மாற்றம் செய்யப்படாதபட்சத்தில் அவரே உரிமையாளராகக் கருதப்படுகிறார்” என்று உச்ச நீதிமன்றம் தனது கருத்தை முன்வைத்தது.
“1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 2(30)ன் படி, வாகனம் யார் பெயரில் பதிவாகியுள்ளதோ, அந்த உரிமையாளர் இழப்பீட்டைச் செலுத்தும் பொறுப்பு உள்ளவர்” என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜயகுமாரும், விபத்தன்று காரை இயக்கிய ஓட்டுநரும் இழப்பீட்டை இணைந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வாகனத்தை மாற்றினால், பதிவு சான்றிதழில் பெயரை மாற்றுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.