மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: ஏமாற்றமளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை!

சிறப்புக் கட்டுரை: ஏமாற்றமளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை!

கபிர் அகர்வால்

அருண் ஜேட்லி நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது நான்காவது முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் தங்களது 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியான குறைந்தபட்ச ஆதரவு விலையாக (எம்.எஸ்.பி) அதன் உற்பத்தி விலையை விட 50 சதவிகிதம் கூடுதலாக வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம் என்று கூறினார் அருண் ஜேட்லி. “காரிஃப் பருவத்திலிருந்து உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1.50 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்” என்று பட்ஜெட் உரையில் ஜேட்லி கூறியிருந்தார். இதன் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது எளிதாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தை உற்று நோக்கினால் நிதியமைச்சரின் கூற்று தவறானது என்று புரியும். குறைந்தபட்ச ஆதரவு விலை எல்லாப் பயிர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. சில குறிப்பிட்ட பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த விலையை விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (சி.ஏ.சி.பி) உறுதி செய்கிறது. சி.ஏ.சி.பி மூன்று வழிகளில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்கிறது. ஏ2 (செலவுக்கேற்ற விலை), ஏ2 + எஃப்.எல் (செலவுக்கேற்ற விலை + குடும்ப வருவாய் மதிப்பு) மற்றும் சி2 (விரிவான செலவு, முதலீட்டுக்கான கடன் மற்றும் நிலத்திற்கான கடன்) ஆகிய மூன்று வழிகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. (சி2>ஏ2 + எஃப்.எல்>ஏ2)

வேளாண் கொள்கை வல்லுநர் தேவிந்தர் சர்மா இதுபற்றிக் கூறுகையில், “சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தியின் விரிவான செலவு அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. சி2 தான் விவசாயிகளுக்குத் தேவை. ஏ+எஃப்.எல் இல்லை” என்கிறார்.

கடந்த சில வருடங்களாக விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 சதவிகிதம் உயர்த்தக் கோரிக்கை விடுத்து வருகின்றன. சி2 அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், மத்திய அரசோ ஏ2 + எஃப்.எல் அடிப்படையில் வழங்குகிறது. பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ஹர்பல் சிங் கூறுகையில், “நிலத்துக்கான செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகளும் சேர்த்து 1.50 மடங்கு கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், நிதியமைச்சரின் அறிவிப்பில் எல்லாவற்றையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதாகக் கூறவில்லை. சில விடுபட்டுள்ளன” என்றார்.

ஜெய் கிஷான் அந்தோலன் அமைப்பாளர் அவிக் சஹா கூறுகையில், “பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 சதவிகிதம் உயர்த்தி வழங்க வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. இவை ஏ2+எஃப்.எல் முறைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு சி2 முறைப்படி தான் வழங்க வேண்டும். ஏ2+எஃப்.எல் முறைப்படி பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகவே இல்லை. இதை நரேந்திர மோடி உணர வேண்டும். உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக 50 சதவிகிதம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட வேண்டும். ஆனால் ஏ2+எஃப்.எல் முறைப்படி அளித்தால் இது சாத்தியமாகாது” என்றார்.

ஜேட்லி தனது உரையில், ராபி பயிர்களுக்கான உற்பத்திச் செலவு 1.50 மடங்கு உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளார். 2017-18 ராபி பருவத்தில் 50 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே சி2 முறையில் பெற்றுள்ளனர். இது எல்லாப் பயிர்களையும் சேர்த்துப் பெற்றவர்களின் விகிதமாகும். ஜேட்லி தனது உரையில், “ஏற்கனவே சி2 முறையில் 1.5 சதவிகிதம் குறைந்தபட்ச ஆதரவு விலை கூடுதலாக வழங்கியிருப்பதாகக் கூற இயலாது. இவையெல்லாம் ஏ2+எஃப்.எல் முறையில்தான் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தைத் தொடர்பு கொண்டபோது எந்தப் பதிலும் சொல்லாமல் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டது. நிதியமைச்சகத்தின் தரப்பில் இருந்து வந்த பதில், “எங்களுக்குத் தெரியாது. குறைந்தபட்ச ஆதரவு விலையை முடிவு செய்வது வேளாண் துறை அமைச்சகம்தான். அங்கே போய்க் கேளுங்கள்” என்பது தான். வேளாண் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “குறைந்தபட்ச ஆதரவு விலை ஏ2+எஃப்.எல் முறையில்தான் வழங்கப்படுகிறது. எப்போதுமே இப்படித்தான் வழங்கப்படுகிறது. சி2 முறையில் வழங்க வேண்டுமானால் எல்லாச் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். அது சாத்தியம் இல்லை” என்று அதிகாரி ஒருவர் கூறினார். பெயரைக் கூற மறுத்துவிட்டார் அவர்.

வேளாண் பொருளாதாரவியலாளரான அசோக் குலாத்தி கூறுகையில், “ஏ2+எஃப்.எல். உற்பத்திக்கான செலவை மட்டுமே கணக்கில் கொள்கிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் அறிவிப்பில் வேறு ஏதும் புதிதாக இல்லை. இதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக ஏ2+எஃப்.எல். விலையை விட 50 சதவிகிதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியாகவும் இதை பாஜக வழங்கியிருந்தது. ஏற்கனவே குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஏ2+எஃப்.எல் முறைப்படி பார்த்தால் கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை 100 சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தான் உள்ளது. இப்போது மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? இதன் ஆதரவு விலையை 50 சதவிகிதமாகக் குறைக்கப்போகிறதா?" என்றார்.

நிதியமைச்சரின் அறிவிப்பு அவர்களின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒரு நெருக்கடியான ஒன்று என ஹர்பல் சிங் தெரிவித்துள்ளார். “பாஜக இதை ஒரு பிரசாரமாகக் கொண்டு செல்கிறது. தற்போது உற்பத்திச் செலவை விட 1.50 சதவிகிதம் கூடுதலாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. உற்பத்திச் செலவு ஒரு பகுதி மட்டும்தான். இது விவசாயிகளுக்குப் பயனளிக்காது. இப்போது எல்லோரும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சி2 முறையில் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த ஓர் ஆண்டில் மத்திய அரசு தனது இலக்காகக் கூறி வந்ததை இப்போது மாற்றிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது” என்றார்.

தேவிந்தர் சர்மா மேலும் கூறுகையில், “குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை. மத்திய அரசு ஏ2+எஃப்.எல் முறைப்படி தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 93 சதவிகித விவசாயிகள் முழுமையான ஆதரவு விலையைப் பெறவில்லை. இதனால் பல விவசாயிகள் சந்தைகளில் தங்களது விளைபொருள்களைத் தாங்களே விற்கும் சூழல் உருவானது. எல்லோருக்கும் முழுமையான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கான எந்த உறுதியையும் பாஜக வழங்கவில்லை. ஆனால், இங்கு ஆதரவு விலை எதன் அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படுகிறது என்பதே பிரச்னையாக உள்ளது” என்கிறார்.

மேலும், “25 பயிர்களுக்கு மட்டும்தான் ஆதரவு விலை வழங்கப்படுகிறது. மற்ற பயிர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், மற்ற பயிர்களும் சந்தையில் பெரும் ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. ஏன் மற்ற பயிர்களுக்கு வழங்குவதில்லை? காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு ஏன் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதில்லை? இவை ஒருநாள் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு விற்றால், மறுநாளே 5 ரூபாய்க்கு விற்கப்படும் சூழலும் ஏற்படுகிறது. இதுபற்றி அரசாங்கம் ஏன் எந்தக் கவலையும் கொள்ளவில்லை?” என்கிறார் மோனு சவுத்ரி. இவர் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆவார்.

பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த பிர்சந்தர் ராய் கூறுகையில், “குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் திட்டம் பெரிதாக விவசாயிகளைச் சென்றடையவே இல்லை. உரிய நேரத்தில் அரசாங்கமும் கொள்முதல் செய்வதில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகிக் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக அரசாங்கம் கொள்முதல் செய்யவே இல்லை. நான் ஒரு சிறு விவசாயி. எனக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது. இதனால் அரசாங்கம் கொள்முதல் செய்யும் வரையில் என்னால் விற்பனை செய்யாமல் இருக்க முடியாது. எனவே, தனியார் வர்த்தகர்களிடம் விற்பனை செய்துவிட்டேன். எனக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,100 வரை மட்டுமே கிடைத்தது” என்றார்.

ஆனால், அரசாங்கமோ 2017-18 நிதியாண்டில் அரிசிக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,550 மட்டுமே ஆதரவு விலையாக நிர்ணயித்துள்ளது. ஆதரவு விலையாக 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது சில விவசாயிகளுக்குப் பயனளித்திருக்கும். ஆனால் விவசாயிகள் செலவிடுகின்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் 1.5 ரூபாய் கிடைத்தால் மட்டுமே அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவர்” என்றார்.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018