மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

கோயிலில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு!

கோயிலில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள கடைகளை நாளை 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுர பகுதியில் இருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்திற்கு கோயிலுக்குள் கடைகள் இருப்பதே காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். எனவே கோயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் கடைகளை அகற்றுமாறு மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று காலை 11 மணிக்குள் நோட்டீசை பெற்றுக் கொண்டு கடைகளைக் காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கோயில் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜு நாகுலு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “பத்துக்கு பத்து என்ற கணக்கில் மீனாட்சி அம்மன் கோயிலில் 150க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதற்காக மாதம் ரூ.2 லட்சம் வாடகை செலுத்துகிறோம். எங்களிடம் கூடுதல் பணத்தை வசூலிக்கும் கோயில் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கையை எடுப்பதில்லை. இரவு நேரத்தில் கோயில் முழுவதும் ஒரு காவலரும், மின் ஊழியரும் பணியில் உள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட நாளன்று இரவு 10.20 மணிக்கு 72ஆவது கடையில் ஏற்பட்ட மின் கசிவுதான் விபத்துக்குக் காரணம். விபத்து நடைபெற்றபோது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. மின் ஊழியரும் பணியில் இல்லை. அவர் பணியில் இருந்திருந்தால் தீ விபத்தைத் தடுத்திருக்கலாம்.

கோயில் நிர்வாக அதிகாரிகளின் அலட்சியதால்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளைக் காலி செய்யும் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 8) மதியம் விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இந்து சமய அறநிலையத் துறை நோட்டீசுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.

மீனாட்சி கோயில் வளாகத்தில் செயல்படும் அனைத்துக் கடைகளையும் நாளை (பிப்ரவரி 9) பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும் 3 வாரத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018