மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: குடும்ப அரசியல் வேறு; அரசியல் குடும்பம் வேறு!

சிறப்புக் கட்டுரை: குடும்ப அரசியல் வேறு; அரசியல் குடும்பம் வேறு!

அ.குமரேசன்

சுதந்திர இந்தியாவில், ஜனநாயக இந்தியாவில் இது எப்படிச் சாத்தியமாகிறது? அரசியல் தலைவர்களின் குடும்ப வாரிசுகள் அரசியல் வாரிசுகளாகவும் உருவெடுப்பது பற்றியே இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது.

மன்னராட்சிக் காலத்தில் வாரிசுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். சிம்மாசனத்தில் அமரும் உரிமையுள்ள வாரிசு யார் என்ற சண்டைதான் நடக்குமேயன்றி, சிம்மாசனத்தில் வாரிசு அமரலாமா என்பதில் சண்டை ஏற்பட்டதில்லை. அரசரை எதிர்த்து சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய அமைச்சர்கள், தளபதிகள் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறோம். அந்தக் கதைகளிலும்கூட, அவர்களது வாரிசுகள்தான் தொடர்ந்து மணிமுடி தரித்தார்கள் என்று பார்த்திருக்கிறோம்.

குறிப்பிட்ட மன்னர்களுக்கும் அவர்களை எதிர்த்தவர்களுக்கும் இடையேயான அரசியல் சண்டையாகத்தான் நடந்துகொண்டிருந்தனவே அல்லாமல், அந்த அரசராட்சி எல்லைக்கு உட்பட்டிருந்த குடிமக்களுக்கு அதில் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. தங்களை ஆள வேண்டியவர் பழைய மன்னரா, அவரைக் கவிழ்த்த புதிய மன்னரா என்று முடிவு செய்கிற அதிகாரம் மக்களுக்கு இருந்ததில்லை. குடவோலை முறை இருந்ததே என்று பெருமிதத்துடன் குறிப்பிடப்படுவதுண்டு. ஆனால், மன்னரின் பிரதிநிதியாக, குறிப்பிட்ட வட்டாரத்தின் தண்டல் நாயகமாக வரி வசூல், தகராறுகளைத் தீர்த்துவைப்பது போன்ற நிர்வாகப் பொறுப்பில் இருக்க வேண்டியவர் யார் என்பதற்கான தேர்தல் முறையாகத்தான் அது இருந்தது. மன்னர் யார் என முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல.

அதிலும்கூட, குடிமக்கள் எல்லோரும் பங்கேற்க முடியாது. சமூக அடுக்கில் மேல் தட்டு என்று சொல்லிக்கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தோராக இருக்க வேண்டும், அவர்களிலும் நிலவுடைமையாளர்களாக இருக்க வேண்டும், அவர்களும் ஆண்களாக இருக்க வேண்டும் என்ற விதிகளோடுதான் குடங்களில் ஓலை போட அனுமதிக்கப்பட்டது. அதைக் குடிமக்களின் அதிகாரம் என்று சொல்ல முடியுமா?

ஜனநாயகத்தில் எப்படி இது சாத்தியம்?

அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்ள வைத்தது ஜனநாயகம்தான். இந்தியாவில் அந்த ஜனநாயக உரிமைக்கான போராட்டம் என்று தனியாக நடைபெறாமல், விடுதலைப் போராட்டத்தின் வெற்றியோடு இணைந்ததாக அந்த உரிமையும் நிலைநாட்டப்பட்டது ஒரு மகத்தான வரலாறு. இந்த ஜனநாயகத்திலும்கூட எப்படி வாரிசுகள் அரசியல் அதிகாரத்துக்கு வர முடிகிறது? இந்த ஜனநாயகத்திலும்கூட எப்படி மக்கள் தலைவர்களின் வாரிசுகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறார்கள்?

மன்னர்களின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களாட்சியை நிறுவுவதற்காக மக்கள் அணிதிரண்டு போராட்டம் நடத்தியதில்லை என்ற கடந்த காலத்திலிருந்தும் இதற்கான விடையைத் தேடலாம். இங்கே, மன்னர்களையெல்லாம் ஆசை காட்டியோ, ஆயுதங்களைக் காட்டியோ அடக்கி, ஒரு பேரரசை நிறுவிய பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துதான் விடுதலைப் போராட்டம் வெடித்தது. அந்த பிரிட்டிஷ் ஆட்சியில், அவர்களது நாட்டில் நிலைநாட்டப்பட்டுவிட்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சார்ந்து, இங்கேயும் அவர்களது ஒட்டுமொத்த ஆட்சிக்கு உட்பட்டிருந்த மாகாண அரசாங்கங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆகவே, ஜனநாயகத்தின் ஒரு முக்கியக் கூறாகிய தேர்தல் பங்கேற்பு உரிமைக்காகத் தனியொரு போராட்டம் நடத்தி, அதை வென்றெடுத்த அனுபவமே நம் மக்களுக்கு வாய்க்கவில்லை. அரசியலில் வாரிகளை ஏற்கிற இந்திய மக்களின் மன நிலைக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும்.

அகில இந்திய அளவில் வாரிசு அரசியல் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவது காங்கிரஸ் கட்சி. “ஒரு பிரதமரின் சிதைக்கு இன்னொரு பிரதமர்தான் தீ மூட்ட வேண்டியிருக்கிறது” என்று கவிஞர் கந்தர்வன் ஒரு குறுங்கவிதையில் சொன்னதன் உள்ளடக்கத்தில் ஜவஹர்லால் நேரு உடலுக்கு அவரது மகள் இந்திரா காந்தி இறுதிச் சடங்குகள் செய்தார். பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமராகப் பொறுப்பேற்கச் செய்யப்பட்ட அவரது மகன் ராஜீவ் காந்தி இறுதிச் சடங்குகள் செய்தார் என்ற தொடர்ச்சி பற்றிய விமர்சனம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு, இந்திராவின் மருமகள், ராஜீவ் இணையர் சோனியா காந்தியிடம்தான் இத்தனை ஆண்டுகள் நிலைத்திருக்கிறது. இப்போது அவரது உடல்நிலை காரணமாக, மகன் ராகுல் காந்தியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் தயங்கவில்லை.

“பல மாநிலங்கள், அங்கேயெல்லாம் செல்வாக்குள்ள தலைவர்கள் என்றிருப்பதால், நேரு குடும்ப வாரிசாக வருகிறவர்களிடம் கட்சியை ஒப்படைக்காவிட்டால் யாரும் கட்டுப்பட மாட்டார்கள், நீயா நானா என்ற சண்டைதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்” என்று எனது நண்பரான காங்கிரஸ் இளம் தலைமுறைத் தலைவர் ஒருவர் கூறினார்.

காங்கிரஸ் மட்டும்தானா?

இதைக் காங்கிரஸ் கட்சியோடு மட்டும் சுருக்கிவிட முடியுமா? தன்னை மாறுபட்ட கட்சி எனக் கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியில் இது இல்லையா? அதன் தேசியத் தலைமை இருக்கைக்கு வாரிசுகள் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் வாரிசுகள்தான் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில், அதற்கு முன் எந்தக் கட்சியும் பெற்றிராத பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது பாஜக. மக்களவைக்கு வந்த வாரிசுகளில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 44.4 விழுக்காட்டினர். குறிப்பிட்ட வட்டாரங்களின் பெரும் நிலவுடைமையாளர்களாகவோ, அங்கே ஆதிக்கம் செலுத்தும் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருக்கக்கூடிய அவர்கள், பிழைப்புக்காக, அல்லது சமூகக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தங்களைச் சார்ந்திருக்கிற கணிசமான மக்கள் தளத்தைக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஒரு ராஜபுத்திர மன்னர் குடும்ப வாரிசாக இருப்பது, அவரது மகன் மக்களவை உறுப்பினரானது, தங்கை மத்தியப்பிரதேச மாநில அமைச்சராக இருப்பது ஆகியவற்றின் பின்னணியில் அவர்களது ‘ராஜவம்சம்’ சார்ந்த செல்வாக்கை நடப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிற பாஜக யுக்தி இல்லையா என்ன?

காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தி சயீத், முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோரின் குடும்பப் பின்னணியை மறந்துவிட முடியாது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் வாரிசுரிமையாகக் கட்சியின் தலைமைக்கும் முதலமைச்சர் பதவிக்கும் வந்தது எந்தப் பின்னணியில்? ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட நிர்வாகத் திறன்கள் பெற்றவராக இருக்கலாம், ஆனால், அவர் அரசியலில் காலூன்றுவதற்கு, என்.டி.ராமராவ் மருமகன் என்பது ஒரு வலுவான தளத்தை அமைத்துத் தரவில்லையா?

தமிழக நிலவரம்

தமிழகத்தில் தலைவரின் வாரிசு என்ற முத்திரையோடு அரசியலுக்கும் கட்சிப் பதவிக்கும் அரசு அதிகாரத்துக்கும் வந்தவர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். தொடக்கத்திலிருந்தே கட்சியின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்திருப்பவர் என்ற தகுதியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. கனிமொழி அக்கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பது, மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்படுவது ஆகியவற்றின் பின்னணியில், அவரது வாசிப்புகள், வெளிப்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னதாக அவர் கலைஞரின் மகள் என்ற அடையாளம் இருப்பதை மறுப்பதற்கில்லை. மற்றொரு மகன் மு.க.அழகிரி விவகாரம் மன்னர் கால வாரிசுரிமைச் சண்டையைத்தான் நினைவூட்டுகிறது. இன்று ஸ்டாலினின் மகன் உதயநிதி கட்சியின் ஆர்ப்பாட்டக் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அய்யா, சின்ன அய்யா குடும்ப சார்பும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதுதான். இதுபோன்ற கட்சிகளில் இத்தகைய வாரிசுத் தகுதியைத் தாண்டி மற்றவர்கள் ஜனநாயகபூர்வமாகத் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட முடியுமா? கட்சியின் முக்கிய இடங்களில் இருப்பவர்கள்கூட மற்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு, உட்கட்சி ஜனநாயகம் செயல்படுத்தப்பட்ட வந்தவர்கள் அல்ல, தலைமைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்களே.

ஆனால், இவ்வாறு வாரிசு என்ற தகுதியால் கட்சிப் பதவிகளுக்கு, ஒருவேளை ஆட்சியதிகாரத்தில் அமர்கிற வாய்ப்புக் கிடைத்தால் அரசுப் பதவிகளுக்கு வருவது குறித்து, அதை விமர்சிக்கிறவர்கள்தான் கவலைப்படுகிறார்களேயன்றி, அந்தக் கட்சிகளின் அடுத்த மட்டத் தலைவர்களோ உறுப்பினர்களோ பொருட்படுத்துவதில்லை. உள்ளுக்குள் குமுறல் இருக்கக்கூடும், அதைக் காட்டிக்கொள்வதில்லை. தங்களது சம காலத்தவர் அல்லது வட்டாரத்தில் தங்களது ஆளுமைக்குப் போட்டியாகக் கருதுபவர் வசம் தலைமைப் பொறுப்பு போவதைவிட, வாரிசுகளின் கையில் அது தரப்படுவதை ஏற்றுக்கொள்கிற சமரச உளவியல்கூட இருக்கக்கூடும்.

வாரிசு அடிப்படையில் அரசியலுக்கு வந்தது பற்றிக் கேட்டால் இக்கட்சிகளின் தலைவர்கள் சொல்கிற பதில், அதிலே என்ன தவறு இருக்கிறது என்பதல்ல, மாறாக அந்தக் கட்சியில் அப்படி நடக்கவில்லையா, இந்தக் கட்சியில் அப்படி நடக்கவில்லையா என்று கேட்டுப் பதுங்குவதாகவே இருக்கும்.

அஇஅதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர், தங்கள் தலைவருக்குக் குடும்பம் என இல்லாததன் காரணமாகவே அவர்கள் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையில்லை என்று சித்திரித்து ஊழல் குற்றங்களுக்கும் இதர பல அத்துமீறல்களுக்கும் திரையிட முயன்றதையும் நாடு கண்டுவந்திருக்கிறது.

குடும்பமே கட்சியாகும் நிலை

ஆக, பெரும்பாலான கட்சிகளில் குடும்பச் செல்வாக்கு அரசியல் இருக்கிறது – கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இதர இடதுசாரி கட்சிகளையும் சில முற்போக்கான கட்சிகளையும் தவிர. கவனத்துக்குரியது என்னவெனில் இக்கட்சிகள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், குடும்பத்தினர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துவதுதான். ஒரு குறிப்பிட்ட தலைவர் அல்லது மூத்த தோழர் பற்றிக் கூறுகிறபோது அவரது குடும்பமே கட்சிக் குடும்பம் என்று அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்வது கம்யூனிஸ்ட் இயக்கம். அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிற தோழர்கள் அதற்காகப் பெருமிதம் கொள்வது ஒருபுறமிருக்க, தங்களது குடும்பத்தினர் பற்றி அவ்வாறு சொல்கிற வாய்ப்பு அமையவில்லையே என்று பல தோழர்கள் உறுத்தலுணர்வுக்கு உள்ளாவதும் உண்டு.

ஆம், அரசியல் என்பது ஒரு சாராருக்கு என நேர்ந்துவிடப்பட்டதாக இருக்க முடியாது. அரசியல்வாதிகள் தனிப்பட்ட பிறவிகள் என்று கருதி மற்றவர்கள் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது அரசியல் சீர்குலைவுக்கான ஒரு முக்கியக் காரணம். அரசியல் பங்கேற்பு என்பது, எந்தக் கட்சியின் சின்னத்துக்கு நேராகப் பொத்தானை அழுத்தினோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் வாக்குச் சாவடிக்குப் போய்வருவதோடு நிற்பது சுயநலக் கூட்டங்களுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கிறது. இப்படிச் சொல்வது ரகசிய வாக்குப் பதிவு முறை கூடாது என்ற பொருளில் அல்ல. அரசியலைச் சிலருக்கு மட்டுமே உரியதாக ஒதுக்கிவிட்டுத் தாங்கள் ஒதுங்கியிருக்கிற மனநிலை சரிதானா என்று மக்களிடம் கேட்பதற்காகவே.

சில அரசியல் குடும்பங்களில் அண்ணன் ஒரு கட்சி என்றால் தம்பி இன்னொரு கட்சியில் இருப்பார். அதற்குக் காரணம், கொள்கை வேறுபாட்டால் அல்ல, எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கும் வருவாயும் அமோகமாய்த் தொடரும் என்ற கணக்கில்தான். வீட்டுக்குள் ஏற்பட்ட யார் பெரிய ஆள் என்ற குடும்ப அரசியலின் தொடர்ச்சியாகவும் இது அமையக்கூடும். அது போன்ற சுயநலமிகளை அரசியல் ஈடுபாட்டுக்கான முன்னுதாரணமாகக் கொள்ளத் தேவையில்லை.

அரசியலைத் தூய்மைப்படுத்துவது பற்றிப் பலரும் பல கோணங்களில் பேசுகிறார்கள். அரசியலின் தூய்மைக் கேட்டுக்குச் சான்றாக அவர்கள் ஆட்சியாளர்களின் ஊழல் வேட்டைகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார்கள். ஊழல் ஒரு மோசமான கேடு என்பதை மறுக்க முடியாது என்றாலும், மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்துவது, சாதிய அடையாளங்கள் பற்றிச் சொல்லி உசுப்பிவிடுவது, சிலரது ஏகபோக லாபக்குவிப்புக்காக ஒட்டுமொத்த தேசமே சுரண்டப்படுவது போன்ற இன்னும் மோசமான கேடுகள் இருக்கின்றன. இந்தக் கேடுகள் அனைத்தையும் களைந்து அரசியலை உண்மையிலே மக்கள் தொண்டுக்கான மையக் களமாக மாற்றுவதற்கு உத்தரவாதமான ஒரு வழி குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வருவதுதான்.

மாற்றுப் பண்பாடு பற்றிப் பேசுகிறவர்கள் இதையும் சேர்த்துதான் பேச வேண்டும். தகப்பனோ, தாயோ இயக்கத்தில் முன்னணி இடத்தில் இருப்பதால் வாரிசுகளுக்கு ஓர் எளிதான அறிமுகம் கிடைத்துவிடுவது உண்மை. அதற்குப் பிறகு அவர்களே முன்னணி இடத்துக்கு வருவது அவர்களது கொள்கை உறுதி, ஈடுபாடு, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். தலைவரின் வாரிசு என்பதே முழுத் தகுதியாகிவிடக் கூடாது.

ஜனநாயகத்தின் தலையாய அருமை மக்களின் பங்கேற்புதான். மிகப் பெரும்பாலான மக்கள் குடும்பம் குடும்பமாகத்தானே வாழ்கிறார்கள்? ஜனநாயகம் மென்மேலும் வலிமை பெற, குடும்பம் குடும்பமாக மக்கள் அரசியலுக்கு வந்தாக வேண்டும். எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அது அவர்களது உரிமை. ஆனால், அரசியலுக்கு வரட்டும் – அது அவர்களது கடமை.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 9 பிப் 2018