மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சிறையில் இருந்தே கட்சியை நடத்தும் லாலு

சிறையில் இருந்தே கட்சியை நடத்தும் லாலு

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தவாறே தனது கட்சியின் தேசிய நிர்வாகியைத் தேர்ந்தெடுத்துள்ளார். நேற்று (பிப்ரவரி 7) நிர்வாகிகள் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்ஜேடி கட்சி, இவர்களை லாலு நியமனம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1991-96 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக இருந்தவர் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி நிறுவனரும் தலைவருமான லாலு பிரசாத் யாதவ். இவர், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். பீகார் மாநிலத்தில் 90களில் நடந்த மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக, இவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்குகளில், லாலு குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது சிபிஐ நீதிமன்றம். தற்போது, இவர் ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஆர்ஜேடி கட்சியின் தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எஸ்எம் கமர் ஆலம். பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, இக்கட்சியின் தேசிய நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஆர்ஜேடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துவருகிறார். ஜெத்மலானி தவிர, லாலுவின் மகன்கள் தேஜ்பிரதாப், தேஜஸ்வி, மகள் மிசா பாரதி ஆகியோரும் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது திஹார் சிறையில் இருந்துவரும் ஆர்ஜேடி கட்சியின் முன்னாள் எம்பி சகாபுதீன், புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, அவரது மனைவி ஹீனா சாஹேப்புக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனை விமர்சித்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர், “இந்திய ஜனநாயக வரலாற்றில் முதன்முறையாக, ஒரு கட்சியின் நிர்வாகியை அதன் தலைவர் சிறையில் இருந்தவாறே நியமித்திருக்கிறார்” என்று கூறியுள்ளனர். இதேபோல, பாலியல் வல்லுறவு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஜ்பல்லப் யாதவையும் இந்த வரிசையில் சேர்த்திருக்கலாம். என்று விமர்சிக்கின்றனர்.

“புலனாய்வு அமைப்புகள் சகாபுதீன், ராஜ்பல்லப் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியபோது, அவர்களை வாழ்த்திப் பாடிக்கொண்டிருந்தார் லாலு. இப்போது தனது கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மகன்கள் மற்றும் மகளது கட்சிப் பொறுப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இவர்களை ஓரம்கட்டியிருக்கிறார்” என்று கூறியுள்ளார் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த நீரஜ்குமார்.

சிறையில் இருந்தவாறே கட்சியின் நிர்வாகிகளை லாலு அறிவித்திருப்பது, தற்போது பீகார் அரசியலில் பலமாக விமர்சிக்கப்படுகிறது. லாலுவின் கட்சித் தலைவர் பதவி, வரும் 2020ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018