மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

இனி மாதம் ஒரு முறை மின் கட்டணம்?

இனி மாதம் ஒரு முறை மின் கட்டணம்?

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.

தமிழக மின் வாரிய ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வை வலியுறுத்தி, வரும் 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றதை அடுத்து, நேற்று (பிப்ரவரி 7) வேலைநிறுத்தம் உறுதியாக நடைபெறுமென 10 மின் வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் எரிசக்தித் துறை தொடர்பான கண்காட்சி இன்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி. அதன் பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் பெறுவது சிறப்பாக நடைபெறுவதாகத் தெரிவித்தார். மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த தங்கமணி, ”மின்சார ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பது குறித்துத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும். அரசின் கொள்கை முடிவு என்பதால், தமிழக முதலமைச்சர் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றலாம் என்ற நிபந்தனை உதய் மின் திட்டத்தில் இருந்த காரணத்தினாலேயே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தவிர்த்துவந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெட்ரோல், டீசல் அடிக்கடி விலை உயர்வது போல, மின் கட்டணமும் மாறும் என்பதே இதற்குக் காரணம். ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில், தமிழக அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார். இதன் மூலமாக, மின் உற்பத்தி மாநில அரசின் வசம் இருக்கும் என்றும் அதன் விநியோகம் தனியார் நிறுவனங்கள் கைக்குச் செல்லும் என்றும் கூறி, இந்த திட்டத்தை மின் வாரிய ஊழியர்கள் சங்கங்கள் எதிர்த்துவந்தன. வரும் காலத்தில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால், அது உதய் மின் திட்டத்தின் தாக்கமாகவே இருக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. தற்போதுவரை, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறையே வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 8 பிப் 2018